Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அடுத்த பட வாய்ப்பு கிடைக்குறதுக்குள்ள, தேசிய விருதே கிடைச்சுருச்சு!” - ‘ஜோக்கர்’ பாடகர் சுந்தர் ஐயர்

sundar iyar

64வது தேசிய விருது வென்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது. தமிழ்த்திரைப்படத்துறையைச் சேர்த்தவர்களுக்கு மொத்தம் ஆறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஜோக்கர் படத்துக்கு இரண்டு தேசிய விருது கிடைத்திருக்கின்றன. ஒன்று சிறந்த தமிழ் படத்திற்கான விருது மற்றும் அந்த படத்தில் ஜாஸ்மின் பாடலைப் பாடிய சுந்தர்ஐயருக்கு சிறந்த பாடகர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் சொல்ல சுந்தர் ஐயரை தொடர்பு கொண்டோம். அவரிடம் பேசியதிலிருந்து...

ஜோக்கர் படத்தில் பாடக்கூடிய வாய்ப்பு எப்படி கிடைத்தது..?

நான் ஒரு வீதி நாடக கலைஞர். பாட்டும் நல்லா பாடுவேன். என்னோட நண்பர் ஷங்கர் தான், ஜோக்கர் படத்தோட படப்பிடிப்பு தர்மபுரியில நடக்குது, அந்த படத்தில் பாட்டு பாட ஆள்கள் தேர்வு செய்றாங்கன்னு சொன்னார். இயக்குநர் ராஜூமுருகன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நடத்துன ஆடிசன்ல கலந்துகிட்டேன். அதுக்கு அப்பறம் ஒரு மாசம் கழிச்சு எனக்கு போன்  வந்துச்சு. என்னோட வாய்ஸ் ஷான் ரோல்டன் சாருக்கு ரொம்ப  பிடிச்சுருக்குன்னு சொன்னாரு. இப்படித் தான் ஜோக்கர் படத்துல எனக்கு பாட வாய்ப்பு கிடைச்சது.

ஜோக்கர் படக்குழு

பாடல் பாடும் போது எப்படி இருந்தது..?

ரெகார்டிங் போகும் போது யுகபாரதி, இயக்குநர் ராஜூமுருகன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எல்லாரும் இருந்தாங்க. கொஞ்சம் பயமா இருந்தது. இருந்தாலும் நல்லா பாடுவேன்னு நம்பிக்கை இருந்தனால, நல்லா பாடிட்டேன். இரண்டு மணி நேரத்தில் ரெகார்டிங் முடிஞ்சிருச்சு. பாடி முடிச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னோட குரலும் படத்துல வரப்போதுன்னு துள்ளி குதிச்சேன். பாடும் போது எப்படி சந்தோசப்பட்டேனோ அதே மாதிரி அந்த பாட்டு ரிலீஸ் ஆனதுக்கு அப்பறம் பெரிய ஆள் ஆகிடுவோம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அந்த பாட்டு பாடினதுக்கு பிறகு எந்த வாய்ப்பும் வரலைன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு. அடுத்த வாய்ப்பு கிடைகிறதுக்குள்ள தேசிய விருதே கிடைச்சுருச்சு. இதுக்கு அப்பறம் நிறைய வாய்ப்பு வரும்னு எதிர்பார்க்குறேன். எனக்கு பேசும் போது கொஞ்சம் திக்கும், ஆனா பாடும்’ போது அந்த குறை தெரியாம  பாடிருவேன். அது தான் என்னோட ப்ளஸ்.

sundar iyar

சிறந்த பாடகருக்கான தேசிய விருது உங்களுக்கு கிடைச்சப்போ எப்படி இருந்தது..?

அந்த சந்தோஷத்த விவரிக்க முடியாது. ஆகாயத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. நான் இப்போ பெங்களூருல ஒரு நாடகத்துக்காக வந்திருக்கேன். என் மனைவி கவிதாவும், அம்மா சின்னப்பொண்ணுவும் ஊருல இருக்காங்க. என்னவிட அவங்கதான் நைட்டு புல்லா துங்காம, டிவியையே பார்த்துட்டு இருந்துருக்காங்க. என் பேரு எப்போலாம் டிவில வருதுன்னு பார்த்துட்டே இருந்துருக்காங்க. முதல் படத்துலையே தேசிய விருது கிடைக்கும்ன்னு நினைச்சுக்கூட பார்க்கல. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, யுகபாரதி, இயக்குநர் ராஜூமுருகன், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எல்லாருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்க ஆசைப்படுறேன்.

