Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அவர்கள் செய்வதெல்லாம் சரியா?' -'சொல்வதெல்லாம் உண்மை' குறித்து நிர்மலா பெரியசாமி

நிர்மலா பெரியசாமி

'வணக்க்க்க்க்க்க்கம்'..- இந்த கணீர் குரலுக்குச் சொந்தக்காரர், நிர்மலா பெரியசாமி . செய்தி வாசிப்பாளர்,  பல தொலைக்காட்சி அரசியல் விவாதங்களிலும் பங்கெடுத்து வருகிறார். அதிமுக  மேடைகளிலும் பேசி வருகிறார். இப்படி பன்முகம் கொண்ட நிர்மலா  ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அதிகம் பிரபலமானவர். 400 எபிஸோடுகளுக்கும் மேல் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். பிறகு சில காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, அரசியலில் தீவிரமாக களம் இறங்கினார். தற்போது அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்து வரும் நிர்மலா பெரியசாமி , பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார். சென்னை, அடையாரில் உள்ள அவரது வீட்டில், ஒரு மதிய நேரத்தில் அவரைச் சந்தித்தோம். 

''இயல்பாகவே அதட்டும் தொனியில்தான் பேசுவீர்களா?''

''அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லை. நான் எப்போதும் சிரித்த முகத்தோடுதான் எல்லோரிடமும் பழகுவேன். மிகவும் தன்மையாக, பணிவாக நடந்துகொள்வேன். மிக மென்மையாகவே பேசுவேன். ஏற்றுக்கொள்ள முடியாத சில விஷயங்களுக்குதான் கோபப்படுவேன். இதுதான் என்னுடைய இயல்பு.''

''விவசாயக் குடும்பத்துப் பெண்ணா நீங்கள்?" 

''ஆம்! எனக்குச் சொந்த ஊர் கரூர். அங்கு என் அப்பா தட்சிணாமூர்த்தி 50 ஏக்கர் அளவில் வாழை, தென்னை, நெல் என்று காவிரி தண்ணீரில் விவசாயம் பார்த்தவர். எங்களுக்கு ஐந்து கிணறுகள் இருந்தன. நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது விடுதிகளில் தங்கிப் படித்தேன். விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது எல்லாம், எங்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. 

என் அப்பா,  எங்கள் ஊர் பள்ளிகள், அரசு கட்டடங்கள் என பலவற்றிற்கும் எங்கள் நிலங்களை இலவசமாகக் கொடுத்தார். பெரும்பாலான நிலங்கள் அப்படித்தான் எங்கள் கைவிட்டுப் போனது. அப்பா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். சிறந்த மார்க்சியவாதி, பொதுநலவாதி. அவர் ஒருபோதும் நான், எனது என்று பேசியதே இல்லை. நாம், நாடு, மக்கள் என்று தான் எப்போதும் பேசுவார், சிந்திப்பார். அவரிடம் இருந்துதான் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். பள்ளி, கல்லூரி நாட்களில் நான் கலந்துகொள்ளும் போட்டிகளுக்காக, அப்பாதான் நூலகத்தில் தலைப்புக்கேற்ற புத்தகங்களைத் தேடிக், குறிப்பு எடுத்துத் தருவார். 

அப்பாவுக்கு நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால், எனக்குத் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். 25 வருடங்களுக்கு மேல் ஆன பின்னும், அந்தத் துயரம் இன்னும் ஈரம் காயாமல்தன் என் மனதில் இருக்கிறது. இப்போதும் யாராவது கதர் சட்டை அணிந்திருப்பதைப் பார்த்துவிட்டால், அழுகை வந்துவிடும். என் வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிகளுக்கும், புகழுக்கும் அப்பாதான் காரணம். அவர் இப்போது என்னுடன் இல்லையே என்று நான் ஏங்காத நாள் இல்லை." 


''உங்கள் குடும்பப் புகைப்படம் ஒன்றுகூட இதுவரை வெளிவந்ததில்லையே... ஏன்?" 

'' 'உனக்குப் பொதுவெளியில் வேலைபார்ப்பது பிடித்திருக்கிறது. நீ பெற்றிருக்கும் புகழில் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு. ஆனால், எங்களின் மீதும் அந்த வெளிச்சம் படவேண்டாம் ப்ளீஸ்' என்று என் கணவர் பெரியசாமியும், மகனும் சொல்லிவிட்டார்கள். அதுதான் காரணம். என் கணவர் பி.எஸ்.என்.எல் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மகன் விக்னேஷ், இங்கிலாந்தில் மேற்படிப்பு படித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவருக்குத் தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம்!" 

''மீடியா வாய்ப்பு எப்படி வந்தது?"

''எம்.ஏ, பி.எட் என ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கூடம் ஒன்றில் இரண்டு ஆண்டுகள் ஆசிரியையாக வேலைபார்த்தபோதுதான், பொதிகை தொலைக்காட்சியில் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது பொதிகையில் சேனல் ஒன்று, சேனல் இரண்டு என இரண்டு சேனல்கள்  இருந்தன. அதில், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பெரிய பெயர் இருந்தது. அந்த இடத்துக்கு வருவதற்குள், காரணம் இல்லாமல் பல முறை எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனாலும் என் திறமையால் சேனலில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஏழு வருடங்கள் அங்கு வேலைபார்த்த பின்னர், சன் டி.வியில் இருந்து அழைப்பு வந்தது. சில மாதங்களிலேயே பிரபலமானேன்." 

