Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மயக்கும் சித் ஸ்ரீராம் குரலில் ‘மறுவார்த்தை பேசாதே’. யார் அந்த Mr.X? #ENPT #Maruvaarthai

எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்று சொல்லாமலே போஸ்டர், டீசர் எல்லாம் வெளியிட்டு ‘மறுவார்த்தை பேசாதே’ என்ற பாடலின் கொஞ்சத்தை  வெளியிட்டிருந்த  கௌதம் வாசுதேவ் மேனன், நேற்று அந்தப் பாடலை முழுவதுமாக சிங்கிளாக வெளியிட்டு விட்டார். வெளியிட்ட நிமிடம் முதல் இப்போது வரை ஐம்பது முறைக்கு மேல் கேட்டாகிவிட்டது. மயக்கும் இசை.. கலக்கும் வரிகள்.. அட்டகாசமான விஷுவல்ஸ் என்று மனதைக் கொள்ளை கொள்கிறது பாடல். 

மறுவார்த்தை

​புல்லாங்குழல் தாலாட்டில் தொடங்குகிறது. வழக்கமாக ஒரு பேட்டர்னில் பாடும் சித் ஸ்ரீராம் இதில் மெலடியில் பின்னியிருக்கிறார். மெதுவாகத் தொடங்கும் பாடலில் இணைகிறது பீட். கௌதம் வாசுதேவ் மேனன் படமென்றாலே தாமரையின் பேனா எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்க்கும் போல. வரிகள் ஒவ்வொன்றும் மெட்டுக்கு அளவெடுத்தது போல அத்தனைக் கச்சிதம். 

காதலியுடன் ஒரு ரயிலில் அமர்ந்து செல்கிற பயணத்தின் ஆரம்பம் போல... மெதுவாக ஆரம்பித்து ‘மயில் தோகை போலே விரலுன்னை வருடும் / மனப்பாடமாய் உரையாடல் நிகழும்’ வரிகள் முடிந்து ’விழிநீரும் வீணாக’வில் ஸ்டேஷனை விட்டுக் கிளம்பி ஸ்பீடெடுக்கிற ஸ்டைலில் கொஞ்சம் உச்சஸ்தாயில் போகிறது.

பல்லவி முடிந்து முதல் இடையிசையில் மீண்டும் புல்லாங்குழல். எத்தனை நாளாச்சு இப்படி 20 நொடி நீளத்துக்கு புல்லாங்குழல் கேட்டு. ‘வடியாத வேர்வைத் துளிகள்.. பிரியாத போர்வை நொடிகள்’ வரிகள் அற்புதம் என்றால் நொடிகள்’-ல் சித் ஸ்ரீராமின் மேஜிக் எட்டிப் பார்க்கிறது. 

ENPT

முதல் இடையிசையில் 20 நொடிகள் விளையாடிய புல்லாங்குழல், இரண்டாவது இடையிசையில் 23 நொடிகள் இரண்டு ஸ்டைலில் ஒலித்திருக்கிறது. அதுவும் 3.02வது நொடியில் மூச்சுவிடாமல் ஒலிக்கும் அந்த இசை பாடல் முடிந்தபின்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இரண்டு சரணத்திலும் முதல் நான்குவரிகள், நின்று விளையாடுகிற துள்ளலிசை அபாரம். பாடல் இறுதியில் சரணம் முடிந்தபின்னும் தொடர்ந்து இசை ஒலித்து.. நீ தூ....ங்...கி..டு என்று சித் ஸ்ரீராம் முடிப்பது... வாவ்! பல்லவியிலும் ’நாளில்லையே’யில் சங்கதிக்கு ஸ்பெஷல் பாராட்டு!  

பாடல் Mr. X என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யார் அந்த மிஸ்டர் எக்ஸாக இருக்கக்கூடும் என்று இந்தப் பாடலை வைத்து கணிக்க முடிகிறதா? 

வித்யாசாகர் என்றெல்லாம் சிலர் கணித்துக் கொண்டிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் ஆத்மார்த்தமான கைகுலுக்கல்கள்! ஆரம்பம் முதல் இறுதிவரை அத்தனை நேர்த்தி. 

எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் யார் என்று கொஞ்சம் யூகிக்கலாமா என்று பார்ப்போம். 