உங்களைப் பற்றி சொல்லுங்க..?

நான் தருமபுரியில வெள்ளிச்சந்துங்கிற கிராமத்துல வசிக்கிறேன். அங்க பகுதி நேர ஆசிரியரா ஏழாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைப் பார்த்துட்டு இருக்கேன். அதுபோக வீதி நாடக கலைஞராகவும் இருக்கேன். ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் தான். என் அப்பா,அம்மா விவசாயம் பண்றாங்க. எனக்கு இயற்கைனு ஒரு பையன் இருக்கார், அவர் நான்காம் வகுப்பு படிக்கிறார். இசைமழைனு ஒரு பொண்ணு, இப்போ தான் மூணு வயசு ஆகுது. நான் நடிகனாகி சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, பாடகருக்கான விருது வாங்கிட்டேன். கண்டிப்பா ஒரு நாள் சிறந்த நடிகனுக்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. sundar iyar

ஜோக்கர் டீம்கிட்ட பேசுனீங்களா..?

எனக்கு விருது அறிவிச்சதும் முதல்ல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான்  போன் பண்ணி, பாராட்டுனார். அப்பறம் இயக்குநர் ராஜூமுருகன் கால் பண்ணி, உனக்கு விருது கிடைச்சது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குன்னு சொன்னார்.

நடிகரான நீங்க எப்படி பாட்டு கத்துக்கிட்டீங்க..?

சின்ன வயசுல இருந்தே எனக்கு நல்லா பாட்டு பாட வரும். ஸ்கூல் படிக்கும் போது நிறைய போட்டிகளில் கலந்துகிட்டேன். ப்ளஸ் டு முடிச்சதுக்கு அப்பறம் பாண்டிச்சேரியில இரண்டு வருஷம், சென்னையில நாலு வருஷம்.. பஸ்ஸுக்கும், சாப்பாட்டுக்கும் காசு இருக்காது. அப்படி விட்டு விட்டு படிச்சது தான் இந்த பாட்டு.

எந்த மாதிரி பாடல்கள் நீங்க பாடுவீங்க..?

நாடகம் நடிக்கும் போது எந்த மாதிரியான பாட்டா இருந்தாலும் நானே தான் பாடிட்டு நடிப்பேன். அப்போ இருந்து இப்போ வரை இதை பழகிட்டு தான் இருக்கேன். அதுனால, எந்த மாதிரியான பாட்டா இருந்தாலும் எனக்கு பாட வரும், பாடுவேன். மெலடி பாட்டு, சங்கதி உள்ள பாட்டுன்னு எல்லாமே பாடியிருக்கேன்.

உங்களுக்கு பிடிச்ச சினிமா பாட்டு மற்றும் சினிமா அல்லாத பாடல்கள் எது..?

சினிமா பாடல்கள்னா இளையராஜா பாடல்கள் தான். சமீபத்துல பவர் பாண்டி பாடல்கள் எல்லாமே பிடிச்சிருந்தது. சினிமா அல்லாத பாட்டுன்னா, நாட்டுப்புற பாடல்களில் அம்மா பாடல்கள் அதிகமா இருக்கு. அந்த பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடிக்கும். நானும் நிறைய மேடைகளில் அந்த பாடல்களைப் பாடியிருக்கேன். பகுத்தறிவு பாடல்கள், தத்துவ பாடல்களும் பிடிக்கும். 

யாரோட இசையில பாடணும்னு ஆசை..?

இந்தியாவுல இருக்குற எல்லா இசையமைப்பாளர் இசையிலையும் பாட்டு பாடணும்னு ஆசை. தமிழ்நாட்டுல இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில கண்டிப்பா பாடணும்னு ஆசை இருக்கு.

- மா.பாண்டியராஜன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close