Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகுமார், கார்த்தியை அடுத்து விஷால்.

  சசிகுமாரை வைத்து குட்டிப்புலி, கார்த்தியை வைத்து கொம்பன் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா அடுத்து விஷாலை இயக்கப்போகிறாராம். கொம்பன் படம் வெற்றி என்றதுமே முத்தையாவுக்குப் பல நடிகர்களிடமிருந்தும் அழைப்பு இருந்தது என்று சொல்லப்படுகிறது.

அப்போது அவர் சொன்ன ஒருவரிக்கதை விஷாலுக்குப் பிடித்திருந்ததாம். அந்தக்கதையை முழுமையாகத் திரைக்கதை வடிவில் எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார்களாம். இப்போது முழுக்கதையையும் தயார் செய்து சொல்லியிருக்கிறார், சின்னச்சின்ன திருத்தங்களுடன் அந்தக்கதையை ஏற்றுக்கொண்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தை முதலில் விஷாலே தயாரிப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது மதுரைஅன்பு இந்தப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். வெள்ளக்காரதுரை படத்தைத் தயாரித்த அவர் இப்போது தனுஷ் நடிக்கும் வேலையில்லாப்பட்டதாரி படத்தின் இரண்டாம்பாகத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். மூன்றாவதாக இந்தப்படத்தை அவர் தயாரிக்கவிருக்கிறார்.

விஷால், இப்போது சுசீந்திரன் இயக்கும் பாயும்புலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறாராம். அதைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் கூடவே லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்தப்படங்கள் முடிந்தவுடன் முத்தையா இயக்கும் படத்தைத் தொடங்குவார்களாம். இப்போதைக்கு இதுதான் திட்டம், முந்தைய படங்களில் ஏதேனும் மாற்றங்கள் நடந்தாலும் இந்தப்படத்தை உடனே தொடங்குகிற அளவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்களாம். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close