Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்‌ஷன் மாஸ்டர்ஸ்!

கார்த்தி, விஷால், ஆர்யா

ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்‌ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்‌ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது!

‘ஜெயம்’ ரவி

அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்‌ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ என 'ஜெயம்’ ரவி நடித்த அடுத்தடுத்து விரட்டிய சிக்ஸர்களால், ‘அடுத்து தம்பி படம் எப்போ வரும்.. நம்பிப் போகலாம்?’ என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார். இதனால் குபீரென உயர்ந்திருக்கிறது ரவியின் மார்க்கெட்!

விக்ரம்

மற்ற ஹீரோக்கள் தமிழ் சினிமாவின் அடுத்த ரஜினி யார் என்று போட்டி போடுவார்களே தவிர, அடுத்த விக்ரம் யார் என்று யாரும் போட்டியிட மாட்டார்கள். அந்தளவுக்கு தன் பெர்ஃபார்மன்ஸ் மீட்டரை உச்சத்தில் வைத்திருக்கிறார் விக்ரம். பரிட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளும் இயக்குனர்கள், நியூ சினிமா விரும்பும் ரசிகர்கள்... இருவருக்கும் சியான் என்றால் பிரிடம். 'ஐ’ பட வெளிச்சத்துக்காக தன்னையே எரித்துக் கொண்டவரை, தமிழ் சினிமா ரசிகர்களின் குட்-புக்கில் இடம் பிடித்திருக்கிறார்!

தனுஷ்

ஆக்‌ஷன், காமெடி, காதல், ரெளடியிஸம் என எந்த கேரக்டரும் அந்த ஒல்லி உடம்புக்குள் கில்லியாக உட்காரும் வித்தைக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட்டும் மவுசு எகிறிக் கிடக்கிறது. தன்னம்பிக்கைக்கு உதாரணம் தனுஷ் என்பதை பல இளைஞர்கள் தங்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்வதால், கெத்து ஓப்பனிங் உண்டு தனுஷுக்கு. அமிதாப் பச்சனுடனே நடித்துவிட்டாலும், சாதாரண சட்டை, ரப்பர் செப்பல், வேஷ்டி கட்டு என சிட்டி பஸ்ஸில் தியேட்டருக்கு வரும் ரசிகனையும் தனக்கு நெருக்கமாக உணர வைப்பார்!

சிவகார்த்திகேயன்

தியேட்டருக்குள் வாண்டு முதல் தாத்தா வரை, தியேட்டருக்கு வெளியே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முதல் கேண்டீன் காண்ட்ராக்டர் வரை சகல தரப்பினருக்கும் இஷ்டமான ஹீரோவாக உயர்ந்திருக்கிறார் சிவ கார்த்திகேயன். ஒரு ஹீரோவாக தன் கதாபாத்திரம், தன் இமேஜ் பற்றி மட்டும் கவலைப்படாமல், மொத்தப் படத்தின் ரிசல்ட் மீதும் அக்கறை கொண்டிருப்பதால், சிவா புராஜெக்ட் மீது எல்லாரும் ஏக நம்பிக்கை இருக்கிறது!

சூர்யா

தமிழ் தாண்டி தெலுங்கு சினிமாவிலும் தனி மார்க்கெட் உள்ள நடிகர். ரவுடியாக நடித்தாலும் அதிலும் ஒரு ‘நல்ல பையன்’ இமேஜுடன் நடிப்பதால், ‘ஃபேமிலி ஹீரோ’ என்ற அடையாளம் சூர்யாவின் ப்ளஸ். நல்ல விஷயம் கொண்ட படத்தை குடும்ப ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க, 'பசங்க-2’ படத்தில் கெளரவத் தோற்றத்தில் நடிக்குமளவுக்கு இமேஜ் பார்க்காத நடிகர். ஒருவேளை சூர்யா நடிக்கும் படங்கள் வசூலிலோ, விமர்சன ரீதியிலோ எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்காவிட்டால் கூட, ‘அட...அதுக்கு சூர்யா என்ன பண்ணுவார் பாவம்... அவர் நல்லாத்தான் பண்ணாரு’ என்று ரசிகர்கள் தங்களைத் தேற்றிக் கொள்ளுமளவுக்கு அவர்களுடன் ஒரு ஆரோக்கிய பிணைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது சூர்யாவின் மாஸ்!

