Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை.. தோக்குறதும் இல்லை!’’- ரகுவரன் நினைவுநாள் பகிர்வு

2008 ஆம் ஆண்டு இதே மார்ச் 19 ஆம் நாள் தமிழ்த்திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மறைந்தார் காலத்தால் மறக்க முடியாக் கலைஞர் ரகுவரன். அவருடைய நினைவாக  அவர் கொடுத்த பேட்டி ஒன்றைப் பகிர்கிறோம்..

ஆனந்தவிகடன் 21-02-2007 புத்தகத்திலிருந்து......

நா ன் சென்னைக்கு வந்த புதுசு. வடபழனியில ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக நிக்கிறேன். உடம்பு நடுக்கத்தோடு, சரியா கண்ணும் தெரியாத கிழவி, ‘ரோட்டைத் தாண்டி விட்ருப்பா’னு கையைப் பிடிக்குது. ரோட்டைத் தாண்டி விட்டுட்டுத் திரும்பி நடக்கும்போது, ‘யப்பா... பத்திரமா போப்பா’ன்னு சொல்லுது. எனக்குக் கோபம். ‘இதுவே இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்குற கேஸ். இது நம்மளை பத்திரமா போகச் சொல்லி அட்வைஸ் பண்ணுதே’ன்னு ஒரு சின்ன எரிச்சல். இப்ப அந்த நினைப்பு ஏனோ வருது. அன்னிக்கு அது ‘பத்திரமா போன்னு சொன்னது ரோட்ல இல்லை’னு இப்போ புரியுது. அனுபவஸ்தனோட ஒவ்வொரு வார்த்தைக்குள்ளேயும் ஒரு பூங்கொத்து இருக்கு... ஒரு கத்தி இருக்கு! எல்லாம் லேட்டாதான் புரியுது!’’ - சிகரெட் புகை வளையங்களுக்கு நடுவே புன்னகைக்கிறார் ரகுவரன். சினிமாவில் தொலைந்து போவதும், திரும்ப வருவதும் அவரே நடத்துகிற விருப்ப விளையாட்டு. ஆனால், தமிழ் சினிமா எப்போதும் தேடுகிற நிஜக் கலைஞன்.

‘‘எதுவோ என்னைப் பிடிச்சுக் கட்டி வைக்குது. அப்புறம் அதுவே என்னை அவிழ்த்தும் விடுது. ஒவ்வொ ருத்தனுக்கும் அவன்தான் பெரிய ரகசியம். காலையில கழுவிவிட்ட மாதிரி இருக்குற மனசு சாயங்காலமே சாக்கடை மாதிரி ஆயிடுது. நிரந்தரம்னு எதை நினைக்கிறீங்க நீங்க? மனசு சொல்றதை புத்தி கேட்கும்போதெல்லாம் நான் தொலைஞ்சு போயிருக்கேன். புத்தி சொல்றதை மனசு கேட்கும்போதெல்லாம் திரும்பி வந்திருக்கேன். இங்கே புத்திக்கும் மனசுக்கும்தான் போட்டி. மத்தபடி ரகுவரன் ஜெயிக்கிறதும் இல்லை... தோக்குறதும் இல்லை!’’ - ஒரு ஞானி போலச் சிரிக்கிறார் ரகுவரன்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘தீபாவளி’, ‘பீமா’, ‘சிவாஜி’ என மனிதர் மறுபடி பரபரப்பாக இருக்கிறார்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. திரும்பவும் வரிசையா படம் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே?’’

