Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலுக்கு ஓர் கடிதம்!

மல் சார் வணக்கம்...!

மீடியா என்னும் அசுரனின் வளர்ச்சியை பல வருடங்களுக்கு முன்பே கண்டுகொண்ட நடிப்பின் அசுரன் நீங்கள். எனவே, இந்த கடிதம் உங்களை வந்து சேரும் என நம்புகிறேன், வந்து சேராமலும் போகலாம்... இந்த பதிவை படிக்கும் உங்களின் ரசிகர்கள் பாதியிலேயே இந்த பதிவை படிப்பதை நிறுத்தலாம்... ஆனாலும், நான் நினைத்ததை பதிவு செய்ய நினைக்கிறேன்..

ஈரோடு பாரதி தியேட்டரில் 'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்காக இரண்டடி அகலமுள்ள டிக்கெட் கவுண்டரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மூச்சு முட்ட காத்திருந்து, வேர்வையில் நனைந்து, கசங்கிய ஆடையுடன் அந்த படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை

ஈரோடு ஆனூர் தியேட்டரில் பெண்களைப்போல் கண்ணீர் சிந்தியபடி 'மகாநதி' படத்தை பார்த்தபோதும் தங்களின் மீதான ஆச்சரியம் குறையவில்லை

சென்ற மாதம் தொலைதூர பயணம் சென்று வருகையில் இளையராஜா ஹிட்ஸில் இடம்பெற்ற 'உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்' (அபூர்வ சகோதரர்கள்) பாடலை சிலாகித்து பிறகு சொன்னேன், இதேவயதில் ( 30+) கமல் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை முழுவதுமாக எழுதி படத்தை வெற்றியடைய வைத்துவிட்டார். நானோ ரசித்து கொண்டிருக்கிறேன் என்று... அதென்னவோ உங்களை சிலாகிப்பதில் பெருமை எனக்கு...

ஒரு பேட்டியில் சொன்னீர்கள், '' 'சிவாஜி' எனும் சிங்கத்துக்கு தமிழ் திரையுலகினர் வெறும் தயிர்சாதம் மட்டுமே கொடுத்து வந்தார்கள். அதனாலேயே எனக்கான உணவை (கதையை) நானே சமைத்துக் கொள்கிறேன்'' என்று. அந்த சமையல் ஆரம்ப காலத்தில் நன்றாகவே இருந்து வந்தது. முதலில் 'தேவர் மகன்' தமிழின் தலைசிறந்த 10 படங்களின் பெயர் சொன்னால் அதை தவிர்த்து சொல்ல முடியாது. படத்தின் பெயர் ஜாதி சார்ந்து இருந்தாலும் படம், இரு சகோதரர்களின் ஈகோ யுத்தம், படிப்பறிவு, வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல போன்ற விஷயங்களையே தூக்கி பிடித்தது. இப்போது சமையல் எங்களுக்கு சற்று சலித்துவிட்டது. தங்களின் சமையலை தாங்களே செய்யுங்கள். அதில் தவறில்லை. அதில் சமீபமாக ஒரு நோய்த்தன்மை வந்துள்ளதாக எண்ணுகிறேன்...

* வாழ்வே மாயம் - கேன்சர்

* ஆளவந்தான் - த்ரோட் கேன்சர்

* தசாவதாரம் (அவ்தார் சிங்) - கேன்சர்

* மன்மதன் அம்பு (ரமேஷ் அரவிந்த்) - கேன்சர்

* உத்தம வில்லன் - ப்ரைன் டியூமர்

இதில் 'உத்தமவில்லன்' கதை, வசூல்ராஜா-வில் கேன்சர் வந்த ஜாகீர் உசேன் வசனத்தில் அடங்கியிருக்கிறது. 'அம்மாவ மெக்காவுக்கு அனுப்பனும், தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும், சொந்த வீடு வாங்கணும் இதெல்லாம் முடியுமா'ன்னு வரும். கேன்சர் பாதிப்புடைய கேரக்டர் சமீப காலங்களில் நீங்கள் அதிகம் சொன்னதால், எங்களுக்கு மிகவும் போரடிக்கிறது. அதுதான் பிரச்னை.

