Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அயூபிண்டே புஸ்தகம்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அலோஷி (ஃபஹத் பாசில்) எனும் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் கதைதான் ’அயூபின்டே புஸ்தகம்’. ஒளிப்பதிவாளராக மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி பின் இயக்குநரான அமல் நீரத் இயக்கியிருக்கும் படம்.

  1900-ல் தொடங்குகிறது கதை. மூணார் பகுதியில் சொந்தமாக தேயிலைத் தோட்டம் வைத்திருக்கிறார் ஹாரிசன் எனும் ஆங்கிலேயர். அவரிடம் வேலை செய்யும் விசுவாசமான வேலைக்காரன் தான் அயூப் (லால்). ஒரு கட்டத்தில் ஹாரிசன் இறந்துவிட அவரின் மனைவி கழலியை (லீனா) துரத்தி அடித்துவிட்டு சொத்தை எல்லாம் தனதாகிக் கொள்கிறார் லால். லாலிற்கு மூன்று மகன்கள். முதல் இருவரும் முரடர்களாக வளர, கடைசி மகன் அலோஷி (ஃபகத்) மட்டும் நல்ல குணங்களுடன் வளர்கிறார். கழலியின் மகள் மார்த்தா (இஷா ஷர்வானி)வும் ஃபஹத்தும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். 

தன் தாய் அன்னம்மா (ரீனு மேத்தீவ்ஸ்) இறந்த பிறகு வீட்டைவிட்டு வெளியேறி பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்கிறார். இந்த காலகட்டத்தில் லால் தனது அதிகாரத்தால் பல இடங்களையும் தனதாக்கிக் கொள்கிறார். சில வருடங்கள் கழித்து பிரிட்டிஷ் ராணுவத்தில் கிளர்ச்சி செய்ததற்காக ஃபஹத்தும் அவரது நண்பரும் ராணுவத்தில் இருந்து நீக்கப்படுகிறார்கள். மீண்டும் தன் சொந்த ஊருக்கு வருகிறார். முக்கியமாக தன் சிறுவயது தோழி இஷா ஷர்வானியை சந்திப்பதற்காக ஆவலுடன் வருகிறார் ஃபஹத். அங்கு வந்த பிறகு தன் தந்தையால் நடந்திருக்கும் பல விஷயங்களால் மக்கள் பாதிக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்கிறார். பின்பு அவர்களுக்காக போராடுகிறார். அவர் போராட்டம் ஜெயித்ததா என்பதே மீதிக்கதை!



தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத். மூணாரின் குளுமையை முழு திரையிலும் பரவச் செய்து அழகாக்கியிருக்கிறார்.

தன் எஜமானனுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது என விசுவாசம் காண்பிப்பதும், பின் அவர் இடத்தில் தன்னை இருத்திக்கொள்ள வெறி கொள்பவனாக, வயோதிகத்தில் வலிமை இழந்திருக்கும் போது எங்கு தன்னை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்களோ என பூனைக்கு கொடுத்து பின் தான் சாப்பிடும் பலவீனமானவனாக என அசத்தியிருக்கிறார் லால்.

அவருக்கு அடுத்தபடியாக கவனத்தைக் கவர்வது ஃபஹத்தும், பத்மபிரியாவும் தான். ஒரு கதாநயகனாக கிடைத்த பெரிய காட்சிகளில் ஃபஹத் கவர்ந்தது இயல்பாகக் கடந்துவிடுகிறது. அளவான வசனங்கள், சில காட்சிகளில் பார்வைகள் மட்டும் தான் என வரும் பத்மபிரியா கவனத்தை ஈர்க்கிறார். தம்பியை உசுப்பேத்தி விட்டு அண்ணனைக் கொல்ல வைப்பது, அந்த தம்பியையும் கொல்ல இன்னொருவனை மயக்குவது, இறுதியில் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொள்வது என மனதில் நிற்கிறார்.

மற்றபடி தமிழர்களை கெட்டவர்களா காட்டுவதை இந்த படத்திலும் தவறாமல் செய்திருக்கிறார்கள். மதுரைக்கார அங்குர் ராவுத்தர் கேரளாவில் மரங்களை வெட்ட வந்து பின் லாலைக் கொல்ல திட்டம் தீட்டுவது என வில்லன் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரி வைப்பவர்கள் கதாப்பாத்திரத்திற்கும் தமிழில் பாட வைப்பது என தேடித் தேடி சேர்த்திருக்கிறார்கள். என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா?

இவை தவிர்த்து படம் கொஞ்சம் நீளம் என்ற குறை இருக்கிறது. மற்றபடி ஒரு பீரியட் ஃபிலிமில் ஒரு கதாப்பாத்திரத்தை சுற்றி விரியும் பிரச்னைகளை வைத்து கதை நகர்த்தியிருப்பது அமல் நீரதின் திரைக்கதை சாமர்த்தியம்!

-பா.ஜான்ஸன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close