Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ் திரையுலகின் தனிப்பெரும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், தீராத் துயரமும் அடைந்தேன். திரைப்பட இசையமைப்பாளராக 62 ஆண்டுகளுக்கு அறிமுகமான விஸ்வநாதன் திரை இசையில் எண்ணற்ற புதுமைகளை படைத்தவர்.

தனது இசையால் தமிழ்நாட்டு மக்களை கட்டிப்போட்டவர். வீரமூட்டும் பாடல்களாக இருந்தாலும், காதல் பாடல்களாக இருந்தாலும், சோகப்பாடல்களாக இருந்தாலும் அதற்கேற்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்துவது தான் இவரது இசையின் மகத்துவம். இவரது இசையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது; இதற்கு நானும் விதிவிலக்கல்ல. தனிப்பட்ட வாழ்க்கையிலும் குழந்தையைப் போல பழகக்கூடியவர். விருந்தோம்பலில் சிறந்தவர். இசையில் சிறந்தவன் என்ற கர்வம் இல்லாதவர். அதனால் தான் இப்போது அறிமுகமான இசையமைப்பாளர்களுடன் கூட இணைந்து பணியாற்றுவது அவருக்கு சாத்தியமானது.

ஆனால், 1200 படங்களுக்கு இசையமைத்தும் இவரது திறமை நடுவண் அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான் சோகம். இவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி வேல்முருகன்:  தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக கோலோச்சிய மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் 87 வயதில் நம்மை பிரிந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது.

கேரளாவில் இளம்பிராயத்தில் வறுமையில் வாடிய போதும் தணியா இசை ஆர்வம் கொண்டவராக இருந்தவர். ஜெனோவா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் கால் பதித்து 1,200 படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.வி. அவர்கள். தமிழ் சினிமாவின் உன்னதமான படங்களுக்கு இசை அமைத்து காலத்தால் அழியாப் புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் 4 தலைமுறைகளைக் கண்டவர். இன்றைய மூத்த இசை அமைப்பாளர்களுக்கும் குருவாக திகழ்ந்தவர்.

இசை அமைப்பாளராக மட்டுமின்றி பாடகராக, நடிகராகவும் தமது பன்முகத்தை வெளிப்படுத்தியவர் எம்.எஸ்.வி. அவர்கள். இன்றளவும் பள்ளிக்கூடங்களில் இசைக்கப்படும் நமது தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசை அமைத்தவரும் எம்.எஸ்.வி. அவர்களே. மகாகவி பாரதியார், பாரதிதாசன் பாடல்களுக்கும் இசை அமைத்தவர். தமிழ்த் திரைப்படங்கள் இருக்கும் வரை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களது பெயரும் புகழும் நிலைத்து நிற்கும். இத்தனை அளப்பரிய சாதனை படைத்த இசைமேதை எம்.எஸ்.வி. அவர்களுக்கு வாழ்நாளில் தேசிய அளவிலான விருதுகள் அளிக்கப்படாதது பெரும் சோகத்துக்குரியது. இந்த தமிழ் மண்ணை இசையால் தாலாட்டிய மாபெரும் இசைமாமேதை இன்று நம்மை துயரத்தில் ஆழ்த்திவிட்டு பிரிந்துவிட்டார். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close