நீங்கள் உங்கள் படத்தில், பாலச்சந்தரை வைத்து கிண்டலடித்து கொண்டால் மட்டும், அது நியாயம் என்றாகாது. உத்தமவில்லனின் ஒரே ஆறுதல் பாலச்சந்தர் இருக்கையில் உங்களை அவரே அமரவைப்பார். நீங்கள் தொழுத இரு சிகரங்களின் நாற்காலியிலும் நீங்கள் அமர்ந்துவிட்டீர்கள். ஒன்று நடிப்பின் சிகரம் மற்றொன்று இயக்குனர் சிகரம். அந்த படத்தில் உத்தமனின் பகுதிக்கு, கிரேசி மோகனின் பங்கிருந்திருந்தால் இவ்வளவு தொய்வு ஏற்பட்டிருக்காது என்பது என் கருத்து.

அபூர்வ சகோதரர்கள், குணா, தேவர்மகன், மகாநதி, மகளிர் மட்டும் போன்ற படங்கள் அழுத்தமான கதைகளை கொண்டிருந்தபோதும் வெற்றியை சுவைத்தது. அதுவும் உங்கள் எழுத்துகள்தான். ஒவ்வொரு கதைக்குமான வித்தியாசம் வெற்றியை சுவைக்கிற ஆர்வம், தற்போது தங்களுக்கு தேவையில்லை என நினைக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன். ஆளவந்தான்-க்கு பிறகு தோல்வி படம் என்றால் மன்மதன் அம்பு தான். மற்றபடி தங்களின் பேனா நிறைய வெற்றிகளையே பெற்றிருக்கிறது.

சமீப காலத்தில் உங்கள் படங்களின் கதை, திரைக்கதை, வசனம், நடனம், இயக்கம், பாடல்கள் என அனைத்து துறைகளிலும் தங்களின் பெயர் இடம் பெறுகிறது. இது புதிய திறமையாளர்களின் புதுமையான பங்களிப்பை தங்களின் படங்கள் மறுக்கிறது என்பதும் என் கருத்து. சரியாக சொன்னால் தங்களைவிட புதுமையை புகுத்தியவர்கள் / புகுத்துபவர்கள் இந்திய சினிமாவில் யாருமில்லை. அது அதிமேதாவித் தனமானது. வெகுஜன புதுமை புகுத்திகளுக்கும் இந்த நேரத்தில் தாங்கள் வாய்ப்பளிக்கலாம். உதாரணமாக மிஷ்கின், நலன், கார்த்திக் சுப்புராஜ், அல்போன்ஸ் போன்றவர்களுக்கு.

முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தை ஏன் ரீமேக் செய்கிறீர்கள் எனக்கேட்டபோது நீங்கள் சொன்னீர்கள், "எனக்கு பொதுவாக ரீமேக் படங்கள் செய்வதில் உடன்பாடு கிடையாது. இந்த படத்திற்கு 45 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டார்கள் தவிர நல்ல சம்பளமும் கொடுத்தார்கள். அதனால் ஒத்துக்கொண்டேன்" என்று. எனக்கு தெரிந்து 'சத்யா' வுக்கு பிறகு ரீமேக் செய்து நீங்கள் நடித்த படம் 'குருதிப்புனல்'. பிறகு 'வசூல்ராஜா' தான். அது நீங்கள்தான் வசூல்ராஜா என மீண்டும் நிரூபித்தது. அதே கூட்டணி மீண்டும் இணையாதது ரசிகர்களுக்கு வருத்தம்.

அதற்கு பிறகு நீங்கள் ரீமேக் செய்து நடித்தபடம் 'உன்னைப்போல்  ஒருவன்' அதில் எனக்கு சிறிதும் ஒப்புதல் இல்லை. அது நீங்கள் செய்ய வேண்டிய கேரக்டர் கிடையாது. அந்த கேரக்டரில் தங்களின் சமகால நடிகர்கள் சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற யாரேனும் நடித்திருந்து, நீங்கள் கமிஷனர் வேடத்தில் நடித்திருந்தாலோ அல்லது படத்தை தயாரித்திருந்தாலோ அந்த படத்தின் ரிசல்ட் வேறு மாதிரி இருந்திருக்கும்.

