Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மூவ் யுவர் பாடி...‘ பாடுகிறார் இளையராஜா!

''அப்பா  நடிக்கிற 'லிங்கா’ கதை எனக்குத் தெரியுமே! செம சுவாரஸ்யமான கதை. நீங்க எதிர்பார்க்கவே முடியாத  விஷயங்கள் இருக்கும். ஆனா, அதுபத்தி என்கிட்ட ஒரு வார்த்தைகூட நீங்க வாங்க முடியாது!'' - பேட்டிக்கு என அமர்ந்தது முதல், விடைபெறும் வரை விதவிதமாகக் கேட்டும்... ம்ஹூம்... செம ஷார்ப் ஐஸ்வர்யா தனுஷ். அனிருத் அறிமுகம், 'கொலவெறி’ ஹிட், ரசனை சினிமா என '3’ படத்தில் 'லைக்ஸ்’ குவித்தவர், இப்போது 'வை ராஜா வை’ என்று அடுத்த ஆட்டத்துக்கு அழைக்கிறார்.

'' டிரெய்லர்ல கேம்ப்ளிங் பட சாயல் இருக்கே!''

''உங்களுக்கு அப்படித் தோணியிருந்தா, எங்க வேலையைச் சரியா பண்ணியிருக்கோம்னு அர்த்தம். என் முதல் படம் '3’-க்கும் ரெண்டாவது படத்துக்கும் கண்டிப்பா துளி சம்பந்தம்கூட இருக்கக் கூடாதுனு தெளிவா இருந்தேன். சாதாரண ஒரு பையன். அவன் வாழ்க்கையில ஒருத்தர் வர்றார். அந்தப் பையன் வாழ்க்கையே தலைகீழா மாறுது. 'இதெல்லாம் எனக்குத் தேவையா? நான் இவ்வளவுக்குத் தகுதியானவனா?’னு யோசிக்கும்போது அவன் என்ன முடிவு எடுக்கிறான்... அதான் கதை!''

''அனிருத் உங்க படத்தில்தான் அறிமுகமானார். 'கொலவெறி’ சென்சேஷன் ஆச்சு. ஆனா, ரெண்டாவது படத்துக்கு அவர் மியூசிக் இல்லையே. ஏன்?''  

''அந்த எதிர்பார்ப்புதான் காரணம். அதைச் சமாளிக்க முடியும்னு தோணலை. அதான் யுவன்கிட்ட மியூசிக் கொடுத்துட்டேன். யுவன் எனக்குச் சின்ன வயசுல இருந்தே நல்ல அறிமுகம். ஒரு பாட்டு மியூசிக்கலாவும் விஷ§வலாவும் நல்லா இருக்கணும்னு படத்தோட இயக்குநரைவிட ஆர்வமா இருப்பார். மொத்தம் அஞ்சு பாட்டு. நாலு பாடல்களை மதன்கார்க்கி, ஒரு பாட்டை தனுஷ் எழுதியிருக்காங்க. தனுஷ் எழுதின பாட்டை இளையராஜா அங்கிள் பாடியிருக்கார். 'மூவ் யுவர் பாடி’... இதான் அந்தப் பாட்டின் தலைப்பு!''

''தனுஷ் இந்தியில் பிஸி. நீங்க டைரக்ஷன்ல பரபரப்பா இருக்கீங்க. வீட்லயும் சினிமாதான் பேசிப்பீங்களா?''

'' 'உன்னால முடியும். படம் பண்ணு’னு சொல்லி என்னை சினிமாவில் இறக்கிவிட்டதே அவர்தானே. எல்லாமேதான் ஷேர் பண்ணிப்போம். அதுல சினிமா கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். எனக்கு இந்தி தெரியும். ஆனா, இப்பத்தான் அவர் இந்தி கத்துட்டு இருக்கார்!''

''உங்ககிட்ட இந்தி கத்துக்கிறாரா?''  

(ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்து) ''என்கிட்ட என் பசங்களே ஹோம்வொர்க் கத்துக்க மாட்டேங்கிறாங்க. இதுல அவர் எப்படிக் கத்துக்க முடியும்.  வெளியேதான் கத்துக்கிறார். எங்க வீட்டு சமையல்காரர் வட இந்தியர்.  முன்னாடி அவர்கூட தனுஷ் பேச மாட்டார். நான்தான் ரெண்டு பேருக்கும் மொழிபெயர்த்துட்டு இருப்பேன். ஆனா, இப்போ எதுவா இருந்தாலும் அவரே பேசிக்கிறார்!''

''இப்படி ரெண்டு பேரும் பரபரப்பா இருந்தா, பசங்களை யார் கவனிச்சுக்கிறது?''

''அம்மா ஒரே ஊர்ல இருக்கிறது எனக்கு வசதியா இருக்கு. அம்மாகிட்ட கொண்டுபோய் விட்டுட்டு, 'பார்த்துக்கம்மா, நான் ஷூட்டிங் போறேன்’னு சொல்லிட்டு ஓடிருவேன். நம்மளைவிட நல்லா பார்த்துப்பாங்கனு நிம்மதியா இருக்கும். பெரிய பையன் யாத்ராவுக்கு எட்டு வயசு, சின்னவன் லிங்காவுக்கு நாலு வயசு. சின்னவனுக்கு சோட்டா பீம் பிடிக்கும். பெரியவனுக்கு டபிள்யூ டபிள்யூ எஃப் பார்க்குறதுல அவ்ளோ ஆர்வம். ரெண்டு பேருமே குதிரையேற்றம் கத்துக்கிறாங்க. ரெண்டு பேருமே தாத்தாவுக்கு அவ்ளோ செல்லம். அவங்கதான் அவரோட நண்பர்கள். மூணு பேரும் என்னென்னவோ கதை பேசிட்டு இருப்பாங்க!''

''தங்கச்சி சௌந்தர்யா இயக்கின 'கோச்சடையான்’ பார்த்தீங்களா? உங்க ஃபீல் என்ன?''

''படம் பார்த்ததும் அப்பாவோட ரசிகையா ரொம்ப சந்தோஷப்பட்டேன். அவர் என்னவெல்லாம் சாகசம் பண்ணணும்னு ஆசைப்பட்டோமோ, என்னவெல்லாம் வசனம் பேசணும்னு நினைச்சோமோ... அது எல்லாமே அந்தப் படத்துல இருந்துச்சு. புதுசா ஒரு விஷயம் முயற்சி பண்றப்ப, எல்லாமே கச்சிதமா இருக்கும்னு சொல்ல முடியாது. படத்தில் சின்னச் சின்னக் குறைகள் இருக்கலாம். ஆனா, நாளைக்குத் தமிழ் சினிமாவில் அனிமேஷன்னு யார் யோசிச்சாலும் 'கோச்சடையான்’ தான்  முதல் ரெஃப்ரன்ஸ். அந்தப் பெருமை சௌந்தர்யாவுக்கு எப்பவும் இருக்கும்!''

''அடுத்து என்ன மாதிரி படம் எடுக்கலாம்னு சௌந்தர்யாகிட்ட பேசியிருக்கீங்களா?''

''படம்லாம் இருக்கட்டும். சினிமாவுக்கு ஒரு வருஷம் லீவ் விட்டுட்டு கணவரோட ஜாலி ட்ரிப் போயிட்டு, ஒரு குழந்தை பெத்துக்கச் சொல்வேன். ஒரு அக்காவா அவங்களுக்கு இதான் என் அட்வைஸ்!''

- ம.கா.செந்தில்குமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close