Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆயிரம் ரூபாயில் வருஷம் முழுக்கப் படம் பார்க்கலாம்!”

‘‘ஒவ்வொரு சினிமா தயாரிப்பாளரும் ஒரு படத்தைத் தயாரிக்க குறைந்தபட்சம் இரண்டுகோடி செலவு செய்கிறார். பூஜை போடுவதில் இருந்து ப்ரிவியூ ஷோ வரை, ஒவ்வொரு படத்துக்கும் ஆயிரம் பேர் உழைக்கிறாங்க. இத்தனை கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்குவது எதுக்காக? நம்ம படமும் தியேட்டர்ல வரணும். அதை ரசிகர்கள் பார்க்கணும்ங்கிற ஏக்கம்தானே? ஆனா, படம் ரிலீஸான மறுநாளே பத்து ரூபாய்க்கு திருட்டி சி.டி போட்டு விற்கிறாங்க.  அதான், ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க இப்படி இறங்கிட்டேன்!’’ அழுத்தம் திருத்தமாக ஆரம்பிக்கிறார் வழக்கறிஞர் ஆனந்த். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருக்கும்  சண்முகா திரையரங்கின் உரிமையாளர். ‘ஆயிரம் ரூபாய் செலுத்தினால் வருடம் முழுவதும் படம் பார்க்கலாம்’ என்பதுதான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க இவர் எடுத்திருக்கும் அதிரடி ஸ்டெப்!

‘‘ஸ்கூல் படிக்கிறப்போ பல தடவை கட் அடிச்சிட்டு தியேட்டருக்குக் கிளம்பிடுவோம். அந்த அளவுக்கு சினிமா ஆசை. சினிமாவில் நடிக்கணும், இயக்கணும், தயாரிக்கணும்னு ஆசையெல்லாம் இல்லை. ஒரு தியேட்டர் கட்டணும். அது என்னோட உழைப்புடன் நண்பர்களோட ஒத்துழைப்புனாலேவும் சாத்தியமாச்சு. இதோ, இந்த தியேட்டரை ஆறு வருஷங்களா லீஸுக்கு எடுத்து நடத்திட்டு இருக்கேன். மத்தபடி, வாதாடுறதுதான் நமக்கு மெயின். ஒரு காலத்துல தியேட்டர்ல டிக்கெட் வாங்க அடிச்சுக்கிட்டு சாவோம். அந்த அளவுக்கு கூட்டம் ஜேஜேனு இருக்கும். இன்னைக்கு அப்படியா? இந்த தியேட்டர்ல வருஷத்துக்கு 35 படங்கள் ஓட்டுறேன். எந்தப் படமும் நாலு நாட்களைத் தாண்ட மாட்டேங்குது. இத்தனைக்கும் ‘கோச்சடையான்’, ‘லிங்கா’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’, ‘துப்பாக்கி’, ‘சிங்கம்’னு பெரிய நடிகர்களோட படங்கள்தான்.  தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற எண்ணமே ரசிகர்களுக்கு வர மாட்டேங்குது. கூடவே நெட்டிசன்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர்னு முதல் நாள் முதல் ஷோ முடியிறதுக்குள்ளேயே படத்தைத் துவைச்சு தொங்கப் போட்டுடுறாங்க. உங்க ஊர் தியேட்டர் ஆப்பரேட்டரைக் கேட்டுப் பாருங்க. இரவுக் காட்சிக்கு வேலை பார்க்கிற சுகமே தனி. ஆனா, இப்போவெல்லாம் நைட் ஷோ பார்க்க ரெண்டு, மூணு பேரு வர்றாங்க. எப்படா படம் போடுவாங்கனு ரசிகர்கள் கத்தணும். தியேட்டர்ல டைட்டில் போட்டதும் ரசிகர்கள் பேப்பரைக் கிழிச்சு தெறிக்க விடணும்னு எந்த கெத்துக்காக தியேட்டரை நடத்த ஆசைப்பட்டேனோ, அது நடக்கல. அதுக்குதான் இறங்கி அடிப்போம்னு இந்த ஐடியாவைக் கையில எடுத்திருக்கேன். இனி என் தியேட்டர்ல கூட்டம் களை கட்டும்னு நம்புறேன்” என்று ஃபீலிங்கைக் கொட்டித் தொடந்தார்.

