Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நமக்குப் பிரச்னைன்னா தமிழ்நாடே கிளம்பும்டா- ஹிப்ஹாப் நெகிழ்ச்சி

“இன்று காலை ஃபோன் போட்டு "டேய்! இன்னும் மழை இருக்கு! கோவை கிளம்பி வா!!! " என பதறிய என் தாயிடம் நான் கூறிய பதில் - "பசங்க இருக்காங்க, பிரச்சன இல்ல". அதற்குக் காரணம் கடந்த 4 நாட்கள் எனக்கு நடந்தவை” என்று சென்னையில் இசையமைப்பாளர் ஆதி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம்- ஆர்..ஏ.புரம் பகுதிக்கு நடுவில் தான் இருக்கிறது எங்கள் அலுவலகம். 5 நாட்களாக இங்கு மின்சாரமோ - தொலைத்தொடர்போ இல்லாததால் என்ன நடக்கிறது என்று கூட தெரிந்து கொள்ள முடியாத சூழல். நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் நீர் தேக்கம் சற்று குறைவு.

சரி தப்பித்துவிட்டோமே கிளம்பி விடலாமா என நினைத்து தெருமுனைக்குச் சென்றால், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் விஜயா அக்கா ஒரு பெரிய பாத்திரத்தில் தன்னிடம் இருந்த அனைத்துப் பொருள்களையும் வைத்து சமைத்துக் கொண்டிருக்கிறார்.

"தம்பி ஏரியா பூரா தண்ணி பா, நம்ம ஸ்டூடியோல இருக்கற தண்ணி கேன்-அ எடுத்து குடுத்துறலாமா எனக் கேட்கிறார்". இதில் அவர் மகளுக்கு 1 வாரமாக டைப்ஃபாய்ட் வேறு. செருப்பில் அடித்தது போல் இருந்தது. யார் இவர்? எதற்காக இந்தச் சமூகத்திற்கு இவ்வளவு செய்ய வேண்டும்? இதில் நாம் வேறு கோவை கிளம்பி விடலாமா என யோசித்திருக்கிறோமே. ச்சி என்று தோன்றியது.

நம்ம ஸ்டூடியோல இருக்குற எல்லாத்தையும் வைத்து சமைத்துவிடலாம் என யோசிக்க என் ஸ்டூடியோல வேலை பார்க்கும் அத்தனை பேரும் சரி என சொல்ல, அருகில் இருப்பவர்களிடம் கடன் வாங்கிய காய்கறி மற்றும் பருப்பு, ஸ்டூடியோவில் வைத்திருந்த 2 மூட்டை அரிசி. ஆகியவற்றுடன் சாப்பாடு ரெடி!

ஒன்றரை நாட்கள் இப்படியே நகர, இரண்டாவது நாள் எல்லாம் தீர்ந்து போனது. நல்லவேளை சிறிது செல்போன் சிக்னல் கிடைக்க, நலம் விசாரித்த கால்-களுக்கு நடுவில், திருப்பூரிலிருந்து எங்கள் தமிழன்டா குளோத்திங் நிர்வாகி ஷ்யாம் என்னை அழைக்கிறார்.

"தம்பி நல்லா இருக்கியா" - என ஆரம்பித்த பேச்சு, பொருள்கள் தட்டுப்பாடு எனப் போக, "நான் அனுப்பிவிடறேன்" என எங்கள் வண்டியிலே ஆயிரக்கணக்கில் தண்ணீர், பிஸ்கட், நாப்கின், கொசுவர்த்தி அன்றிரவே அனுப்பிவிட்டார். அதோடு நில்லாமல், . "அண்ணா நம்ம கம்பெனி காச எடுத்துடலாமா ?" என கேட்கும் முன்னே எங்கள் கம்பெனியில் இருந்த அத்தனை காசு, என்னிடம் இருந்த காசு என அனைத்தும் காலி.

இன்னொரு லாரியில் கடலூருக்குப் பொருள்கள் அன்றிரவே பறக்கிறது. இதற்கு நடுவில் நான் போட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை நம்பி காரமடையை சேர்ந்த யாரோ ஒரு பெண், அன்று அவர் திருமணத்தை வைத்து கொண்டு - இவருக்கு காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதைப் போல் திருப்புர், கோவை, ஈரோடு என பல இடங்களில் இருந்து காசு அனுப்புகின்றனர். அதையும் துணி, போர்வை வாங்கி அனுப்பி விடலாம் என சொல்கிறார். வண்டி இல்லாததால் வியாபாரம் காலி. அதைப் பற்றி கூடக் கவலை இல்லை. யார் இந்த ஷ்யாம் - இவருக்கும் சென்னைக்கும் என்ன சம்பந்தம்???

