Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

த்ரிஷாவோ... மோனிகாவோ... உங்களுக்கு என்னதான்ய்யா பிரச்னை?!

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் இதெல்லாம் வந்தாலும் வந்தது... நம் நெட்டிசன்கள் செய்யும் அட்ராசிட்டிகளை தாங்கவே முடியவில்லை. டிரெண்டில் இருக்கும் ஒரு செய்தியை வைரலாக்குவது முதல், மீம்ஸ்களை தயாரித்து சம்மந்தப்பட்டவர்களை கலாய்த்து காலி செய்வது வரை இவர்களின் அட்டகாசங்கள் சமீபமாகவே ஹைபிட்ச்சில் போய்க் கொண்டிருக்கின்றன.
'ராஜா ராணி'  படத்தின் இயக்குநர் அட்லிக்கும், சின்னத்திரை நடிகை பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அட்லி கறுத்த நிறம் கொண்டவராகவும், பிரியா செக்கச் சிவப்பான நிறத்தில் இருந்ததையும் நிச்சயதார்த்த புகைப்படத்தில் பார்த்த வலைதளவாசிகள் சும்மா இருப்பார்களா? 
'கிளி மாதிரி பொண்ணுக்கு...’ என்றெல்லாம் வாய்க்கு வந்த மாதிரி கமென்ட்களை வாந்தி எடுக்க ஆரம்பித்தார்கள். இதேபோல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கும், நடிகை நஸ்ரியாவுக்கும் திருமணம் நடந்தபோது, ஃபகத்தின் தோற்றத்தை வைத்து ஒரு சின்னப் பெண்ணை, இவ்ளோ வயசான ஒருத்தனுக்கு கட்டிக்கொடுத்துட்டாங்களே என நஸ்ரியாவுக்கு கல்யாணம் ஆனதை தாங்கிக் கொள்ள முடியாமல் வயிறு எரியக் கதறினார்கள்.
 
 
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, இரண்டு பெண்களிடம் மணமுறிவான பிறகு, இஸ்லாம் மதத்துக்கு மாறி, மூன்றாவதாக அந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதில் யுவனின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது பற்றியும், திருமணத்துக்காகவே மதம் மாறினாரா என்பது பற்றியும், வலைவாசிகள் தங்களுக்குள்ளாகவே விவாதம் நடத்திக் கொண்டார்கள்.
நடிகை மோனிகாவும் இஸ்லாத்துக்கு மாறிய பின் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள பொருந்தாத மாப்பிள்ளை என்று முணுமுணுத்துத் தீர்த்தனர். நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் ஒருவரோடு திருமணம் நிச்சயமாக, இந்த நடிகைகள்னாலே தொழிலதிபரை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுறாங்களே... ஏன் பாஸ் ஏன்?’ என்று பொருமித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
 
திருமணம் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. யாராவது, யானையையோ... பூனையையோ மணம் முடித்தாலாவது, அதிர்ச்சி அடையலாம். இவர்கள் மணம்முடித்திருப்பது என்னவோ மனிதர்களைத்தானே! நஸ்ரியாவோ அல்லது பிரியாவோ இந்தத் திருமணம் எங்களுக்குப் பிடிக்கவில்லை என உங்களிடம் முறையிட்டார்களா... இல்லை ஏற்கெனவே வரன் பார்க்கும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்து உங்களின் மேலான கருத்துக்களைப் பதிவிடும்படி கேட்டிருந்தார்களா? யுவன் எத்தனை மதத்துக்கு வேண்டுமானாலும் மாறட்டும், விவாகரத்துக்குப் பின் எத்தனை திருமணங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். சட்டப்படி இதில் குற்றம் இருப்பினும் கூட நாம் தலையிட என்ன உரிமை இருக்கிறது. தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதில் உங்களுக்கு எங்கே இடிக்கிறது?
 
உங்கள் சகோதரி அழகில் தேவதையாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் தனக்கு அழகிலும் வசதி வாய்ப்பிலும் பொருத்தம் இல்லாத ஒருவனை காதலித்து திருமணம் செய்து கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் நண்பர்களே?
 
 
உங்கள் சகோதரியையும் அவள் கணவனையும் ஃபேஸ்புக்கில் அப்லோடி, இவர்கள் ஜோடிப் பொருத்தம் எப்படி?’ என்று அடுத்தவர்களை விட்டு கலாய்க்க விடுவீர்களா? இதை நினைக்கும்போதே உங்களுக்கு ஊசி போல் குத்துகிறது அல்லவா? அப்படித்தானே எல்லோருக்கும்! ஏன் உங்களுக்கு அமையும் வாழ்க்கை துணையையும் உங்களையும் சமூகவலை தளங்களில் கிண்டலடித்தால் நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?
 
நீங்கள் வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு கமென்ட்களையும் இந்த பிரபலங்கள் பார்க்க நேர்கையில்... ஒருபுறம் அதை சட்டை செய்யாமல் ஒதுங்கிக் கொண்டாலும், உள்ளூர அவர்கள் ஏதோ ஒரு வகையில் மனஅழுத்தத்தில் உழல நீங்களும்தானே காரணமாகிறீர்கள். கருத்துக்கள் பதிய களம் இருக்கிறது என்பதற்காக அடுத்தவரை கஷ்ட படுத்துவது எப்படி நியாயமாகும். 
 
 
 
இவர்கள் அனைவருமே பிரபலங்கள் என்பதைத் தவிர, வேறு என்ன காரணங்கள் உங்களிடம் இருக்கிறது இப்படியெல்லாம் கிண்டலடிக்க? இவர்கள் என்ன வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்களா... இல்லை 2 ஜி, 3ஜி, சோனியாஜி, மோடிஜி என்று ஏதாவது? இல்லை புதுப்படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் ஏதாவது ஸ்டண்ட் அடித்து, ஊரை உசுப்பேத்தினார்களா? 
 
எதுவுமே இல்லாத அப்பாவிகளை எதற்காக அவல் ஆக்குகிறீர்கள்? நடிகர்கள் என்ற ரீதியில் அவர்களது படங்களையும், நடிப்பையும் விமர்சிக்க மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது. அவர்களது சொந்த விஷயங்களை விமர்சிக்க துளியும் உரிமை கிடையாது.
 
நீங்கள் கேள்வி கேட்க எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்க... அதையெல்லாம் விட்டுவிட்டு, இப்படிப்பட்ட ஜீவன்களின் பாவத்தை சம்பாதிக்கப் பார்ப்பது... அநியாயம் இல்லையா, நியாயமாரே!
 
-செங்காந்தள்-

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close