Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“மணி சார்கிட்ட திட்டு வாங்கணும்!”

''அம்மா மட்டுமே வளர்த்த ஒரு பையன்... அப்பா மட்டுமே வளர்த்த ஒரு பொண்ணு. இவங்களுக்கு கல்யாணம் ஆகுது. பொதுவா நம்மாளுங்க மாமனாருக்கு செம லந்து குடுப்போம்ல... 'என்ன உங்கப்பன் சாப்ட்டானா? மென்னு திங்க சிரமமா இருக்கும்... கறியை மிக்ஸில அடிச்சுவெச்சிருக்கலாம்ல!’,  'வருஷத்துக்கு ஒரு தடவைதானே குளிப்பாங்க உங்க பரம்பரைல!’ அப்படி இப்படினு கட்டையைக் குடுப்போம். பொண்ணுங்களும் அதைப் பொய்க் கோபத்தோடு ரசிப்பாங்க. அப்படிப் பேசிட்டு இருக்கும்போது மாமனாரே வந்து நின்னார்னா, எப்படி இருக்கும்? தர்மசங்கடமும் அசட்டுச் சிரிப்புமா... நம்ம முகம் களைகட்டும்ல. இப்படி எனக்கும் ராஜ்கிரண் சாருக்கும் படம் முழுக்க ரண்டக்க ரண்டக்கதான்!'' - முகம்கொள்ளா மீசையும் அகலக் கிருதாவுமாக கைகளில் ஆட்டுக் கிடாக்களைப் பிடித்தபடி 'கொம்பன்’ லுக்கில் சிரிக்கிறார் கார்த்தி... ''எப்படி சார் இருக்கு, 'காளி’ டு 'கொம்பன்’ சேஞ்ச் ஓவர்?''  

'' 'நார்த் மெட்ராஸ்’ல இருந்து சட்டுனு சவுத் தமிழ்நாடு தாவிட்டீங்க... ஏரியாவாரியா அடிக்கணும்னு திட்டமா?''

''தானா அமைஞ்சதுங்க. 'மெட்ராஸ்’ யங் டீம். அவங்ககிட்ட இருந்து கத்துக்கலாம்னு போனேன். எதிர்பார்த்ததைவிட ஏக வரவேற்பு. 'நாங்க உங்களை காளியாதான் பார்த்தோம், கார்த்தி கண்ணுக்கே தெரியலை’னு சொல்லிட்டே இருக்காங்க. அது எனக்குனு எழுதுன கதை இல்லை. அதில் என்னைத் திணிச்சுக்கிட்டேன். பரிசோதனை முயற்சிதான். ஆனா, மெரிட்ல பாஸ் ஆகிட்டேன். 'கொம்பன்’ என்னை மனசுல வெச்சு எழுதின கதை. ஆட்டு வியாபாரி கொம்பையா பாண்டியனுக்கு பெத்த அம்மா எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவு ஊரும் முக்கியம். ஊருக்குள்ள விசேஷமோ, பஞ்சாயத்தோ... முதல் குரல் கொம்பனோடதுதான். ஊருக்கு ஒரு புள்ளை; ஊருக்கான புள்ளை. அப்படி ஒரு கதை!''

'' 'பருத்திவீரனுக்கு’ப் பிறகு நீங்க பண்ற கிராமத்து சப்ஜெக்ட் இதுதான்ல!''

''ஆமா! உடனே கிராமத்துக் கதை பண்ண வேண்டாம்னு ஆரம்பத்தில் தள்ளிப்போட்டேன். இப்ப அதுக்குத் தோதா, 'கொம்பன்’ கிடைச்சிருக்கான். 'குட்டிப் புலி’ பண்ண முத்தையாதான் 'கொம்பன்’ இயக்குநர். அவர் ஸ்கிரிப்ட் சொன்னப்பவே ராமநாதபுரத்துக்கும் மதுரைக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்குதானு ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா,  சென்னையில்  இருந்து பார்த்தா, தென் தமிழ்நாடு முழுக்க மதுரை மாதிரிதான் தெரியும் நமக்கு. ஆனா, கலாசாரம், வட்டார வழக்குனு மதுரைக்கும் ராமநாதபுரத்துக்கும் ஊருபட்ட வித்தியாசங்கள். முக்கியமா படத்தில் ரொம்ப நல்லவனா நடிக்க வேண்டிய கேரக்டர். சரக்கு, சைட்டிஷ்னே நடிச்சுட்டு இருந்துட்டேன். ஆனா, இந்தப் படத்தில் அப்படி எந்த நெகட்டிவ் ஷேடும் இருக்காது!''

''சாதி பெருமைகள் பேசுற படமோ?''

''கிராமம், குடும்பம், உறவுகளுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைனு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். நிறைய அன்போடு கொஞ்சம் அந்நியமா இருக்கிற மாமனார் - மருமகன் உறவுதான் மெயின் கதை. பொதுவா மாமனார் - மருமகன் இடையிலான பாச நேசம் தமிழ் சினிமாவில் பெருசா பேசப்பட்டது இல்லை. இத்தனைக்கும் அவங்க ரொம்பப் பாசமா இருப்பாங்க. ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் அவங்களுக்குள் இருக்கும். அந்த அன்பையும் மரியாதையையும் ரொம்ப இயல்பா கொண்டுவந்திருக்கோம். சிலர்கிட்ட நல்ல கதை இருக்கும். ஆனா, அதை அவங்க எப்படி எடுப்பாங்கனு நமக்குப் பயமா இருக்கும். முத்தையாகிட்ட நல்ல கதைகளும் இருக்கு, அதை அச்சு அசலா அப்படியே பிரசன்ட் பண்றார். அதுதான் இந்த சப்ஜெக்ட்டின் பலம்!''

