Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3 நிமிடங்களில் வெளியேறிய நீதிபதிகள் ... தொடரும் கொம்பன் பரபரப்பு ...


சென்னை: ‘கொம்பன்’ படம் திரையிடப்பட தொடங்கிய, 3 நிமிடங்களில் தொடர்ந்து படத்தை பார்க்க முடியாத சூழ்நிலையில் நீதிபதிகள் வெளியேறி சென்றதோடு, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அறிக்கை அனுப்பினர்.

பட அதிபர் ஞானவேல் ராஜா தயாரித்து, முத்தையா டைரக்டு செய்து, நடிகர் கார்த்தி நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் நேரடியாக இரு குறிப்பிட்ட சாதிகளை இழிவுபடுத்தி இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்படி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், ஏ.சி.ஆறுமுக பெருமாள் ஆதித்தன் ஆகியோர் உள்பட 10 பேர் கொண்ட குழு ‘கொம்பன்’ படத்தை பார்த்து உடனடியாக, அது தொடர்பான அறிக்கையை பேக்ஸ் மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அனுப்பும்படி, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கூறி இருந்தனர்.

இதன்படி நேற்று காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘போர் பிரேம்’ தியேட்டரில் ‘கொம்பன்’ படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், ஏ.சி.ஆறுமுக பெருமாள் ஆதித்தன் இருவரும் காலை 7.50 மணிக்கே அந்த தியேட்டருக்கு வந்து காத்திருந்தனர். காலை 8.40 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட மற்றவர்கள் வந்தனர். ‘கொம்பன்’ படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ உள்பட தகவல்களை டாக்டர் கிருஷ்ணசாமியும், மற்றவர்களும் கேட்டனர். அப்போது அவர்களுக்கும், ‘கொம்பன்’ பட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இந்தநிலையில் நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், ஏ.சி.ஆறுமுக பெருமாள் ஆதித்தன் பொறுமையுடன் காத்திருந்தனர். காலை 9.30 மணிக்கு ஒரு வழியாக ‘கொம்பன்’ படம் திரையிடப்பட தொடங்கியது.

படம் திரையிடப்பட்டு 3 நிமிடங்களுக்குள் நீதிபதிகள் 2 பேரும் தொடர்ந்து படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தியேட்டரில் இருந்து வெளியேறி சென்றனர். நேரடியாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்று அங்கிருந்தபடி அறிக்கை தயாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு பேக்ஸ் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில், "திரைப்படத்தை பார்க்க தொடங்கும் முன் படத்தின் கதை மற்றும் வசனத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அப்படியானால், படத்தை பார்க்கும் போது சர்ச்சைக்குரிய கருத்துகள் வந்தால் படத்தை திருப்பி போட்டு காண்பிக்க வேண்டும் என்று கேட்டேன். அதைத் தொடர்ந்து, படத்தை போட்டு காண்பித்தனர். 2-3 நிமிடங்களிலேயே சர்ச்சைக்குரிய வசனம் வெளியானது. உடனடியாக அதை திருப்பி போடுமாறு கேட்டேன். ஆனால், படக்குழுவினர் படத்தை போட்டுக்காட்டாமல் விட்டுவிட்டனர். படத்தை போட்டுப்பார்த்து அதை நீதிபதிகள் முழுமையாக பார்த்தால் படத்திற்கு தடை விதித்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் படத்தை முழுமையாக போட்டுக்காட்டாமல் தவிர்த்து விட்டனர்" என்றார்.

இதற்கிடையே ’கொம்பன்’ படத்திற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு 1ஆம் தேதி (இன்று) பிற்பகல் 2.15 மணிக்கு கூறப்படும் என்று நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் தெரிவித்தனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close