தற்போது வெளிவரப்போகும். 'பாபநாசம்' எனும் ரீமேக் படத்துக்கான காரணம் இதுவரை விளங்கவில்லை. நல்ல கதை என்பதை தாண்டி, அந்த படத்தில் எதுவுமில்லை. அதுவும் மேக்கப் என்பதற்கு முழு அர்த்தம் அளிக்கும் நீங்கள் ஒட்டுமீசை சகிதம் நடித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மோகன்லாலே திரிசியத்தில் வந்து போயிருப்பார் அந்த போலீஸ் ஸ்டேசன் சீன் மற்றும் சில சீன்களை தவிர்த்து பார்த்தால் உங்களுக்கு பெரிய வேலையில்லை. உங்களுக்காக திரைக்கதையில் மாற்றம் ஏதும் செய்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் தேவர் மகனுக்கு பிறகு ரீமேக் செய்யவில்லை

'குருதிப்புனல்' மட்டுமே ரீமேக். அதற்கான நியாயம் அதில் தெரிந்தது. அந்த கேரக்டரை உங்களைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது. அப்படி இருந்த நீங்கள், நான் மேற்சொன்ன இரண்டு படங்களை ரீமேக் செய்ததன் காரணம் புரியவில்லை. நீங்கள் முன்பு செய்தது போல் ஒரு ஆக்சன் படம், ஒரு காமெடி படம், ஒரு மசாலா படம் என்ற பார்முலாவையாவது கடைபிடித்தால் நன்றாக இருக்கும் .

வெற்றி என்பது உங்களுக்கு தேவையில்லாததாக இருக்கலாம், தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதும் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்ட படங்களை எடுப்பதும் தங்களின் தற்போதைய லட்சியமாக இருக்கலாம். ஆனால், உங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது நல்ல வெற்றி. விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டின்போதே எங்களின் ஆர்வமும், நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கிற அன்பையும் நீங்கள் கண்டிருப்பீர்கள். தங்களின் படம் முடிந்து வருபவர்கள் 'என்னய்யா படம் இப்படி இருக்கு' என்று சொன்னால் நாங்கள் மனதளவில் மிக சோர்வடைகிறோம்.

வசூல்ராஜா-வில் 'உள்ளத்தில் காயங்கள் உண்டு. அதை நான் மறைக்கிறேன் ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்' என்று பாடுவீர்கள். உண்மையில் அது தாங்கள் காயப்பட்டிருந்த நேரம் என்பதை நாங்களும் அறிவோம். அதே பாடலில் 'சமுத்திரம் பெரிதா, தேன்துளி பெரிதா, தேன் தான் அது நான் தான்' என்றும் பாடியிருப்பீர்கள். அதுபோன்ற சூழ்நிலையிலேயே எங்கள் மனதை சந்தோசப்படுத்திய நீங்கள், தற்போது தங்களின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியிருகின்ற இந்த தருணத்தில் எங்களுக்கு அதைவிட சிறந்த காமெடி படத்தை எங்களுக்கு தந்திருக்க வேண்டாமா?

இன்றும் தொலைதூர பயணங்களின் போதும், மனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் நேரங்களின்போதும், என்னை மீட்டெடுக்க உதவுவது அவ்வை சண்முகி, தெனாலி, அபூர்வ சகோதரர்கள் படங்கள்தான். தாங்கள் 'தேன் துளி' என்று ரசிகர்களுக்கும்,  மற்றவர்களுக்கும் நிரூபிக்கவேண்டிய நேரமிது. தெனாலி, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா போல் கமல்'ஹாஸ்ய' ஹிட்டை 'கிரேசி' மோகன் காம்பினேசனில் எதிர்பார்க்கிறோம். நீங்கள் அதை விரைவில் எங்களுக்கு தருவீர்கள் எனவும் நம்புகிறோம்.

நீங்கள் தேன் துளி என மீண்டும் நிரூபியுங்கள் நாங்கள் காத்திருக்கிறோம் அந்த வெற்றியை கொண்டாடுவதற்கு! என்னுடைய விருப்பம் ஒன்றுதான் எனக்கு அன்பேசிவம்-மும் வேண்டும் பஞ்சதந்திரம்-மும் வேண்டும்; மன்மதன் அம்பு மட்டும் வேண்டாம். ஒன்றைவிடுத்து மற்றொன்றை மட்டும் கேட்கவில்லை நான்.  'சகலகலா வல்லவன்' சகலத்தையும் தொட்டு எப்போதும் போல் ஜெயிக்க வேண்டும் 'வசூல் ராஜா'-வாக!

-தெனாலி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close