Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம்,அதிருப்தியில் இருக்கிறார்களா திரையுலகினர்?

அரசாங்கத்தை அணுகி தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகத் திரையுலகினர் ஆட்சியிலிருப்பவர்களிடம் மிகவும் அணுக்கமாக நடந்துகொள்வார்கள். ஏதாவதொரு காரணத்தை வைத்து முதலமைச்சரைச் சந்திக்க விரும்புவார்கள் அவருக்குப் பாராட்டுவிழா என்பார்கள் இப்படிப் பலவகையான நிகழ்வுகளை கடந்தகாலங்களில் பார்த்திருக்கிறோம்.

2011 ஆம் ஆண்டு தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றதிலிருந்து பலமுறை அவரைச் சந்திக்க நேரம் கேட்டதாகவும் நேரம் தரவில்லை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனாலும் விடாது திரைத்துறையினரும் முயன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

இதுவரையிலும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி அவர்கள் புகழும்போது, தொழிலதிபர்கள் ஆளும்கட்சியை அனுசரித்து நடந்துகொள்ளவேண்டியது இயல்புதான் என்கிற கருத்து இருந்தது.
 
இப்போது இதுவரை இல்லாதவகையில், விரைவில் நடக்கவிருக்கும் ஆர்கேநகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜெயலலிதாவை ஆதரித்துத் திரையுலகின் அனைத்துச்சங்கங்களும் பரப்புரை செய்யும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதுசம்பந்தமாக ஜூன் 22 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பார்கள்சங்கத்தலைவர் கலைப்புலிதாணு, பல்வேறு சோதனைகளைத் தாண்டி வெற்றி எனும் மகுடம் சூடி மீண்டும் அரியணை கண்டிருக்கும் தமிழ்நாட்டின் நிரந்தரமுதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்கேநகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார், அவரது அகலம் போற்றும் வெற்றிக்காக தமிழ்த்திரையுலகினர் சார்பில் ஜூன் 24 அன்று மாலை 3 மணி முதல் பிரச்சாரம் நடைபெற உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.  மேலும், ஜெயலலிதா கலையுலகத்துக்கு ஏராளமான நன்மைகள் செய்திருக்கிறார் அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே பிரச்சாரம் செய்யவுள்ளோம் என்று சொல்லியிருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடுவதால் ஜெயலலிதா ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் தான். அப்படியிருக்கும் போது அவரை எப்படி ஆதரித்துப் பிரச்சாரம் செய்யமுடியும் என்கிற குமுறல் திரையுலகினர் மத்தியில் இருக்கிறது. திரையுலகில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் வலுக்கட்டாயமாக அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யச் சொல்வதா? என்கிற குரல்கள் எழுகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய், ஜெயலலிதா திரையுலகினருக்குச் செய்த நன்மைகள் எவை? அதுவும் இம்முறை ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் அவர் செய்த நன்மைகள் என்ன? என்பதைச் சொல்ல முடியுமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

யாரும் வெளிப்படையாகப் பேசாவிட்டாலும், திரையுலகைச் சேர்ந்த இரண்டுபேர் சந்தித்துக்கொண்டால், இப்படிச் செய்வது எப்படிச் சரி? என்கிற பேச்சுதான் நடந்துகொண்டிருக்கிறதாம். ஜெயலலிதா தற்போது முதலமைச்சராகவும் இருப்பதால் யாரும் எதிராகப் பேசப் பயப்படுகிறார்களாம். இதுவரை இல்லாத நடைமுறையாக இப்படி ஒன்றைத் தொடங்கி வைத்திருப்பதன் மூலம் இனி எதிர்காலத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக்கட்சிப்பொறுப்பில் இருக்கும் நேரத்தில் நடக்கும் தேர்தல்களிலெல்லாம் அந்தக்கட்சிக்கு ஆதரவாக நடிகர்கள் பிரச்சாரம் செய்யவேண்டியிருக்குமோ என்கிற அச்சத்திலும் இருக்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்