Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூகத்தை சிந்திக்கிறதா சினிமா? - ஓர் அலசல்!

எத்தனையோ காட்சிகள் நம் வாழ்வில் நடந்தேறியிருக்கலாம், இப்படிப்பட்ட காட்சிகள் நம் வாழ்வில் நிகழ்ந்திருக்கலாமே என்று ஏங்கியிருக்கலாம், நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பும், சாதாரண வாழ்க்கையில் நிகழாத அதிசயங்களையும் காட்சிப்படுத்தும் பிம்பம் சினிமா. பொழுது போக்கின் உச்சமாக இன்றும் மக்களின் நீங்கா நாயகன்களாக நிலைத்திருக்கிறது சினிமா உலகம். எத்தனையோ நாவீனத்துவங்களையும், மாற்றங்களையும் கடந்து வந்துள்ளது. 

திரைப்படங்களில் எத்தனையோ விரும்பத்தகாத காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஹீரோ புகை பிடிப்பது போன்றும், மது குடிப்பது போன்றும் காட்சிகள் இடம் பெறும். கேட்டால் நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பை படங்களில் அப்படியே தர வேண்டும் என்ற எண்ணத்திலே காட்சிகள் இடம் பெறுவதாக சொல்வார்கள். இந்தப் படங்களை அனைத்து வயதினரும் பார்ப்பார்கள். அவர்கள் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதே நிதர்சன உண்மை. அதனால் புகைப் பிடிக்கும் காட்சிகளிலும், மது அருந்தும் காட்சிகளிலும் எச்சரிக்கை வாசகங்கள் திரையிலேயே இடம் பெறுகிறது.

படம் ஆரம்பத்திலேயே புகைப்பிடித்தல் உடலுக்குத் தீங்கானது என்ற வாசகங்களை படத்தின் நடிகர்கள் குரலில் காட்சியாக்கப்பட்டிருக்கும். அதன் பின்னரே படம் தொடங்கும். ஆனால் அதே படங்களில் தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்கு வேகமாக வாகனங்களை ஓட்டுவது, சாகசம் செய்வது, பறந்து பறந்து அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறும். டூவீலர், கார்களில் பாதுகாப்பின்றி வேகமாக வாகனங்கள் பறந்த படி சண்டைக் காட்சிகள் படமாக்கப்படும். இது நிஜ வாழ்க்கையை விட்டு சற்றே ஒதுங்கியுள்ள விஷயங்களே. 

தற்போது இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. உத்திர பிரதேச போக்குவரத்து கமிஷனர் ரவீந்திர நாயக் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது போன்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போலவும் படம் எடுக்கப் படுகிறது. இதனால் பார்ப்பவர்களும் அதை முயற்சி செய்யும் நிலை வரலாம் அது ஆபத்தான ஒன்று என்று மத்திய சென்சார் குழுவிடம் புகாராக கூறியுள்ளார். 



ரசிகர்கள் தன்னுடைய ஹீரோ வேகமாக வாகனம் ஓட்டுவதைப் பார்த்து,  தானும் வேகமாக வாகனங்கள் ஓட்டி விபத்து பல நிகழ்வது அனைவரும் அறிந்ததே. அன்றைய காலங்களில் சிறுவர்களில் விருப்ப நிகழ்சிகளில் ‘சக்திமான்’ தொடரும் ஒன்று. அந்த தொடரைப்பார்த்து சிறுவர்கள் பலர்,  சக்திமான் என்னை காப்பாற்ற வருவார் என்று வீட்டு மாடிகளிலிருந்து குதித்த செய்தியும் படித்திருக்கிறோம். தவறான எண்ண ஓட்டத்திற்கு சினிமாவும் முக்கிய மூலக்கூறாக செயல்படுவதை தவிர்க்க முடியாது. இப்போது இருக்கும் குழந்தைகள் டெக்னாலஜி, சமூகம் என சற்றே முன்னேறியுள்ளனர் என்றாலும் அவர்களுக்கு முழுமையான விஷயங்கள் தெரிய வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். 

புகைப் பிடித்தல், மது அருந்துவது போன்றவற்றிற்கு எச்சரிக்கை வாசகம் இடம் பெறுவது போல வேகமான வாகனங்கள் ஓட்டுவது, சண்டைப் போடுவது, வன்முறை சார்ந்த காட்சிகளை அனுமதிப்பதும் மக்களின் மனதில் தவறான எண்ணங்களை பதியவைக்கும் என்பது சிந்திக்க வேண்டிய உண்மை. இப்படிப்பட்ட காட்சிகளை திரையிலிருந்து தவிர்க்க முடியாது என்றாலும் அப்படிப்பட்ட காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறலாம் என்றே தோன்றுகிறது. 

-நற்றிணை- 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close