Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படியும் பொங்கலாம் பாஸ்!

தாநாயகர்கள் என்றாலே அவர்கள் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழணும், துவம்சம் பண்ணணும்கிறதே நம்ம சினிமாவில் பொழப்பாப் போச்சு.

கதாநாயகியைக் காப்பாத்துறதிலிருந்து பன்னாட்டு கம்பெனிகளிடமிருந்து விவசாயிகளைக் காப்பாத்துற வரைக்கும் பண்ணிட்டாங்க. இனிமேலும் எதைக் காப்பாத்துறதுன்னுதான் எல்லா கதாநாயகர்களுக்குமான கேள்வியே. அவர்களின் கவலை போக்க இன்னும் சில தலையாய எதிர்காலப் பிரச்னைகளைக் கொஞ்சமா கோடு போட்டுக் காட்டுவோமா பாஸ்?! படிச்சுட்டு உடனே கதாநாயகர்கள்  பொங்க ஆரம்பிச்சிடலாம்.....

பிரச்னை 1:


சென்னையில ரோடு போடுறப்பல்லாம் டிவைடர்ல வைக்கிற செடிகள் படுற பாடு சொல்லி மாளாது. ரோட் டுக்கு நடுவுல டிவைடரை புதுசா சிமென்ட்டுல ஒரு கான்ட்ராக்டர் கட்டுவார். அதுல செடிகளை நட்டு ரெண்டு நாளைக்கு ஒழுங்கா தண்ணி ஊத்திட்டு மறந்திடுவாங்க. அடுத்து அந்தச் செடியே கஷ்டப்பட்டு வேரூன்றி தளிர் விட்டு, மொட்டு விட்டு பூக்கப்போற நேரத்துல அந்த டிவைடரை இன்னொரு கான்ட்ராக்டர் வந்து இடி ச்சு, கிரானைட் கல்லுல டிவைடரை புதுசா போட்டு அதுல புதுசா செடி நட்டு வைப்பார். அந்தச் செடியும் வழக்கம் போல கஷ்டப்பட்டு வேர் விட்டு, வளர்ந்து பூப்பதற்குள்... அட போங்கப்பா.

இந்த அநியாயத்துக்கு எதிரா நம்ம ஹீரோ பொங்கணும். அவர் தட்டிக் கேட்டதால அதுக்கப்புறமா அரசாங்கம் மனம் திருந்தி, ஊர்ல இருக்கிற எல்லா டிவைடருக்கும் நம்ம ஹீரோவையே காண்ட்ராக்டரா போட்டு டுவாங்க. நம்ம ஹீரோவும் எல்லா டிவைடரையும் இரும்புலயே செஞ்சு வெச்சு, அதுல  சந்தன மரத்தையே வளர்த்து, சென்னையையே சந்தனக்காடு மாதிரி பத்தே வருசத்துல மாத்திடுவார்! அப்புறமென்ன, சிங்காரச் சென்னை சந்தனச் சென்னையா மாறிடுது.

பிரச்னை 2:

தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோ மோசடிகளுக்கெதிராக இதுவரை யாரும் பொங்கல. நம்ம படத்துல ஹீரோவோட பொண்ணு ஒரு டி.வி-யோட ரியாலிட்டி ஷோவுல பாட்டுப் போட்டியில் கலந்துக்கிறா. அவளுக்கு அருமையான குரல் இருந்தாலும் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்காகப் பணம் கேட்டு டார்ச்சர் பண்றாங்க. அது மட்டுமில்லாமல் விதவிதமா ட்ரெஸ் பண்ணணும், அரைகுறையா டிரெஸ் பண்ணணும், பாட்டுப் பாடிக்கிட்டே ஆடணும்னு ஏகப்பட்ட டார்ச்சர்களைத் தர்றாங்க. இத்தனை கொடுமைகளையும் அண்டர்கிரவுண்ட் ஆபரேஷன் மூலமா அந்தத் தொலைக்காட்சிக்கே தெரியாமல் ஹீரோ பதிவு பண்றார். அதோட அவங்க கேட்கிற பணத்தைக் கொடுத்து  ஜெயிச்சு வந்ததும் கப்பு குடுக்குற அன்னைக்கு  க்ளைமாக்ஸ்!

அந்தக் கோப்பையை தூக்கியெறிஞ்சு அவங்க பண்ணின தகிடுதத்தத்தைப் பற்றிப் பேசறார் 'என்னமா இப்படி பண்றீங்களேமா' னு இவர் கேட்டதால, நாட்டிலிருக்கும் அத்தனை தொலைக்காட்சிகளும் மனசு மாறி, உண்மையான ரியாலிட்டி ஷோ நடத்த ஆரம்பிக்கிறாங்க!

