Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சின்னத்திரை இயக்குநரின் சோக முடிவு.. -காரணம் டப்பிங் சீரியல்களா?

துளசி, பயணம், பந்தம், உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியவர் பாலாஜி யாதவ். அழகான வாழ்க்கை, புது வீடு, என சந்தோஷமாய் வாழ்ந்தவர் தன் வாழ்வின் பொக்கிஷமாய் தத்தெடுத்த குழந்தையையும், அதன் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவரது இந்த திடீர் முடிவுக்கு காரணமாக சொல்லப்படுவது சீரியலில் வாய்ப்பில்லை என்பதும், அதனால் ஏற்பட்ட கடன் பிரச்சனைகளும்.

’பத்து வருடங்களுக்கு முன்பாக சினிமா ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரையுமே மெள்ள மெள்ள தன் பக்கம் இழுத்து  தொலைக்காட்சி முன்பாக கட்டிப் போட வைத்த மந்திர சக்திகளாக திகழ்ந்தவைகள்தான் இந்த சின்னத்திரை சீரியல்கள். வெள்ளித்திரையான சினிமாவில் வாய்ப்பிழந்த கலைஞர்களையும் கூட தங்கள் கிளைகளில் அமர்த்திக் கொண்டு நிழல் கொடுத்த விருட்சமாய் இருந்த தமிழ் சீரியல்களுக்கு கடும்போட்டியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன மொழிமாற்று சீரியல்கள்.

இந்நிலையில் பாலாஜி யாதவின் மறைவு கலைஞர்கள் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.இது இப்படியே தொடர்ந்தால்..?சின்னத்திரை கலைஞர்கள் இங்கே பேசுகிறார்கள்.

கவிதாபாரதி(சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர்):

தொடர்ந்து ஒரு கலைஞன் வேலையில் இருந்துவிட்டு திடீரென அவனுக்கு வேலையில்லை என்ற சூழல் உருவாவதே அந்த கலைஞனை தேவையில்லாத மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லும்..இன்றைக்கு சில தொலைக்காட்சிகளை தவிர பெரும்பாலான தமிழ் தொலைக்காட்சிகள் டப்பிங் சீரியல்களையே ஒளிபரப்புகின்றன.சின்னத்திரை கலைஞர்கள்னு சொன்னா அது வெறும் இயக்குநர்கள் நடிகர்கள் மட்டும் இல்லை.பல ஆயிரம் டெக்னீஷியன்களும் இதில் அடங்குவார்கள்.இந்த டப்பிங் சீரியல்களை பொறுத்தவரை வட இந்திய டிவி சேனல்களில் அவைகளின் மார்கெட்டிங் அதிகமாக இருக்கிறது அதில் கால் பங்கு மார்கெட்டிங் கூட தமிழ் சீரியல்களுக்கு தமிழ் தொலைகாட்சிகள் கொடுப்பதில்லை.அங்கே வருமானம் அதிகமாக இருப்பதால் பிரமாண்டமாக எடுக்கும் சீரியல்களை இங்கே சிலர் மிகக் குறைந்த செலவில் டப்பிங் கொடுத்து தமிழ் சீரியலாக மாற்றி விடுகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வாக 100 சதவீதமும் மொழிமாற்று சீரியல்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க முடிவெடுத்துள்ளோம்.இது பாலாஜி என்னும் தனிநபரின் பிரச்னை அல்ல..இது ஒட்டு மொத்த சின்னத்திரை கலைஞர்களின் பிரச்னையும் கூட.

