Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என் சாபம் என் உதவிஇயக்குநர்களையும் தொடருகிறது-வருந்தும் இயக்குநர் ராம்

முதல் மழை, முதல் ரயில், முதல் முத்தம், முதல் இச்சை, முதல் காமம், முதல் காதல் இதெல்லாம் தரக்கூடிய பரவசத்தைவிட ஓர் இயக்குநருக்கு அவனுடைய முதல் படம் தரக்கூடிய பரவசம் மிகமுக்கியமானது என்று மெல்லிசை இசைவெளியீட்டு விழாவில் கவிதையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ராம்.

விஜய்சேதுபதி, காயத்ரி நடிக்கும் மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் ஜெயக்கொடி தான் இப்படத்தினை இயக்கியுள்ளார். சிறப்புவிருந்தினராக வந்த ராம் அவரின் உதவியாளராக இருந்த ரஞ்சித்தைப் பற்றி சில வார்த்தைகள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு இயக்குநருக்கு தன்னுடைய உதவி இயக்குநர் தரும் முதல் படம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் தருகிறது. அந்தப் பரவசத்தை நிவர்த்தி செய்த ரஞ்சித்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.

2004ல் ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்த தருணம். ரஞ்சித்துக்கு கவிதை தெரியும், தமிழ் இலக்கியம் புரியும், உலகசினிமா பார்க்கும் ஓர் யோயோ பாய். கிராமத்திலிருந்து வந்த கிராமத்தினுடைய வன்மம், கோபம், காதல் கொண்ட உணர்ச்சிகரமான படைப்பாளி. 


அவருடைய வன்மம், கோபம், காதல், கவிதை எல்லாம் கலந்த கலவைதான் மெல்லிசை. இந்த நகரத்தில் சுவாரஸ்யமாக வாழலாம். ஆனா நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கீங்களா? என்கிற கேள்வியே போதும் இப்படத்தைப் பற்றிச்  சொல்வதற்கு”.

தொடர்ந்து விஜய்சேதுபதி பற்றிப் பேசும்போது, “ யாருடைய சிபாரிசும் இல்லாமல் யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டுமரம் தான் விஜய்சேதுபதி.  இந்த காட்டுமரம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வந்தா மலை போனா ....(சென்சார் வார்த்தை), என்று மிகத் துணிச்சலான ஒரு நடிகர் என்பதற்கு அவருடைய படங்கள் உதாரணம். புதிய இயக்குநர்களை ஏற்றுக்கொள்ள, புதிய விஷயங்களை செய்வதற்கு இவர் போன்ற நடிகர்களால் மட்டுமே முடியும். சினிமாவிலும் நீங்கள் ஒரு ரவுடிதான்.

காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை என்று ஏன் சொன்னேன் என்றிருக்கிறது. ஏனென்றால் 75 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகிறேன். ஆனால் படம் வெளியாக மூன்று வருடங்களாவது எனக்கு ஆகிவிடுகிறது.

என்னுடைய சாபம் என்னுடைய உதவி இயக்குநர்களையும் தொடர்கிறது. அந்த சாபத்திலிருந்து நானும் என் உதவி இயக்குநர்களும் தப்பிப்பார்களாக. அதுமட்டுமில்லாமல் ஒரு வார்த்தை மாறினாலும் சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கும் இந்த உலகத்தில், “மெல்லிசை” யூ சான்றிதழ் பெறுவதாக” என்று முடித்தார் இயக்குநர் ராம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்