‘‘நடிப்பு எனக்கு அலுக்கவே இல்லை. தெருத் தெருவா அலைஞ்சாலும் திரும்ப நிலைக்கு வர்ற தேர் மாதிரி, எங்கே போனாலும் சினிமாவுல தான் வந்து நிக்குறேன். எப்பவும் யாராவது போன் பண்ணிட்டே இருக்காங்க. ‘இந்த ரோலை நீங்கதான் சார் பண்ணணும்’னு சொல்லாம கொள்ளாம வீட்ல வந்து நிப்பாங்க. நான் வேணாம் வேணாம்னு ஓடுற தும், அவங்க விடாம துரத்துறதுமான இந்த விளையாட்டு பத்து வருஷமா நடந்துட்டு இருக்கு. ‘பார்த்தியா, எனக்கு எவ்ளோ தேடுதல் இருக்கு’னு பெருமையில, திமிர்ல இதைச் சொல் லலை. கலை ஒரு கட்டம் வரைக்கும்தான் அடையாளம். அப்புறம் அதுவே அனுபவமா மாறிடுது. அந்தச் சமயத்துல கேரக்டர்களை யோசிச்சு தேர்ந்தெடுப்போம். லவ்வர் மாதிரி, பெண்டாட்டி மாதிரி கேரக்டர் மேல ஒரு பிரியமே வந்துடும்.

அபூர்வமா சில பேர் கதை சொல்லும் போது, ‘அட, ஆமாம்ல... நாமதான் இதைப் பண்ணணும்’னு மனசு அதுவாவே விழுந்துடும். அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். அப்படி ஒரு அனுபவம்தான் ‘பீமா’. ‘ரன்’ல நான் பார்த்த லிங்குசாமி இப்ப இல்லை. வேற மாதிரி வளர்ந்து நிக்கிறார். படத்துல என் கேரக்டர் பேரே ‘பெரியவர்’. அந்தப் பெரியவருக்கு சரியான சவால் விடுறார் விக்ரம். இவரும் நான் ‘உல்லாச’த்தில் பார்த்த விக்ரம் இல்லை. விக்ரமுக்குள்ளே இருக்குற நெருப்பு இன்னும் பெரிய உயரத்துக்கு அவரைக் கொண்டுபோகும். அப்புறம் ‘சிவாஜி’...’’

‘‘ ஆமா... ரஜினிக்கும் உங்களுக்கும் ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. இப்ப ‘சிவாஜி’அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘ரஜினி ரொம்ப அபூர்வம். பணம், புகழ், அதிகாரம் அதெல்லாம் இல்லை விஷயம்... எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துட்டே வர்றேன். அதான் நான் தேடுறதும்! நீங்க உங்களுக்கே நேர்மையா இருக்கிறது இருக்கே, அது பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச் சவர்.

ரொம்பப் பரபரப்பா தளும்பி நின்ன ரஜினியையும் நான் பார்த்திருக்கேன். இப்போ ‘சிவாஜி’யில் நான் சந்திச்சது இன்னும் பக்குவமான ரஜினி. ஆழ்கடல் மாதிரி அமைதியான ரஜினி. தெளிவா... தீர்க்கமா மாறியிருக் கார். அவர்கிட்டே மாறாத விஷயம் நடிப்பு மேல இருக்குற துடிப்பு. ‘ரகுதான் இதைப் பண்ணணும்’னு ‘சிவாஜி’க்கு அவர்தான் என்னைக் கூப்பிட்டார். ஷங்கர் நுணுக்கமா செதுக் குறார். படம் ரொம்பப் பிரமாண் டமா வரும். படத்தைப் பத்தி இன்னும் பேசணும்னா ரஜினியோ ஷங்கரோ தான் பேசணும். எனக்கு இவ்வளவுதான் அனுமதி’’ என்று புன்னகைக்கிறார் ரகுவரன்.

‘‘நடிப்பு தவிர, ரஜினியையும் என்னையும் இணைக்கிற பாலம் ஆன்மிகம். கடவுள், தியானம், வாழ்க் கையைப் பற்றிய அவரோட பார்வை என்னை ஆச்சரியப்படுத்துது. எனக்கும் அவருக்கும் இடையில் புரிபடாத ஒரு அலைவரிசை இருந்துட்டேயிருக்கு. ரஜினியும் நானும் ஃபீல்டுக்கு வந்து 25 வருஷமாகுது. இந்த வாழ்க்கையில நான் நிறைய தவறவிட்டிருக்கேன். ஆனா, எதையும் தவறவிடாம உழைக்கிறதுதான் ரஜினியோட சீக்ரெட். அவரை வீழ்த்த வேறு ஆளே இல்லை. அவ ராகவே ரிட்டையர் ஆனாதான் உண்டு. அதுவரைக்கும் அவர்தான் மாஸ்... அவர்தான் பாஸ்!’’

