Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே ஒரு பாட்ஷாதான், ரஜினி அதிரடி

பாட்ஷா திரைப்படத்தோடு கபாலி திரைப்படத்தை ஒப்பிட முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 90வது பிறந்த நாளை நேற்று (9 ஆம் தேதி) கொண்டாடினார்.

இதையடுத்து, காலையில் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றார். அதன்பின், ஆர்.எம்.வீரப்பனின் குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் போட்டோவும் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், ஆர்.எம்.வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழா மாலையில் சென்னை ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. கபாலி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பிஸியாக இருப்பதால், இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் அனைவரிடமும்க இருந்தது. ஆனால், மாலை நடந்த ஆர்.எம்.வீரப்பன் பிறந்த நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அந்த விழாவில் அவர் பேசும்போது, ''ஆர்.எம்.வீரப்பன் தயாரிச்ச பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்துகிட்டேன். அப்போ அவர் அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்.எம்.வீரப்பனுக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணிணேன். வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சுக்கிட்டே, 'வருத்தப்படாதீங்க, இது காலத்தின் கட்டாயம்'னு சொன்னார். ஆர்.எம்.வீரப்பன் ஒரு முறை கூட மருத்துவமனைக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. மருத்துவமனைக்கு போன வேதனையை அனுபவிச்சவன் நான்.

தயவு செய்து எல்லோரும் மருத்துவமனைக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கிடுங்க. 50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் உடற்பயிற்சி பண்ணுங்க. நான் நடிக்கிற கபாலி படம், பாட்ஷாவை மிஞ்சுமான்னு என்கிட்ட பலர் இப்போ கேட்கிறாங்க. பாட்ஷா திரைப்படத்தோடு கபாலி திரைப்படத்தை ஒப்பிட முடியாது. பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. அந்த படம் ஒரு பெரிய ஹிட்டானதுக்கு ஆர்.எம்.வீ.தான் காரணம். அவருடைய முயற்சி, உழைப்பு தான் காரணம்'' என்றார்

-எம்.குணா

எடிட்டர் சாய்ஸ்

[X] Close