''ராஜ்கிரண் செம டஃப் மாஸ்டராச்சே... அவரைத் தாண்டி ஸ்கோர் பண்ண முடியுமா?''

''அவரே ஸ்கோர் பண்ணட்டுமே! நான்லாம் 'என் ராசாவின் மனசிலே’ பார்த்துட்டு ராஜ்கிரண் நேரிலும் அப்படித்தான் இருப்பார்னு மிரண்டுட்டு இருந்தவன். இப்போ அவரே ஸ்பாட்ல என்னைப் பார்த்து, 'உங்களுக்கு இந்தக் கிராமத்து கேரக்டர்லாம் நல்லா பொருந்துது தம்பி’னு சொல்றார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்னு ஒரு சினிமாவின் மொத்த டிராவலையும் புரிஞ்சு வெச்சிருக்கிறவர்கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள்... அவ்ளோ சந்தோஷம் கொடுத்துச்சு!''

''ஸ்கூல் பொண்ணு லட்சுமி மேனன் தோளில் பெரிய பொறுப்பை ஏத்திவெச்சுட்டீங்களே!''

''அட, அந்த விஷயம் எனக்குத் தெரியாதுங்க. 'ஷூட் ஒரு வாரம் தள்ளிப்போகுது. லட்சுமி மேனன் டேட் கிடைக்கலை’னு சொன்னாங்க. 'என்னாச்சு?’னு கேட்டேன். 'அவங்களுக்கு ஸ்கூல் எக்ஸாம் இருக்காம். முடிச்சதும் வர்றேன்னு சொல்றாங்க’னு சொன்னாங்க. 'அநியாயமா இருக்கே?’னு அதிர்ச்சியாகிருச்சு. அவங்க ஸ்கூல் படிக்கிறது ஒரு ஆச்சர்யம். ஸ்கூல் படிக்கிறப்ப நான்லாம் எல்லாத்தையும் விளையாட்டா பண்ணிட்டு இருப்பேன். ஆனா, லட்சுமிக்கு  இந்த வயசுலயே இவ்வளவு மெச்சூரிட்டியானு ரெண்டாவது ஆச்சர்யம். படத்தில் அவங்க கேரக்டர் பேர் பழநி. 'இந்த இடத்தில் ஒரு பார்வை பாத்தாலே போதும்’னு சொன்னா, கரெக்டா புரிஞ்சிக்கிட்டு செம ஷார்ப்பா பண்ணிடுறாங்க. அவங்க இடத்தில் வேற யார் நடிச்சிருந்தாலும் 'இது சினிமா’னு ஞாபகம் வந்திருக்குமோனு தோணுது. அவ்வளவு நல்லா பெர்ஃபார்ம் பண்ணியிருக்காங்க!''

''இன்னும் எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆசை?''

''என் குரு மணிரத்னம் சார் படத்தில்தான்! அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கேன். அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தப்ப கிளாப் அடிக்கும்போது திட்டு வாங்கியிருக்கேன். நடிக்கும்போதும் திட்டு வாங்க வேணாமா? சார் ஃப்ரீயா இருக்கிறப்ப போய்ப் பார்த்து பொதுவா பேசிட்டு வருவேன். 'முதல் படத்தில் பண்ண மாதிரி நீ இன்னொரு படம் பண்ணணும்டா’னு அடிக்கடி சொல்வார். ' 'மெட்ராஸ்’ நல்ல ரெவ்யூஸ் வந்துட்டு இருக்கு. நான் படம் பாத்துட்டுக் கூப்பிடுறேன்’னு மெசேஜ் பண்ணார்!''

''ஜோதிகா திரும்ப சினிமா ரீ என்ட்ரி கொடுக்கிறாங்களே... ஏதாவது ஷேர் பண்ணாங்களா?''

''மோஸ்ட் வெல்கம் அண்ணி! 'நல்ல கேரக்டர். நீ  'ஹவ் ஓல்டு ஆர் யூ?’ ஒரிஜினல் வெர்ஷன் பாக்காதே. நான் நடிச்சதை முதலில் பாரு’னு சொன்னாங்க. ஆனா, திரும்ப நடிச்சே ஆகணும்னு அவங்களுக்கு ஆர்வம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். 'ஹோம் மேக்கர்’ பெண்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுக்கிற அந்த கேரக்டர் அவங்களை இம்ப்ரஸ் பண்ணியிருக்கு. அது பலருக்கு உத்வேகமா இருக்கும். தமக்கும் ரீ என்ட்ரியில் முக்கியமான படமா இருக்கும்னு நினைக்கிறாங்க. அதுதான் உண்மை. இப்பவும் சார்ட் பேப்பர், புராஜெக்ட்னு குழந்தைங்க பின்னாடி ஓடிட்டு இருக்காங்க. அதனால், தொடர்ந்து நடிப்பாங்களானு தெரியலை!''

- ம.கா.செந்தில்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close