‘‘ ஆயிரம் ரூபாய் கட்டி எங்க தியேட்டர்ல உறுப்பினர் ஆனா போதும். வருடத்துக்கு 35-ல இருந்து 40 படங்கள் ரிலீஸ் ஆகும். எல்லாப் படத்தையும் பார்க்கலாம். இதுதான் கான்செப்ட். ‘என்னய்யா லூஸுத்தனமான ஐடியாவா இருக்கு? இப்படியெல்லாம் பண்ணிட்டு இருந்தா, எங்க தியேட்டருக்கு யார் வர்றது?’னு சக ஊர்க்காரங்களே சண்டைக்கு வர்றாங்க. இது என் தியேட்டர். என் இஷ்டப்படி நடத்துற உரிமை எனக்கு இருக்கு. அப்போ ‘இதனால உங்களுக்கு நஷ்டம் இல்லையா’னு கேட்கலாம். இதுவரை ஓட்டின படங்கள் எல்லாம் எனக்கு லட்சம் லட்சமா லாபம் கொடுத்துடுச்சா என்ன? இந்த மாதிரி ஏதாவது செஞ்சு மக்களை தியேட்டருக்கு வரவெச்சா, கேன்டீன்ல இருக்கிற பப்ஸ், பாப்கார்ன் வித்தும், பார்க்கிங்ல டோக்கன் போட்டும் சம்பாதிச்சுக்குவேன். லாபம் கம்மியாதான் கிடைக்கும். ஆனா, நஷ்டப்பட மாட்டேன்ல?’’ என சிரிக்கிறார் ஆனந்த்.

‘‘திருட்டு வி.சி.டி, டிக்கெட் விலைனு ரசிகர் களை தியேட்டருக்கு வரவிடாம தடுக்கிற காரணங்களை யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். எனக்கு 1,000, 2,000 பேர் வரணும்னுகூட ஆசையில்லை. ஒரு காட்சிக்கு 50 பேர் வந்து படம் பார்த்தா போதும். ஆயிரம் ரூபாய்ங்கிறது குடும்பத்தோட ஒரு படம் பார்க்கிற செலவு. அதனால வருடம் முழுவதும் ஆயிரம் ரூபாயில் படம் பார்ப்பதில் ரசிகர்களுக்கு நஷ்டம் இருக்காது. ஆனா, சில நிபந்தனைகள் இருக்கு. ஒரு படத்தை ஒருமுறைதான் பார்க்க முடியும். ரசிகர் காட்சிக்கு இந்த டிக்கெட் செல்லாது. ஒரு காட்சி ஹவுஸ்ஃபுல்லா இருந்தா, அடுத்த காட்சியில்தான் படம் பார்க்கணும்.

இப்படி நியாயமான நிபந்தனைகளோட இந்த ஐடியாவை அறிமுகப்படுத்தப் போறேன். ஏப்ரல் 1-ல் இருந்து மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேர்ந்துக்கலாம்’’ என முடித்தவர்,

‘‘ உண்மையிலேயே இது ஒரு தியேட்டர்காரனோட வலி. ரசிகர்கள் அதிக ஆதரவு கொடுக்கிறதுலதான் இந்தத் திட்டத்துடைய தொடர்ச்சி இருக்கு. இந்தத் திட்டத்தில் 1,000 பேர் சேர்ந்தாலே போதும். சந்தோஷமா  தியேட்டர் நடத்துவேன் பாஸ்” என நெகிழ்கிறார்!

- கே.ஜி.மணிகண்டன், படங்கள் : ஏ.சிதம்பரம்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close