Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லிங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? ரஜினியின் நண்பர் விளக்கம்!

'லிங்கா 'படத்தின் பிரச்னையில் ஆரம்பத்திலிருந்து என்ன நடந்தது என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நண்பரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறார்.

 ''இதுவரை நாங்கள் 'லிங்கா' பட பிரச்னை சம்பந்தமாக பிரஸ்மீட்டிங் வைத்து எதுவும் சொல்லாமல் இருந்தோம். அதனை ரொம்ப வீக்காக நினைத்துக்கொண்டு சிலர் ஒன்று மாற்றி ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இப்போதும் நாங்கள் எதுவும் பேசாமல் இருந்தோம் என்றால், அவர்கள் சொல்வதே உண்மையாகி விடும்'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் திருப்பூர் சுப்ரமணியம். நடிகர் ரஜினிக்கு நெருக்கமான விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம், ரஜினியின் அனுமதியின் பேரில் லிங்கா பட பிரச்னை குறித்து பிரஸ் மீட் வைக்கப்போகிறார் என்பதே இப்போதைய திரையுலக பரபரப்பு. மேற்கொண்டு நம்மிடம் பேசிய அவர், "திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலுதான் பிரச்னைகளுக்கு எல்லாம் மூல காரணம். அவர் ஏழரை கோடிக்கு 'லிங்கா' படத்தை விலைக்கு வாங்கினார். வாங்கின விலையில் 90 சதவீதம் பணத்தை தியேட்டர்காரர்களிடம் ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸாக வாங்கிவிட்டார். இவருடைய முதலீடு வெறும் 10 சதவீதம்தான். அதை வைத்து படம் ரிலீஸ் பண்ணுகிறார். நஷ்டம் என்று பிரச்னை கிளம்பியதும், முதன்முதலில் செட்டில்மென்ட் வாங்கியதும் இவர்தான். லிங்கா படத்தில் நஷ்டம் என்று பிரச்னை கிளம்பியதும், ரஜினி தரப்பில் பனிரெண்டரை கோடி கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். பணத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்து பிரச்னையை பேசி சுமூகமாக முடித்துக் கொடுக்கும் பொறுப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவுக்குக் கொடுக்கப்பட்டது.

முதன்முதலில் திருச்சி விநியோகஸ்தர் சிங்காரவேலுவும், திருநெல்வேலி விநியோகஸ்தர் ரூபனும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவிடம் ஆளுக்கு 35 லட்சம் வாங்கிக் கொண்டு, 'லிங்கா' சம்பந்தமாக எந்தவித பிரச்னையும் பண்ணப்போவது இல்லை' என்று ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்கள். ''எங்களுக்கு வர வேண்டிய பணத்தை ஆளுக்கு 35 லட்சம் பெற்றுக் கொண்டோம். நாங்கள் முழு மனதோட இந்த பணத்தை வாங்கிக் கொண்டோம்' என்றும் இருவரும் ஸ்டாம் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளனர். தாணு அதை போட்டோவும் எடுத்து கொண்டார். மற்றவர்களுக்கும் படிப்படியாக பணம் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது. இப்போது பணம் வர வேண்டியது வேந்தர் மூவிஸ், கோயம்புத்தூர் விநியோகஸ்தர், நாகர்கோவில் விநியோகஸ்தர் ஆகிய மூன்று பேருக்கு மட்டும்தான். மீதி எல்லோருக்கும் பணம் செட்டில் பண்ணியாகிவிட்டது. செட்டில் பண்ணியவர்கள் எதற்கு மீட்டிங் போட்டு பேசுகிறார்கள். சிங்காரவேலனுக்கு வரவேண்டிய பணம் முழுவதையும் அவர் வாங்கிவிட்டார். பிறகு எதற்கு பிரச்னை செய்ய வேண்டும்? ரஜினிகாந்தே என்னிடம் ஏற்கெனவே பேசிவிட்டார். ஒரு அறிக்கை விடுங்கள் என்று சொன்னார். 'அவர்கள் அறிக்கை விட்டுவிட்டார்கள். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

உங்களுக்குதான் எல்லா விவரமும் தெரியும்' என்று சொன்னார். அதற்கு நான், 'வேண்டாம் சார். நான் அறிக்கை விட்டால் அவர்கள் மீண்டும் அறிக்கை கொடுத்துகொண்டு இருப்பார்கள். நான் பிரஸ் மீட் வைத்து விடுகிறேன். எல்லாம் ஓப்பனா சொல்லிடுறேன்' என்று சொன்னேன். 'பிரஸ் மீட் வேண்டுமா? பிரஸ் மீட் போட்டால் ஏடாகூடமாக கேட்பார்கள்' என்று சொன்னார். 'என்ன கேட்டாலும் நான் ரெடி சார். என் மனசுல ஒண்ணும் இல்லை. அவர்கள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல ரெடியா இருக்கேன்' என்றேன். 'தாராளமாக செய்யுங்க. என்ன நடந்தது என்று உண்மையை சொல்லுங்க. ஆரம்பத்துல இருந்து என்ன நடந்ததோ அப்படியே சொல்லிடுங்க. நீங்க ஒன்றும் மறைக்க வேண்டாம் நம்மகிட்ட எந்த பொய்யும் கிடையாது.' என்று ரஜினி சொல்லிவிட்டார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து விவரங்களை சொல்ல இருக்கிறேன்" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்