Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிக்கோ, எலிக்கோ நான் போட்டி இல்லை: நடிகர் சந்தானம் நையாண்டி!

எலிக்கோ, புலிக்கோ ஒரு போதும் எனது படம் போட்டியாக இருக்காது என்று காமெடி நடிகர் சந்தானம் நையாண்டியாக கூறினார்.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடித்தார் காமெடி நடிகரான சந்தானம். இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'இனிமேல் இப்படிதான்' என்ற படம் மூலமாக மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படம் வரும் 12ஆம் தேதி வெளி வருகிறது. அதுவும் சந்தானம் தனது சொந்த தயாரிப்பில் படமெடுத்து உள்ளதால் அதை வெற்றி படமாக மாற்ற தீயா வேலை செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படம் வெற்றிபெற பல மாவட்ட ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் கதை 'இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?’ என்பதை பற்றி விளக்குவதாக இருக்கும் என பேசிய சந்தானம், இது வடிவேலுவின் எலிக்கோ, புலிக்கோ ஒரு போதும் போட்டியாக இருக்காது என நையாண்டியாக கூறினார். ஆனால் ரசிகர்கள் எந்த திரைப்படத்தை விரும்புகிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், :தயாரிப்பாளராக இருப்பது சரக்கு அடிப்பவன் மாதிரி. அடிச்ச பிறகு ஏண்டா அடிச்சோம்னு தோணும். பின் மீண்டும் அதை தேடுவோம். அது போலத்தான் தயாரிப்பாளர் வேலை. மேலும் கதாநாயகனாக நடிப்பது சுலபம். ஆனால் காமெடியனாக நடிப்பது கடினம். வில்லனா நடிச்சா நீங்கள் பார்ப்பது கடினம்" என காமெடியாக பதில் கூறினார்.

மீண்டும் கதாநாயகனாக மூன்று படங்களில் நடிக்க இருப்பதாகவும், அதிலும் சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க ஆசை என்றும் சந்தானம் தெரிவித்தார். எலிக்கோ, புலிக்கோ போட்டியாளராக சந்தானம் வலம் வருகிறார் என்பது மட்டும் உறுதி. -சி.சந்திரசேகரன் ( மாணவ பத்திரிகையாளர்) படங்கள்: நா.ராஜமுருகன்

எடிட்டர் சாய்ஸ்

[X] Close