வந்து சேர்ந்த பொருட்களை இறக்கி வைக்க நம்ம தீவிர ரசிகர்களான சில ஏரியா பசங்க எல்லாரும் வர அப்படியே ஏரியா முழுக்க சென்று விநியோகம் செய்வதையும் அவர்களே பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் வீடுகள் அனைத்தும் வெள்ளத்தோடு போய்விட்டது. எம்.ஆர்.டீ.எஸ்சில் படுத்துத் தூங்கி மீண்டும் அடுத்த நாள் காலை வருகிறார்கள். இவர்களுக்கு நான் இதுவரை அதிகபட்சம் செய்தது இவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டது மட்டும் தான்.

என் நண்பர்கள் சொல்வதை இவர்கள் ஏன் கேட்க வேண்டும். ஸ்டூடியோவில் இருந்த தமிழன்டா சாம்பிள் டீ-ஷர்ட்களை போட்டுக்கொண்டு, வீட்டை இழந்த சோகத்திலும் உதவி செய்ய கெத்தாக கிளம்புகிறார்கள். தன் குடும்பம் கோடம்பக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது என்பதையும் காட்டிக் கொள்ளாது, அவர்களை வழி நடத்துகிறார் என் மேனேஜர் பாலாஜி. அவர்கள் முகத்தில் அவ்வளவு பெருமிதசிரிப்பு.

"நீங்க உங்க கையால குடுங்கண்ணே!", என அவர்கள் என்னை முன்னால் தள்ள- "இல்லங்க நீங்க குடுத்தாதான் சரி!" என ஓரிருவருக்கு கொடுத்து விட்டு சட்டென ஒதுங்கி கொண்டேன். என் வீடு ஆற்றில் போயிருந்தால் நான் இவ்வளவு தைரியமாக இருந்திருப்பேனா என்பதே சந்தேகம் தான், அப்புறம் எங்க உதவி எல்லாம். காசு எல்லாம் தூசு - கோடி பணம் முன்னால் எங்கள் உதவும் மனம் பெரிது என தங்கள் சிரிப்பால் உணர்த்திய இளைஞர்கள்.

மீடியாவில் இருப்பதால் நாங்கள் செய்யும் சப்பை உதவி கூட பெரிதாகப் பேசப்படும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனை இளைஞர்கள். என் ஏரியாவ நான் பாத்துக்கிட்டேன் என்ற பெருமையுடன், இன்டர்நெட் இன்று திரும்பியவுடன் இணையத்தில் பார்த்தால், உதவி செய்யப்போய் உயிரை விட்ட பரத் என்ற இளைஞன் - முஸ்லிம் பெண்களைக் கூட அனுமதிக்காத பள்ளிவாசலை இந்துப் பெண்களுக்குத் திறந்து விட்டு ரோட்டில் தொழும் இஸ்லாமிய தோழர்கள் - கட்டணம் வாங்காமல் ஊர் பூரா சுற்றும் ஆட்டோ டிரைவர்கள் - உதவி செய்யப் போறோம் எனக் கிளம்பிய 8 வயது சிறுவர்கள்.

இந்து-முஸ்லிம்-கிருஸ்தவன் என்பதைத் தாண்டி தமிழன் மனிதன் என்பதை உலகுக்கு உணர்த்திய புயல்.  இனி ஆயிரம் புயல் வந்தாலும் அழியாது என் தமிழகம் - காரணம் - தமிழகம் என்பது ஊர் அல்ல - உணர்வு, உயிர்.

மீண்டும் ஷ்யாம் கூப்பிட்டார், "கோயம்புத்தூர்ல இருந்து ஒரு வண்டி நாளைக்கு கெளம்புது தம்பி "

"நம்மளுக்கு பிரச்னைனா யார் வருவா ???

தமிழ்நாடே கெளம்புன்டா !!! "

என நான் எழுதியதை எனக்கே பாடி காட்டியது போல் இருந்தது !!!

இப்படிக்கு,

ஹிப்ஹாப் தமிழா ஆதி....

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close