Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிச்சை எடுக்க நினைத்தோரை கோடீஸ்வரர்களாக்கிய லிங்கா!' - ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு!

பிச்சை எடுக்க நினைத்தோரை கோடீஸ்வரர்களாக்கிய எங்கள் லிங்கா வாழ்க' என திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினி நடித்த, 'லிங்கா' திரைப்படத்தை, தமிழகத்தில் வெளியிட்டதில், 33 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இந்த நஷ்டஈட்டை  திருப்பி தரவேண்டும் என படம் வெளியான நாளில் இருந்து விநியோகஸ்தர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக சில வாரங்களுக்கு முன்  தமிழகம் முழுவதும், பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தினர். கடந்த டிசம்பரில் இருந்து நடந்து வந்த இந்த பிரச்னையில் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் அமைதியாகவே இருந்தனர்.

திடீரென கடந்த மாதம் ரஜினி ரசிகர்கள் சிலர், விளம்பரம் வாயிலாக, 'லிங்கா' படம் குறித்து, வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினால், அங்கெல்லாம் நாங்களும் எதிர் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். வேறு சிலரோ ரஜினி இந்த பிரச்னையில் தலையிட வேண்டும் என்றனர்கள். அதன்பிறகு ரஜினி, பட விநியோகஸ்தர்களுக்கு இடையே சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 'லிங்கா’ பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

அந்த அறிக்கையில்,  "ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் குறித்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை இழப்பீடாக கொடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுபற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலமாக ரஜினிகாந்த் எங்களுக்கு தெரிவித்து விட்டார். அந்த தொகையும் எங்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு விட்டது. நாங்களும் அதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்து விட்டோம். அவர்களும் இதை ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த பிரச்னைக்கும், ரஜினிகாந்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்னையை சுமுகமாக முடிக்க மனிதாபிமானத்துடன் அணுகி எங்களுக்கு உதவிய ரஜினிகாந்துக்கு திரையுலகின் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், திருச்சியில் ரஜினி ரசிகர்கள் வேறுவிதமாக போஸ்டர் ஒட்டி உள்ளனர். 'நஷ்டத்திற்கு அஞ்சி நாட்டை விட்டே ஓடும் நாயகன்கள் மத்தியில் பிச்சை எடுக்க நினைத்தோரை கோடீஸ்வரர்களாக்கிய எங்கள் லிங்கா வாழ்க' என  லிங்கா  திரைப்படத்தின் 100வது நாளுக்கு வாழ்த்தி தெரிவித்து, திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

இந்த போஸ்டர் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார், படம்: தே.தீட்ஷித்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close