பிரச்னை 3:


ஊர் முழுக்க தலைவர்கள் சிலை நிறைய இருக்கு. ஆனால் எந்தச் சிலையும் உருப்படியா இல்ல. காந்தி சிலையில கம்பு இல்ல. அண்ணா சிலையில கண்ணாடி இல்ல. எல்லா சிலையிலும் காக்கா கக்கா போயிருக்கும். ஆக அத்தனை சிலைகளையும் பராமரிக்கச் சொல்லி நம்ம ஹீரோ களத்துல இறங்குறார். சிலைகளையெல்லாம் டிங்கரிங் பண்றதுக்காக ஒரு மக்கள் இயக்கத்தை தொடங்குறார். அம்புட்டு சிலைகளையும் டிங்கரிங் பண்ற இவரோட தன்னார்வத்தைப் பார்த்து, அவருக்கு ஒரு லவ் செட்டாகுது. அரசாங்கமே அவரோட சேவையை பாராட்டுது.

டாஸ்மாக் கடைகளில் குடி குடியைக் கெடுக்கும்னு எழுதி வைக்கிற மாதிரி, எல்லா சிலைகளின் பக்கத்திலும், இங்கே காக்கைகள் எச்சமிடக் கூடாதுனு போர்டு எழுதி வைக்கிறாங்க. ஆனா காக்கைகளோட கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்ட ஹீரோ, அரசாங்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடி, எல்லா சிலைகளுக்குப் பக்கத்திலும்  ஒரு டாய்லெட்டை கட்டி விடுறார்.

பிரச்னை 4:
 
இப்பல்லாம் கிராமங்களில் இருக்கும் தியேட்டரை எல்லாம் இழுத்து மூடிட்டாங்க. அதனால கிராமத்திலிருக்கும் அனைவரும் தியேட்டரில் படம் பார்க்க முடியாமல் பல மைல் தூரம் தாண்டியிருக்குற நகரங்களுக்குத்தான் வர்றாங்க. அதிலும் குறிப்பாக ஹீரோக்களை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள் நிலை ரொம்ப கஷ்டம். ஊருவிட்டு ஊரு வந்து அவங்க படுற கஷ்டத்தைப் பார்த்து நம்ம ஹீரோ பொங்குறாரு! 

ஆனால் தியேட்டரை நஷ்டத்துல எப்படி நடத்த முடியும்னு தியேட்டர் அதிபர்கள் எல்லாரும் கேள்வி எழுப்புறாங்க. அதுக்கு ஹீரோ, நமக்குத் தேவையேயில்லாத பள்ளிக்கூடங்களே கிராமங்களில் நடக்கும்போது, தியேட்டர்கள் நடத்தினால் என்னன்னு கேள்வி கேட்கிறார். அதுமட்டுமில்லாமல் தானே தனது செலவில் ஒரு கிராமத்தில் தியேட்டரை ஆரம்பிக்கிறார். தன்னோட ரசிகர் மன்றத்திலிருந்து தினமும் நூறு பேரை அந்த தியேட்டரில் படம் பார்க்கறதுக்காகவே நியமிக்கிறார்! அவங்க தர்ற பணத்தால அந்த படத்தை நூறு நாள் ஓட்டிக் காட்டுறார்! அப்புறமென்ன எல்லா கிராமத்திலும் இதே மாதிரி தியேட்டரை அவரோட ரசிகர்களே தொடங்கி முழுநேரமா படம் பார்க்குறாங்க! நாட்டு மக்கள் அனைவரும் சந்தோஷமா இருக்காங்க!

பிரச்னை 5: 

இது கொஞ்சம் டெக்னாலஜி சார்ந்த ஹைடெக் கதை. பிரச்னையும் ஹை டெக்கானது. ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் வெச்சிருக்கிற ஒரு தொழிலதிபரோட பேங்க் அக்கவுன்ட்ல திடீர் திடீர்னு பணம் காணாம போகுது. ஆனால் அந்தப் பணத்தை யார் எடுத்தாங்க, எப்படி காணாமல் போனதுனு அவரால கண்டுபிடிக்க முடியல.  இப்பதான் அமெரிக்காவுல படிப்பு முடித்த நம்ம ஹீரோ என்ட்ரி. அவர் தொழிலதிபரோட பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து முகநூல் அக்கவுண்ட் வரைக்கும் அத்தனையையும் அலசிப் பார்க்கிறார்.

கடைசியில், அந்தத் தொழிலதிபர், ஆப்பிரிக்க இன்பாக்ஸ் அழகி ஒருத்தியோட சாட்ல கடலை போட்ட உண்மையை கண்டுபிடிக்கிறார். அந்த அழகிதான் இவரோட  பணத்தை  ஆட்டையைப் போட்டவர்னு கண்டுபிடிச்சதோட நில்லாமல், அந்த அழகியைத்தேடி ஆப்பிரிக்காவுக்கே போய் அவளைக் கைது பண்ணி சட்டத்துக்கு முன்னால நிறுத்துறப்போதான் எல்லோருக்கும் தெரியுது... அவர்  பெண்ணல்ல, ஆண் என்று. இன்பாக்ஸ்ல ஓவரா கடலை போடாதீங்கனு அட்வைஸோட படம் முடியுது.

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்-
 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close