Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்காமுட்டை, பாகுபலி போல நைட்ஷோ வும் வெற்றி பெறும் நடிகர் சூர்யா வாழ்த்து

மலையாளப்படங்கள் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுவருகிறது. 36 வயதினிலே, பாபநாசம் தொடர்ந்து மலையாளத்திலிருந்து தமிழ் ரீமேக்காகி வெளியாகவிருக்கும் படம் நைட்ஷோ. ஜான் மேத்யூ  இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ஷட்டர் படத்தைத் தமிழ் ரீமேக் செய்து இயக்குநராக அறிமுகமாகிறார் தமிழின் முன்னணி எடிட்டரான ஆண்டனி.

நைட்ஷோ படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சூர்யா, கெளதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். சத்யராஜ், அனுமோல், யூகி சேது உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப்படத்தை  இயக்குநர் விஜய் தயாரித்திருக்கிறார்.

காக்க காக்க படத்தின் மூலம் எடிட்டர் ஆண்டனியை தமிழ்த் திரையுலகுக்கு  அறிமுகப்படுத்தியவர் கெளதம் மேனன். காக்க காக்க பட டிரெய்லர் வெளியாகும் போதே பேசப்பட்டவர் எடிட்டர் ஆண்டனி.

டிரெயிலர் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும் போது, “ புதிது புதிதாக கற்க வேண்டும் என்று நினைப்பவர் ஆண்டனி. அவருடைய எடிட்டிங் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். நாங்க கஷ்டப்பட்டு நடித்து ஷூட் செய்திருப்போம். அந்தக்காட்சிகளை ரொம்ப கூலாக வேண்டாம் என்று வெட்டிவிடுவார்.

காக்க காக்க, கஜினி போன்ற படங்களின் டிரெய்லரின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் எடிட்டர் ஆண்டனி. அவருடைய பெயரை திரைக்கதை, எடிட்டர், இயக்குநர் என பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

காக்கா முட்டை, பாகுபலி  ஆகிய படங்களின் வெற்றி பிரமிப்பாக இருக்கிறது. தற்பொழுது கதை தான் ரொம்ப முக்கியம். படத்தின் கதை தான் வெற்றியைத் தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை மலையாள இயக்குநர் ஜாய் மேத்யூ 10 வருடங்கள் எழுதியிருக்கிறார். நிச்சயம் தமிழிலும் இப்படம் வெற்றிபெரும்.

2 நிமிடங்கள் வந்தாலும் நடிப்பால் ஸ்கோர் பண்ணும் கலைஞர் சத்யராஜ். அதைப் போல தான் அவருடைய படங்களின் தேர்வும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார் சூர்யா. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்