Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எனக்கு எதிரிகளே கிடையாது!” - ஹாட்ரிக் வெற்றி விக்ரமன்

இயக்குநர் சங்கத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, மீண்டும் இயக்குநர் சங்கத் தலைவராகியிருக்கிறார் விக்ரமன். இவர் அணியைச் சேர்ந்தவர்களும் பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

விக்ரமன்

``தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதற்கு முக்கியமான காரணம் என்ன?'' 

``இந்த வெற்றிக்குக் காரணம் என் உழைப்பு, சங்க உறுப்பினர்களுடன் நான் எப்போதும் சகோதரத்துவத்துடன் பழகுவது போன்றவையே. சங்கத்தில் எனக்கு எதிரிகளே கிடையாது. இது, நான் பெற்ற வாக்குகளைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும். பதிவான 1,600 வாக்குகளில், எனக்கு விழுந்த வாக்குகள் மட்டும் 1,538. கிட்டத்தட்ட 97 சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறேன். இதுவரை நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் இவ்வளவு அதிகமான வாக்குகள் பெற்று யாரும் வெற்றி பெற்றதில்லை. இவ்வளவு வாக்குகள் எனக்கு விழக்காரணம், எந்தவிதப் பாகுபாடும் இன்றி சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டதுதான்.'' 

``ஆனால், இந்த முறை தலைவர் போட்டிக்குப் போட்டியிட உங்களுக்கு விரும்பமில்லை எனச் சொன்னார்களே?'' 

``உண்மைதான். இந்த முறை தேர்தலில் நிற்க வேண்டும் என்ற யோசனையே எனக்கு இல்லை. புதியவர்கள் வர வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் `நீங்கள்தான் மீண்டும் தலைவராக வர வேண்டும்' என எனக்கு அன்புக் கட்டளையிட்டனர். அதனால்தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டேன். இதுமட்டுமல்ல, சில நாள்களுக்கு முன் நடந்த பொதுக்குழுவிலேயே `தலைவர் பதவிக்குப் போட்டி வேண்டாம். இந்தப் பதவிக்கு மட்டும் ஒருமித்தக் கருத்தால் தேர்ந்தெடுக்கலாம்' என்றார்கள். ஆனால், நான்தான் பிடிவாதமாக `இல்லை. தேர்தல் வைத்தேயாக வேண்டும்' என்றேன். அப்படிதான் இந்தத் தேர்தல் இந்த முறை நடந்தது. உறுப்பினர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்து, அவர்களின் கனவுகளை எல்லாம் நிறைவேற்றுவேன்.'' 

``ஜி.எஸ்.டி வரியால் சினிமா துறைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே... அது உண்மைதானா?'' 

``ஜி.எஸ்.டி வரியால் தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என இன்னும் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால், வெளியில் இருந்து பார்க்கும்போது, பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றுதான் தெரிகிறது. நல்ல படமாக இருந்தால், மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த `விக்ரம் வேதா', `மீசையமுறுக்கு' போன்ற படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஜி.எஸ்.டி-யால் பாதிப்பு இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவிகித வரியை மீண்டும் கொண்டுவந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.'' 

விக்ரமன்

``ஃபெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனவா?'' 

``நான் இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவராக வெற்றிபெற்றாலும் இன்னும் பதவியேற்கவில்லை. பதவியேற்பு விழா புதன்கிழமைதான் நடக்கவிருக்கிறது. அதன் பிறகு எங்கள் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டித்தான், இந்தப் பிரச்னை குறித்து முடிவெடுக்க முடியும்; இந்தப் பிரச்னையைப் பற்றி கருத்துச் சொல்ல முடியும். நான் என்றும் எந்த முடிவையும் தனிச்சையாக எடுத்ததே இல்லை. அதனால், இந்தக் கேள்விக்கான பதில் வியாழக்கிழமைக்குமேல்தான் சொல்ல முடியும்.'' 

``கிட்டத்தட்ட 23,000 ஃபெப்சி தொழிலாளர்கள் ஒருபக்கம், தயாரிப்பாளர் சங்கம் மறுபக்கம்... யாருக்கு உங்கள் ஆதரவு?'' 

``அட... அதைத்தான் சார் சொல்றேன்... எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் உடனே சொல்லிட முடியாது. எங்கள் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடிப் பேசி, அப்புறம்தான் இதைப் பற்றி என்னால் பேச முடியும்.” 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close