‘‘சரி, உங்க பர்சனல் லைஃப் எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘‘அன்னிக்கு ஒரு நாள் ராத்திரி காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் போயிருந் தேன். வாசல்ல ஒரு வயசான கிழவர் அழுக்கா படுத்திருக்கார். திடீர்னு முழிச்சு ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித் திட்டுறார். கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ள உட்கார்ந்திருக்கு. பார்த்துட்டு, ‘தெரி யாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப் படுத்துட்டாங்க. பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைச்சுப் பார்த்தா, அதே மனசு பெரிய துயரமா கனக்குது. அடுத்த ஜென்மத்துல அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்குது.

இன்னொரு நாள் சிக்னல்ல, கார்ல காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ நெனப்புல சட்டுனு குழந்தை கையைத் தட்டிட்டு வந்திட் டேன். ஏன்னு தெரி யலை... திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்துட் டிருந்தது. மறுபடி காரெடுத்துப் போய்த் தேடினேன். அந்தக் குழந்தை யைக் காணோம். உடனே என் மகன் ரிஷிக்கு போன் பண்ணி, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச் சொல்றேன்.

இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக்குள்ளேயும் என்னைத் தேடுறேன். தனிமையில் மத்தவங்களைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது. தனிமை சிலரை கெட்டவங்களா மாத்திடும். ஆனா, என்னை அழகா செதுக்கி வெச்சிருக்கு. துக்கத்தைத் தூக்கி உதற பழகிட்டேன். என் உலகத்தைச் சந்தோஷமா மாத்திக்கிற வித்தையைக் கத்துக்கிட்டேன். என் அப்பாவையும் அம்மாவையும் நினைச்சு பொசுக்குனு கண்ணீர் உடையுது. எவ்ளோ வருஷம் என்னை மாதிரி ஒரு ஆளை நெஞ்சில் சுமந்திருக் காங்க. இப்ப அவங்க கூடவே இருக் கேன். அப்புறம் என் பையன் ரிஷி. எப்பவும் எனக்கு அவன் ஞாபகம் தான். என் உலகத்தை அற்புதமாக்கு றான் ரிஷி. அப்புறம், இருக்கவே இருக் கார் என்னை அன்பால் ஆசீர்வதிச் சுட்டே வருகிற சாய்பாபா.’’

‘‘ஆமா... ஒரு மியூஸிக் ஆல்பம் பண்றீங்கள்ல..?’’

‘‘இசை எப்பவும் என்னை புதுசாக் கிட்டே இருக்கு. ‘காரணம் இன்றிக் கண்ணீர் வரும், உன் கருணை விழிகள் கண்டால்..’னு ரமண மாலை பாட்டைக் கேட்டால் இப்பவும் அழுகை வருது. உலகத்தின் மேல் அளவில்லாக் காதல் வருது. உலகத்தின் மீதான என் அன்பை வெளிப் படுத்துற மாதிரி நானே பாட்டெழுதி இசை அமைச்சு, ஆல்பம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம் ஒரு புத்தகம் எழுதிட்டு இருக்கேன். நான் உணர்ந்த விஷயங்களை, அனுபவிச்சு சொல்லிட்டுப் போகிற முயற்சி அது. சீக்கிரம் அதுவும் வெளிவரும்!’’ என்கிற ரகுவரன் கை குலுக்கிப் புன்னகைத்துச் சொல்கிறார்...

‘‘பார்த்து பத்திரமா போங்க!’’

 
 
நா.கதிர்வேலன் 
படங்கள்: கே.ராஜசேகரன்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close