அஜித்

இன்றைய நிலவரத்தில் ’ஃபர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ’ பார்த்தே ஆக வேண்டிய பிரஷர் கொடுக்கும் மிகச் சில ஹீரோக்களில் அஜித்தான் தல! ரசிகர் மன்றத்தைக் கலைத்த பிறகும் வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார். வைரல் யுகத்தில் டிரெண்டிங் அடிப்பது, படம் எப்படி இருந்தாலும் படையெடுக்கும் ரசிகர் பட்டாளம், அஜித்தை தியேட்டரில் மட்டும்தான் பார்க்க முடியும் என ஒரு சூழ்நிலை உருவாக்கியிருப்பது... இதெல்லாம் அஜித்தின் பலங்கள். இதனாலேயே படத்தின் புரமோஷனுக்கென எங்கும் முகம் காட்டாவிட்டாலும், வசூலில் குறை வைப்பதில்லை அஜித் படங்கள்!

விஜய்

தான் அறிமுகமான சமயம் கல்லூரி சென்றவர்கள், இப்போது கல்லூரி செல்பவர்கள்... என இரண்டு தலைமுறை ரசிகர்களை இறுக்கமாக கையில் வைத்திருக்கிறார் விஜய். ஆக்‌ஷன், காமெடி, செண்ட்டிமெண்ட் என எந்த மேஜிக்கையும் விஜய் செய்வதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை ஏமாற்றாத ஹீரோவாக நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். அதே சமயம் ஒரு படம் சறுக்கினாலும் அடுத்த படத்தில் சேர்த்து வைத்து செய்து விடுவது விஜய் ஸ்பெஷல். அதனால் ஒவ்வொரு விஜய் படத்துக்கும் ரசிகர்கள்... வெயிட்டிங்!

கமல்

53 ஆண்டுகளாக ஒவ்வொரு சமயமும் விதவிதமான சாதனைகளுக்காக செய்திகளில் இடம் பெறுவது கமல் ஸ்பெஷல். தான் சார்ந்த துறை மூலம் பெருமை பெறுவார்கள் சிலர். அந்த துறைக்கே பெருமை தேடிக் கொடுப்பார்கள் சிலர். கமல் இரண்டாவது வகை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் கமல் படங்கள் என்றால், அதற்கான பிராண்ட் இமேஜே தனி. அதனாலேயே அந்தப் படங்களுக்கு அப்போதைக்கு ஓப்பனிங்கும் சில வருடங்கள் கழித்து பாராட்டுகளும் குவியும். ஆனால், இது எதையும் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் 'மகாநதி’யில் அறிமுக நடிகர் துலுக்கானத்திடம் பூட்ஸ் காலால் முகத்தில் மிதியும் வாங்குவார்... 'தூங்காவனம்’ படத்தில் நண்டு ஜெகனிடம் அடியும் வாங்குவார் கமல்.

ரஜினி

அலை அலையாய் ஹீரோக்கள் வந்தாலும் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலி இன்றும் ரஜினியிடம்தான். 'கோச்சடையான்’, 'லிங்கா’ என அடுத்தடுத்து நடித்தவர் இப்போது, 'கபாலி’, 'எந்திரன் 2.0’ என ஒரே சமயத்தில் இரண்டு மெகா புராஜெக்ட்களில் பிஸி. 40 ஆண்டு சீனியராக இருந்தாலும், வெளியுலக மாற்றங்களுக்கேற்ப தன்னையும்  தான் நடிக்கும் படங்களையும் ‘அப்டேட்’ செய்து கொள்ளத் தயங்குவதில்லை ரஜினி. இந்திய சினிமா நடிகர்கள் எவரும் வாங்காத சம்பளம், நாளுக்கு நாள் வைரலாகும் ரஜினியின் புகழ், தோல்வி படங்களுக்குப் பிறகும் விநியோகஸ்தர்களிடம் ரஜினி படங்களுக்குக் குறையாத மவுசு என தமிழ் சினிமா ஹீரோக்களில் ’டான்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி!

- சத்யாபதி

எடிட்டர் சாய்ஸ்

[X] Close