Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எனக்கு நானே போட்டி!' - வாட்ஸப் வித் ஷ்ரவியா


“வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி” யில் பேயாக தமிழில் அறிமுகமாகி இன்று ‘பகிரி’ யில் பாவாடை தாவணி கட்டி தனது முட்டை கண்களால் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் இந்தமாத கோலிவுட் புதுவரவு ஷ்ராவியா. “விளையாட்டு ஆரம்பம்” என்ற தனது அடுத்த படத்தில் பிஸியாக இருந்தவரிடம் ஒரு சில கேள்விகள்.....  

உங்களை பற்றி?

நான் ஷ்ராவியா, பக்கா ஆந்திரா பொண்ணு. அம்மா, அப்பா, தங்கச்சி ன்னு ஹைதராபாத்’ல அழகான குடும்பம். பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சி முடிச்சிட்டு இப்போ சினிமா தான் வாழ்க்கை ன்னு வந்துட்டேன். நான் சின்ன வயசில குழந்தை நட்சத்திரமாக இரண்டு தெலுங்கு படங்கள் நடிச்சிருந்தேன். அதுக்க அப்புறம் இப்போது தான் கதாநாயகியாக நடிச்சிட்டு இருக்கேன்.

சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?

எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. சின்ன குழந்தையாக இருக்கும் போது “ஹெல்தி பேபி” போட்டியில் நான் தான் முதலாவதாக வந்தேன். அதுல பாத்துட்டு சில இயக்குனர்கள் கேட்டாங்க. ஆனா அப்போ படங்கள் எதுவும் நடிக்கல. நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது தான் இரண்டு படம் பண்ணினேன்.

குழந்தை நட்சத்திரம் டு ஹீரோயின்? எப்படி இருக்கு இந்த பயணம்?

இரண்டுமே வேற வேற. சின்ன பொண்ணாக இருக்கும் போது எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. ஜாலியாக போயிட்டு வருவேன். ஆனா இப்போ அப்படி இருக்க முடியாது. கதையில் எனக்கு முக்கியமான ரோல் இருக்கு. அதை நான நல்ல பண்ணனும். சரியாக பண்ணனும் ன்னு நிறைய பொறுப்பு இருக்கும். அதுக்காக நிறைய உழைக்கனும்.   

தமிழ் சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?

முதல்ல நான் தெலுங்கு படம் மட்டும் தான் பண்ணிட்டு இருந்தேன். தமிழ் சினிமா உலகம் ரொம்ப பெரிய உலகம். எனக்கு தமிழ் தெரியாது, அதுனால ஒரு தயக்கம் இருந்தது. என்னோட தெலுங்கு படம் பாத்துட்டு வெள்ளிகிழமை 13 ஆம் தேதி பட வாய்ப்பு வந்தது.  பேய் படம்ன்னு முதல்ல தயங்கினேன், அப்புறம் கதை கேட்டதும் எனக்கு ரொம்ப புடிச்சிது. அப்படி தான் தமிழ் சினிமா உள்ள வந்தேன். இப்போ தெலுங்கு படங்களை விட தமிழ்ல தான் அதிகமா படம் பண்றேன்.

இப்போ தமிழ் கத்துகிட்டீங்களா?

முதல் படம் பண்ணும் போது சுத்தமா தெரியாது. ஆனா இப்போ என்னால யாராவது தமிழ்ல பேசினா புரியும். ஸ்க்ரிப்ட் தமிழ்ல சொல்லும் போது புரியும். என்னைப் பாத்து முட்டைக்கண்ணி ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் நல்லாவே புரியும்.

படம் பாத்தவங்க என்ன சொன்னங்க?

முதல் படத்துல என்னோட நடிப்பு பத்தி பாராட்டினாங்க. பகிரி படம் பாத்துட்டு நான் பாவாடை தாவணியில் ரொம்ப நல்லா இருக்கேன் ன்னு சொன்னங்க. சந்தோஷமா இருந்தது. இரண்டு படம் பாத்தவங்களும் சொன்னது என் முட்டைக்கண்ணு பத்தி தான். பாதி ஸ்க்ரீன்ல உன் கண்ணு தான் தெரியுதுன்னு சொன்னங்க.

தமிழ் சினிமாவில் உங்க இலக்கு என்ன?

அப்படி இலக்கு எல்லாம் எதுவும் இல்லை. இப்போ தான் வந்திருக்கேன். நிறைய படங்கள் பண்ணனும். கடைசி படத்தை விட அடுத்து வரும் படத்தில இன்னும் கொஞ்சம் நல்லா நடிச்சா அது போதும்.

நீங்க ரொம்ப பிரமாதமாக டான்ஸ் ஆடுவீங்களாமே?

நான் குச்சுப்புடி, பரதநாட்டியம் முறைப்படி கத்துகிட்டேன். சினிமாவுக்குள்ள வரணும்ன்னு கத்துகல. ஆனா டான்ஸ் கத்துகிட்டதுனால சினிமாவுல நடிக்கிறதுக்கு ரொம்ப உதவியாக இருக்கு. நிறைய மேடைகளில் ஆடிருக்கேன். அதுனால பயம் இல்லாம சினிமாவுல நடிக்க முடிஞ்சிது.. முக பாவனைகள் எல்லாம் கொஞ்சம் ஈசியாக இருக்கு.

யாரு உங்களுக்கு போட்டி?

அப்படி எல்லாம் யாரும் இல்லை. ஏற்கனவே சொன்னது தான். கடைசி படத்தை விட அடுத்த படத்துல நல்ல நடிக்கணும். அவ்ளோ தான். அதுனால, அடுத்த படத்தில் நடிக்கும் ஷ்ராவியாவிக்கு கடைசி படத்தில் நடிச்ச ஷ்ராவியாதான் போட்டி.

தமிழ் சினிமாவில் பிடித்த ஹீரோ?

படத்துக்கு படம் மாறிகிட்டே இருக்கும். இதுவரைக்கும் ஒரு ஹீரோவுக்கு  ரசிகையாக இருந்ததே இல்லை. ஒரு ஹீரோ படம் பாக்கும் போது அவங்கள ரசிப்பேன். அடுத்து ஒரு நல்ல படம் பார்க்கும் போது அதுல வர்ற ஹீரோன்னு போய்கிட்டே இருக்கும்.

தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் எதிர்பாக்கலாமா?

கண்டிப்பா...  நிறைய தமிழ் படங்கள் பண்ணனும்.

கிளாமர் படங்கள் பண்ணுவீங்களா?

நோ. எனக்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் நிறைய பண்ணனும். கிளாமர் எனக்கு விருப்பம் இல்லை.

அம்மா, அப்பா என்ன சொல்றாங்க?

அம்மா, அப்பா ரெண்டு பேருமே ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. நான் சாதிக்கணும்ன்னு என்னைவிட அதிகமாக ஆசைப்படுறவங்க அவங்க தான். அம்மா என்கூடவே இருந்து சப்போர்ட் பண்ணறாங்க.

ஆல் தி பெஸ்ட் ஷ்ராவியா!

- எஸ்.கே  பிரேம் குமார்
படங்கள்: கிரண் குமார்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close