Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரைத்துறையினர் போட்டி போட்டுக்கொண்டு ஜெயலலிதாவை வாழ்த்துகிறார்கள்! காரணம் என்ன?

மே11 அன்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை என்று தீர்ப்பு வந்ததும், அதிமுகவினரைவிட அதிவேகமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொன்னது திரைப்படத்துறையினர்தாம். தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர் சங்கம், நடிகர்சங்கம், தொழிலாளர்கள் சங்கம் ஆகிய எல்லாச் சங்கங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் சொல்லி அறிக்கை விடுத்தனர்.

தயாரிப்பாளர்சங்கம், இயக்குநர்சங்கம் தொழிலாளர்சங்கம் ஆகியன கூட்டாக விடுத்திருந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வெற்றி தமிழ்த்திரையுலக்குக் கிடைத்த வெற்றி என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இது உலகத்தமிழர்களுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி என்று சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுப் பல ஆண்டுகாலம் நாட்டுமக்களுக்குப் பணியாற்ற இறைவனை வேண்டுவதாக நடிகர்சங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

திரையுலகினர் போட்டிபோட்டுக்கொண்டு ஜெயலலிதாவை ஆதரிக்க என்ன காரணம்? அப்படி அவர் திரையுலகுக்கு என்னென்ன நன்மைகள் செய்துவிட்டார்? அரசிடமிருந்து திரைத்துறைக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகள் என்னென்ன என்று பார்த்தால், சிறுபடங்களுக்கு மானியத்தொகை, தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற படங்களுக்கு வரிவிலக்கு, திரைப்படவிருதுகள் ஆகியன முக்கியமானது என்கிறார்கள்.

2011 இல் அதிமுக அரசு வந்ததிலிருந்து அரசாங்கம் மூலம் தமிழ்த்திரையுலகுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகள் எதுவுமே சரியாகக் கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. தமிழில் பெயரிட்டாலே வரிவிலக்கு என்று கடந்த திமுகஅரசு அறிவித்திருந்தது. அதிமுக அரசு வந்தவுடன், தமிழில் பெயரிட்டால் மட்டும் போதாது தணிக்கைத்துறையினரிடம் யு சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் அதோடு அரசால் நியமிக்கப்படும் குழுவினர் படத்தைப் பார்த்து சான்றிதழ் தந்தால்தான் வரிவிலக்கு என்று சொல்லிவிட்டார்கள்.

இதனால் வரிவிலக்குக் குழுவினர் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் தருவதற்காகவே ஒரு தொகை செலவு செய்யவேண்டியிருக்கிறதென்றும் அதன்பின் அமைச்சரிடம் கையெழுத்து வாங்குவதற்காகப் பெரும்தொகை செலவு செய்யவேண்டியிருக்கிறதென்றும் தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம். படத்தின் பட்ஜெட்டைப் பொறுத்து இந்தப்படத்துக்கு வரிவிலக்குக் கொடுத்தால் உங்களுக்கு இவ்வளவு வருமானம் கிடைக்கும் அதனால் எங்களுக்கு இவ்வளவு கொடுக்கவேண்டும் என்று அரசுத்தரப்பில் கேட்பதாகவும் அதற்காக இடைத்தரகர்கள் உருவாகியிருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி நிவர்த்தி தேடுவதற்காகப் பலமுறை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க திரைத்துறையினர் அனுமதி கேட்டும் அவர் அனுமதி தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

அப்படியிருந்தும் ஜெயலலிதாவைப் போட்டிபோட்டுக் கொண்டு இவர்கள் வாழ்த்தக் காரணம் என்னவென்று திரைத்துறையில் விசாரித்தால், பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் உள்ளவர்களின் அனுசரணை இருக்கிறதென்று சொன்னால்தான் மதிப்பு அப்படி ஒரு மதிப்பு இருந்தால்தான் இவரைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தால் அரசாங்கத்திடம் பேசி நமக்கான சலுகைகளைச் சரியாகப் பெற்றுத்தருவார் என்று உறுப்பினர்கள் நினைக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் போட்டியிடுகிறவர்கள் முதல்வரின் ஆசி எங்களுக்குத்தான் என்று பிரச்சாரம் செய்யக் காரணமும் இதுதான் என்று சொல்கிறார்கள். ஆக இங்கிருப்பவர்களும் அடுத்த தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறார்கள் அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று வேதனையுடன் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close