Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு தன் இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி'!

 4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு தன் இசையால் உயிர் கொடுத்தவர் நம் பேரன்புக்குரிய 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. என்று நடிகர் சிவக்குமார் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, நடிகர் சிவக்குமார் தனது ஃபேஸ் புக் பக்கத்தில், ''1940களின் பிற்பகுதி. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. ஜூபிடர் நிறுவனம் 'கண்ணகி' -'ராஜகுமாரி' - படங்கள் மூலம் அன்று புகழ் பெற்றிருந்தது.

ஒரு புதுப்படத்துக்கு, மியூசிக் டைரக்டர் பாடல் கம்போஸ் செய்து கொண்டிருந்தார். டியூன் திருப்திகரமாக வரவில்லை. நாளை பார்க்கலாம் என்று இரவு 9 மணிக்கு கிளம்பி விட்டார்.
ஆபீசில், மேஜை நாற்காலிகளைத் துடைத்து, அறையைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து, சாமி படங்களுக்கு மாலை போட்டு, பூஜைக்கு தயார் செய்து வைக்கும் ஆபீஸ் பையன் ஹார்மோனியத்தை திறந்து ஒரு டியூன் வாசித்தான். கூட இருந்த சிறுவன் பலே என்றான்.

மறுநாள் மியூசிக் டைரக்டர் வந்தார். ஹார்மோனியம் இடம் மாறி இருந்தது. 'யார்ரா அவன் பொட்டிய தொட்டது' - சத்தம் போட்டார். ஒரு நிமிட அமைதி. 'சார், இவன் நேத்து
ஹார்மோனியத்தில ஒரு டியூன் வாசிச்சான் சார்'- உடன் இருந்த பையன் போட்டுக் கொடுத்தான்.

ஒரு வினாடி அவருக்கு கோபம்... 'இங்கே வாடா'.. நடுங்கிக்கொண்டே வந்தான் சிறுவன். 'எங்கே அதை வாசிச்சுக்காட்டு'... வாசித்தான்... மீண்டும் ஒரு நிமிடம் அமைதி... ' சரி, இந்த டியூனை நீதான் போட்டேன்னு யார் கிட்டயும் சொல்லாதே'...

படத்தில், அந்த டியூனில் வந்த பாட்டு 'ஹிட்'!.. அதே படத்துக்கு சிறுவன் போட்ட, இன்னொரு டியூனும் 'ஹிட்'!. அடுத்த படத்திலும் சிறுவன் கம்போஸ் செய்த 3 பாடல்கள் 'ஹிட்'.. ஆனால், மியூசிக் டைரக்டர் பெயர் மட்டும், டைட்டிலில்... சிறுவனுக்கு சிறு பாராட்டுக் கூட இல்லை. ஜூபிடர் நிறுவனம் சென்னைக்கு குடி பெயர்ந்தது... காமிரா, லைட், மைக், மேஜை நாற்காலி எல்லாம் வேன்களில் ஏற்றி, வண்டிகள் புறப்படத்தயாராக இருந்தன.

ஓடி வந்த மியூசிக் டைரக்டர் 'முதலாளி, எதை வேணும்னாலும் விட்டுட்டுப் போங்க. இவனை மட்டும் விட்டுடாதீங்க. இவன், தங்கம், வைரம், வைடூரியம்!! உங்க சமீபத்திய படங்கள்ள 'ஹிட்டான பாட்டு பூராவும் இவன் போட்டது' என்றார். சிறுவன் கண்களில் ரத்தக் கண்ணீர்... மடார் என்று குருவின் காலைக் கட்டிக்கொண்டு கண்ணீரால் அவர் பாதங்களுக்கு அபிசேகம் செய்தான்..

அவன் தான் - கேரளாவில் சினிமா தியேட்டரில், வடை முறுக்கு விற்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவக்கி 1200 திரைப் படங்களுக்கும் மேலாக இசையமைத்து, 4 தலைமுறை ஹீரோக்களின் படங்களுக்கு, தன் இசையால் உயிர் கொடுத்த நம் பேரன்புக்குரிய 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.வி. அந்த மியூசிக் டைரக்டர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு..

தன் ஆசானை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து கவனித்ததுடன் அவர் மறைந்தபோது ஈமச்சடங்கு செய்ததும் இவர்தான். அத்துடன், எஸ்.எம்.எஸ் மனைவியும் கடைசி மூச்சுவரை இவர் பாதுகாப்பில் இருந்தார். நகைச்சுவை வேந்தன் சந்திரபாபு வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் இவரே.

'உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும் - நிலை
உயரும்போது பணிவுகொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்'-

ஆம், வணக்கத்துக்குரிய
மேதைதான் நம் எம்.எஸ்.வி.அவர்கள் ....

என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close