'' 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி  வாய்ப்புப் பற்றி..?" 

''ஏ.எல்.எஸ் புரொடக்‌ஷன் ஜெயந்தி கண்ணப்பன் அவர்கள், ஜீ தமிழ் சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி உருவாக்கத்தின்போது, தொகுப்பாளராக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். அப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடம் பெற்றது. தொடர்ந்து மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. எதையும் சிறப்பாக செய்வது என்னுடைய வழக்கம். அதே போல சிறப்பான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று, இந்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டேன். 

சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சி மக்களிடையே இன்றும் ஆர்வம் குறையாமல் சென்றுகொண்டிருப்பதில், நான் அமைத்துக்கொடுத்த அடிப்படைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ஆனால், நான் அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்துச் செதுக்கிய நிகழ்ச்சியை, தொடர்ந்து நடத்துபவர்கள் பாழாக்கிவிட்டார்கள்". 


''ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?" 

''லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்த வந்த பிறகு, அதில் கலந்துகொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் தெரியுமா? சமீபத்தில் கூட அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதே மாதிரி கேரளாவில் செய்ய துணிவிருக்கிறதா? மலையாளிகள் விட்டுவிடுவார்களா..? தமிழன் தானே..? எத்தனை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன தெரியுமா? நிகழ்ச்சியின் பெயர் என்னவோ, 'சொல்வதெல்லாம் உண்மை', 'நிஜங்கள்'. ஆனால், அங்கெல்லாம் உண்மை பேசப்படுகிறதா..? அந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் நிஜத்துடன் நடந்துகொள்கிறார்களா? நிகழ்ச்சியில் கலந்துகொள்பவரை மிரட்டுவதற்கும், சட்டையைப் பிடித்து உலுக்குவதற்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? 

நான் 750க்கும் மேற்பட்ட எபிஸோடுகளை நடத்தியிருக்கிறேன். பிரச்னை என்று வருபவர்களிடம் ஒரு நாள் முழுக்கக்கூட உட்கார்ந்து பேசி, அவர்களின் சூழலை நன்கு புரிந்துகொண்டு, அவர்கள் வந்த வேகத்தில் இருந்த கோபத்தை எல்லாம் சமாதானப்படுத்திய பிறகுதான், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த நிகழ்ச்சியில் கலந்தாலோசிப்போம். 

இந்த ஷூட் முடிந்துவிட்டால், மேக்கப் மாற்றிக்கொண்டு அடுத்த ஷூட்க்கு செல்லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அல்ல நான். அந்தச் சமயத்தில், இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே என்று என் நேரம் முழுவதையும் செலவிட்டு, அக்கறை, ஒழுங்கு, நேர்த்தியுடன் அதைத் தொகுத்து வழங்கினேன். அதனால்தான், சென்சிட்டிவான களம் என்றாலும்கூட, அதில் விபரீத பிரச்னைகள் வந்ததில்லை. இன்றோ, தற்கொலை செய்திகளைக் கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இதை ஏன் சமூக வலைதளங்களில் எதிர்க்கவில்லை? மீடியாக்கள் பேசவில்லை? நிகழ்ச்சியை பிரபலமாக்குவதற்காக எதையும் செய்யலாமா?. தமிழ்ப் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவார்கள். இவர்கள் யாரும் புதிதாக வந்து பெண் போராளிகள் என்று அவதாரம் எடுக்க வேண்டியதில்லை."

''டி.ஆர்.பி ரேட்டிங்தான் அனைத்துக்கும் காரணமா?" 

''டி.ஆர்.பி ரேட்டிங் என்பது ஆரோக்கியமான போட்டிதான். ஆனால், சமூக அக்கறையும் அதில் வேண்டும். கூடவே, நிகழ்ச்சி நடத்துபவர்கள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிச் செல்லக்கூடாது. சினிமாவில் நடிக்கும்போது மக்களுக்கு, அது உண்மையல்ல நடிப்புதான் என்று நன்றாகவே தெரியும். ஆனால், இந்த நிகழ்ச்சி உண்மைச் சம்பவங்களைச் சொல்வது. இதில் ஏன் போலியாக நடிக்க வேண்டும்? உண்மையை மட்டும் பேசுங்கள் என்றுதான் சொல்கிறேன். 

புகழ் என்பது என்ன தெரியுமா..? எவன் ஒருவன் தன்னை மறந்து மற்றவனுக்காக உழைக்கிறானோ அதுதான் உண்மையான புகழ். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை வைத்தோ, விலைக்கு வாங்கும் பெயரை வைத்தோ புகழ் என்பது அமையாது. நீங்கள் பார்க்கும் வேலையை நேர்மையுடன் சிறப்பாகச் செய்து, உங்கள் மனசாட்சியிடமிருந்து பாராட்டுப் பெறுவீர்கள் பாருங்கள்... அதுதான் உண்மையான புகழ்!'' என முடித்தார் நிர்மலா பெரியசாமி.


- வே. கிருஷ்ணவேணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close