Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"யாராக இருந்தாலும் போட்டியில் சேர்த்துக் கொள்வோம்" ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ப்ரோகிராம் ஹெட் : பிரதீப் மில்ராய் பீட்டர் பேட்டி

''ஏர்டெல் சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்!' என்ற ஒரு நிகழ்ச்சியை கடந்த பத்து ஆண்டுகளாக நடத்திவருகிறது விஜய்டிவி. இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாத தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! அந்தளவுக்கு தமிழக மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி இது. சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் 'சீஸன் - 5'ல் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இவர், 'நீர்ப்பறவை', 'ஆரோகணம்', 'அன்ன்னையும் ரசூலும்', 'மதயானைக்கூட்டம்', 'பத்து எண்றதுக்குள்ள' என பல்வேறு திரைப்படங்களில் பாடல்களைப் பாடியவர் என்பதுதான், இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சை! நிகழ்ச்சியின் சர்ச்சைகள் குறித்து, 'சூப்பர் சிங்கர் - 5' நிகழ்ச்சியின் தலைவர் (புரோகிராம் ஹெட்) பிரதீப் மில்ராய் பீட்டரிடம் பேசினேன்.

''அரவிந்தாக்‌ஷன் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை?"


எங்களுக்குப் போட்டியாளர்களின் பின்புலத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை. எங்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின், பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று பாடியிருக்கிறார் என்றால்... அதுதான் எங்கள் நிகழ்ச்சிக்கான வெற்றி. தவிர, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே அரவிந்தாக்‌ஷன் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை!

''இப்படி மறைப்பதால், உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்க்கும் மக்களையும், அவர்களின் நம்பிக்கையும் ஏமாற்றுவதாக இருக்காதா?"

கண்டிப்பாக இருக்காது. இதற்குமுன் அவர்கள் செய்த சாதனைகளைப் பற்றியோ அல்லது மற்ற ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றதைப் பற்றியோ நாங்கள் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை! ஆனந்த் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் தெரியும். தவிர, ஆனந்த் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்பதைச் சொன்னால், மக்களின் ஓட்டும் அபிப்ராயமும் அவருக்கே கூடுதலாக இருக்கும். அதற்கு நாங்களே வழிவகை செய்ததாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் பற்றிய பின்புலத்தைச் சொல்லவில்லை.

'' 'சூப்பர் சிங்கர்' என்றாலே, தமிழகத்தின் புதிய திறமைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகத்தான் மக்களால் பார்க்கப்படுக்கிறது. இதில் ஒரு பிண்ணனிப் பாடகரை கலந்துகொள்ளச்செய்வது நிகழ்ச்சியின் அடிப்படையே ஆட்டம் காணுமே?"

முதலில், நாங்கள் புதிய திறமைகளைத்தான் வெளிக்கொண்டுவருகிறோம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே! 'தமிழகத்தின் பிரம்மாண்டக்குரல்' என்றுதான் சொல்கிறோம். தவிர, புதிய திறமைகளோடு இங்கே யாரும் வரமாட்டார்கள். யாருக்கு எங்களுடைய 'சூப்பர் சிங்கர்' பட்டம் பெரிதாகப் படுகிறதோ, அவர்கள்தான் வருவார்கள்.

''அடுத்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகர்கள் பங்கேற்க விரும்பினால்?"

எங்கள் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' டைட்டிலைப் பெரிதாகக் கருதி, யார்வந்தாலும், அவர் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் டைட்டிலைத் தவிர இதற்கு முன் எந்த 'டைட்டிலை' வென்றவாரக இருந்தாலும், அவர்களைப் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்! அது எஸ்.பி.பாலசுப்ரமணியமாக இருந்தாலும் சரி... ஸ்ரேயா கோஷலாக இருந்தாலும் சரி!

''அப்படியென்றால், ஏற்கெனவே மக்களுக்குத் தெரிந்த பாடகர்களைத்தானே நீங்கள் முன்னிலைப்படுத்துவதாக அமையும்?"

நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எங்களை மதித்து, போட்டியில் கலந்துகொள்பவரை நாங்கள் சேர்த்துக்கொள்வோம். அவ்வளவுதான்! ஒரு பாடகர், தான் ஏற்கெனவே சில படங்களுக்குப் பிண்ணனி பாடிவிட்டு மீண்டும் என் நிகழ்ச்சிக்கு வந்து 'சூப்பர் சிங்கர்' டைட்டிலுக்காக மல்லுக்கட்டுகிறார் என்றால், எங்களுக்குப் பெருமைதானே? அப்படி வருகிறவர்களை நாங்கள் ஏன் தடுக்கவேண்டும்?

''இந்த சீஸனில் வெற்றி பெற்றவர்கள்கூட அடுத்த சீஸனில் பங்கேற்கலாமா?"

ஒரு சீஸனில் டைட்டில் வென்றவர்கள் மட்டும் மீண்டும் பங்கேற்க முடியாது. மற்றபடி, யார்வேண்டுமானாலும், எத்தனை முறைவேண்டுமானாலும் பங்கேற்கலாம்!

''உங்கள் நிகழ்ச்சியின் விதிகள்தான் என்ன?"

நாங்கள் கொடுக்கும் விண்ணப்பத்திலேயே, வயது வரம்பு தவிர மற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லி இருந்தோம். எனவே, எங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இன்றுவரை போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதிகளையும் மாற்றவில்லை. மக்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியலாம். எங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை!

- மு.சா.கெளதமன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close