சஞ்சீவ்,தொகுப்பாளர்,நடிகர்:

பாலாஜி எனக்கு நல்ல நண்பர்.அவரோட இழப்பு ஈடு செய்ய முடியாதது.இப்படி அவர் செய்வார்னு கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கலை.அவர் மனம்விட்டு பேசியிருக்கலாம்.இறந்து போறதுக்கு முந்தியநாள் ராத்திரி 9 மணிக்கு கூட அவரோட உதவியாளர்கள்கிட்ட பேசிட்டு இருந்திருக்கார்.அப்ப கூட அவர் இப்படி ஆவார்னு நாங்க நினைச்சுப் பாக்கலை.யாராவது ஒருத்தருக்கு போன் பண்ணி இருந்தா கூட ஏதாவது மாற்று வழி கண்டு பிடிச்சு அவருக்கு உதவி இருக்க முடியும்.ரொம்ப நல்ல மனிதர் தன்னோட துயரங்களை கூட கடைசி நேரத்துல பகிர்ந்துக்காம மறஞ்சுட்டார்.இதுக்கெல்லாம் சீரியல் வாய்ப்பில்லை...பணப்பிரச்னை இதெல்லாம் முக்கிய காரணமா இருந்தாலும் ஒட்டு மொத்தமா எல்லோரும் சேர்ந்தாதான் இந்த பிரச்னை முடியும்.

ராஜ்பிரபு,சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்:

பாலாஜியுடன் நிறைய சீரியல்களுக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதி இருக்கேன்.என்னோட எழுத்தை உணர்வு பூர்வமா வெளிக் கொண்டு வந்த சிறந்த இயக்குனர் அவர்.இன்னைக்கு சீரியல்கள் அதிகமாக பெருகிட்டு வருவதைப் போலவே சேனல்களும் அதிகமாகிவிட்டன.டப்பிங் சீரியல்கள்தான் வேலைவாய்ப்பு இழக்க காரணம் என்று சொன்னாலும் அது ஒரு காரணமே தவிர, அதையும் தாண்டிய பிரச்னைகள் கலைஞர்களுக்கு நிறையவே இருக்கின்றன.இன்றைக்கு வேலை இருக்கிறது என்று வீடு கார் என வாங்கிதொடங்கி விடுகிறோம்.ஆனால் திடீரென்று வேலை இல்லை என்ற நிலை வந்தால் வாங்கிய பொருளின் மீதான கடன் அப்படியே நின்றுவிடுகிறது.வேலை இல்லை என்கிற மன அழுத்தம் ஒரு பக்கம், கடன்தொல்லை ஒருபக்கம் என ஒரு மனிதன் தற்கொலை வரை போய் இருக்கிறார்.சின்னத்திரை வருமானம் அதன் வேலைவாய்ப்பு இதை மனதில் வைத்து செயல்பட்டாலே இம்மாதிரியான சம்பவங்களை தவிர்க்கலாம்.

பாம்பே சாணக்யா,சின்னத்திரை மற்றும் குறும்பட இயக்குநர்:


கடைசியா நான் ’சொல்லத்தான் நினைக்குறேன்’னு ஒரு சீரியல் இயக்கினேன்.அதுக்கப்புறம் எட்டு மாசம் வேலை இல்லாம இருந்தேன்.பிறகு இன்னொரு இடத்துல வேலை பாத்தேன்.அதுக்குப் பிறகும் 8 மாசம் வேலை இல்லை.உடனே குறும்படங்கள் இயக்க ஆரம்பிச்சுட்டேன்.சின்னத்திரையில வரக்கூடிய வருமானம் இன்னைக்கு இருக்கும், நாளைக்கு இருக்காது. அதனால நான் எனக்குன்னு ஒரு கார் கூட வச்சுக்கல.சீரியல் வாய்ப்பில்லாட்டி எனக்கு தெரிஞ்ச வேற வேலைகளுக்கு மனசை செலுத்துவேன்.பாலாஜி ஒரு உன்னதமான கலைஞர்.அவரோட இழப்புக்கு காரணம் சீரியலை மட்டுமே நம்பினதும் தான்.அதனால் சாவு எல்லாத்துக்கும் தீர்வு இல்ல.உங்க திறமையை சரியான முறையில பயன்படுத்துங்க.போட்டி இல்லாத தொழில்களே இல்லை. 

-பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

[X] Close