தர்புகா சிவா

பயகிட்ட ஒரு ஃபயர் இருக்கு. கிடாரி, பலே வெள்ளையத் தேவா படங்களில் கவனிக்க வைத்திருப்பார். அது போக ‘உன்னைப் பத்தின ஒரு ஆதாரம் வலுவா சிக்கிருக்கு’னு சொல்ற மாதிரி இவருக்கும் கௌதம் மேனனுக்கும் ஒரு நட்பு உண்டு. அந்த நட்பால் இந்த பட வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது.

தனுஷ்

நடிப்பைத் தவிர்த்து பாடகர், கவிஞர்னு பாடல் சம்பந்தமா இவருக்கு ஆர்வம் மிக அதிகம். படத்தோட ஹீரோவே தனுஷ்தான். படம் புக் பண்றப்பவே கௌதம்கிட்ட தனுஷ், “நான் ம்யூசிக் பண்றேன். ஆனா கம்பேர் பண்ணுவாங்களே”னு சொல்லிருக்கலாம். “அதை நான் பார்த்துக்கறேன்”ன்னு சொல்லி கௌதம் இந்த ஐடியாவைப் பண்ணிருக்கலாம்.

ஷான் ரோல்டன்

இவர்கிட்டயும் வெரைட்டி அதிகம். தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ இவர் இசைதான். வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கும் இவர் தான் இசை. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் மாரியப்பன் படத்திற்கும் இவர் தான் இசை. அதனால்  தனுஷ், கௌதம் பேசும்போது இவர் பற்றின பேச்சு வந்து, இந்த படத்திற்கு இவரையே ம்யூசிக் பண்ணச் சொல்லிருக்கலாம்.

யுவன் ஷங்கர் ராஜா

தி கம்பேக் கிங். “நீங்கதான் இசை. ஆனா நீங்கனு தெரியாம ஒரு பாட்டு வேணும். சில ஐடியாஸ் இருக்கு’’னு கௌதம் சொல்லிருக்கலாம். ஏன்னா, இந்தப் பாட்டுல யுவன் டச் இல்லை. ஆனா இப்படிப் போடக்கூடிய திறமை நிச்சயம் யுவனிடம் இருக்கு.

One and Only ஏ.ஆர்.ரஹ்மான் 

சிங்கிளின் கொஞ்சம் கேட்கும்போது லேசாகவும், முழுப் பாடல் கேட்கும்போது இன்னும் கொஞ்சம் அதிகமாகவும் ஏ.ஆர்.ஆராகத்தான் இருக்கும்யா என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.  அவரோட ஆரம்பகால டச் ரொம்பவே அதிகம் தெரியுது பாட்டுல. ஆனா சில விஷயங்கள் அவர் இல்லைனும் தோண வைக்குது. 1. அவர் இரண்டு Stanza வா பண்ணிருக்க மாட்டார். 2.  இரண்டு இடையிசையிலையும் புல்லாங்குழல் பயன்படுத்தியிருப்பாராங்கறதும் டவுட். இரண்டாவதுல வேற இசைக்கருவியைத்தான் பயன்படுத்தியிருப்பார். ஆனா மெட்டு.. அவர் ஸ்டைல். அதுல என்ன டவுட்னா, 3. அவர் மெட்டுப் போடறத விட, “எழுதிக்குடுங்க. நான் ட்யூன் பண்ணிக்கிறேன்’னு சொல்றது தான் அதிகம். அதுவும் இடிக்குது.  

கௌதம் வாசுதேவ் மேனன்

இவருக்கு இருக்கற இசை அறிவும், ஆர்வமும் ஊர் உலகம் அறிந்தது. நாமளே பண்ணலாம்யானு இறங்கிருக்க வாய்ப்புகள் உண்டு. கௌதம் அல்லது ஏ.ஆர்.ஆர் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்...பார்க்கலாம்.  

பாடல் வரிகள்

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான்காக்க..
கனவாய் நீ மாறிடு!

மயில் தோகை போலே விரலுன்னை வருடும்! 
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக 
இமை தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை 
நினைக்காத நாளில்லையே..!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே!


விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!
மணி காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!
மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ...! முடிவும் நீ...!
அலர் நீ...! அகிலம் நீ...! 

தொலைதூரம் சென்றாலும்...
தொடுவானம் என்றாலும் நீ...
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் ...! 
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி! 
இழந்தோம்.. எழில் கோலம்!
இனிமேல் மழை காலம்..!!​

(கவிதாயினி: தாமரை)

-பரிசல் கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close