Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்னம்மா இப்டி நியூஸ் வாசிக்கறீங்களேம்மா? - ஃபாத்திமா பாபு ஃபீலிங்!

கல்கியின் மல்கோவா மாமியை மீண்டும் பார்த்தது போல இருந்தது மடிசாரில் ஃபாத்திமா பாபுவை சந்தித்தபோது. சித்ராலயா ஸ்ரீராமின் ‘தாரமா.. Tallyயா?’ நாடகத்திற்காக சற்று நேரத்தில் மேடையேறத் தயாராக இருந்தவரிடம் சில க்விக் கேள்விகளைத் தொடுத்தேன்.

“நீங்க நிறைய புத்தகம் படிக்கற ஆள்னு கேள்விப்பட்டோமே..” - உற்சாகமாகிறார் கேள்வியை எதிர்கொண்டதுமே..

“எங்கப்பா நான்  நாலாவது படிக்கப்பறவே என்னை, சில்ட்ரன்ஸ் லைப்ரரி விங்ல சேர்த்தி விட்டார். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் ஸ்கூல் லீவு.  புக்ஸ் எடுத்துட்டு வந்தா ஒரே நாள்ல முடிச்சுடுவேன். சண்டே அல்லது அடுத்த வியாழன்தான் மறுபடியும் போக முடியும். பெரிய புக்கா எடுத்துட்டு வந்தா ரெண்டு மூணுநாள் படிக்கலாம்னு ஒருக்கா ஒரு பெரிய புக் ஒண்ணை எடுத்துட்டு  வந்துட்டேன். செம்ம அடி அப்பாகிட்ட. ‘எவ்ளோ புக் இருக்கு.. இதை ஏன் எடுத்துட்டு வந்தன்னு. அட்டைப்படம் வேற கலர்ஃபுல்லா இருந்ததால, எனக்கு பிடிச்சுப் போச்சு. அது ராமாயணம்!  அவர் கொண்டு போய் வெச்சுட்டாலும், அதை தேடி ஒளிச்சு வெச்சு ஒவ்வொரு வாரம் அங்க போறப்ப அங்கயே உட்கார்ந்து, படிச்சு முடிச்சேன். அப்பறமா பொட்டலம் மடிக்கற பேப்பர்னா கூட விடமாட்டேன். நடுவுல, கண்பார்வை சிரமமானதால கொஞ்சம் வாசிப்பு கம்மியாச்சு. அப்பறம் முகநூல் வந்து அதுல புத்தகங்கள், வெளியீடுகள் பத்தியெல்லாம் படிக்க ஆரம்பிச்சு மீண்டும் ஆர்வம் வந்துடுச்சு. தவிரவும் இப்ப ட்ராமா ட்ரூப் இருக்கறதால நல்ல புத்தகங்கள், கதைகளைத் தேடிப் படிச்சுதான் ஆகணும் ”

“அப்பா அவ்ளோ ஸ்ட்ரிக்டா?”

“மத நம்பிக்கை அவருக்கு அப்படி. நான் தப்பு சொல்லல. ஆனா மனுஷங்களை அவர் மாதிரி யாரும் மதிக்க முடியாது. அவர் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டாம்னு சொன்னது அந்த வயசுல எனக்கு பல கேள்விகளை உருவாக்கிச்சு. அதுனாலயே புத்தகங்களைத் தேடித் தேடி படிக்க ஆரம்பிச்சேன்”   

“மத விஷயத்துல அப்பா மாதிரி இல்லையே நீங்க..”

“அப்பா அப்படி இருந்ததே எனக்குள்ள கேள்விகளை உருவாக்கி, ஜிட்டு, ஓஷோன்னு ஆன்மிகத் தேடல் உருவாச்சு. நிறைய படிக்க ஆரம்பிச்சேன். இது பெஸ்ட், அது பெஸ்ட்னெல்லாம் இல்ல. அந்தந்த நம்பிக்கைல இருக்கறதுதான் பெஸ்ட். அதீத நம்பிக்கை நம்ம தோற்றத்துலயே ஒரு தேஜஸைக் கொண்டுவரும்”

”Fabs Theatre" - இந்த முயற்சி எப்படி?

“என்னை சந்திக்க நிறைய பேர் ஆர்வமா இருக்கறதும் ,அவங்களை நான் சந்திக்க ஆர்வமா இருக்கறதும் தொடர்ந்து நடந்துட்டிருந்தது. சில பேர்க்கு வாழ்க்கைல சில ப்ரச்னைகள். வாழ்க்கை ரொம்ப அழகானது. அதை ஏன் ப்ரச்னைகளின் அடிப்படைல மட்டும் பார்க்கணும்னு அவங்கள வார வாரம் சந்திக்க ப்ளான் பண்ணினோம். அப்ப அதுல நடிப்பு கத்துக்க ஆர்வமா இருக்கறவங்களை இணைச்சு, எனக்குத் தெரிஞ்ச கலையான நடிப்பை அவங்களுக்கு சொல்லிக் குடுத்தேன். ஐந்து சிறுநாடகங்களை ஒருங்கிணைச்சு பஞ்சரத்னம்ங்கற பேர்ல நடந்த எங்க முதல் முயற்சியை என் குருநாதர் கே.பாலச்சந்தர் சார்தான் ஆரம்பிச்சு வெச்சார். அவர் எங்க குழுவைச் சேர்ந்தவங்களை பல தடவை சந்திச்சு, பேசிருக்கார்”

“நீங்க செய்தி வாசிச்ச காலகட்டம் பத்தி சொல்லுங்களேன்..”

“அப்ப ஒரே ஒரு சேனல்தான். அதுலயும் சில நிகழ்ச்சிகள்தான். மொத்தமாவே ஒன்பது பேர்தான் செய்தி வாசிச்சுட்டு இருந்தாங்க. (கடகடவென பெயர்களை ஒப்பிக்கிறார்) அதுக்கப்பறம் ரத்னா, நிர்மலா பெரியசாமி, மீரா கிருஷ்ணன்லாம் வந்தாங்க”  

 “இப்ப செய்தி வாசிங்கறவங்கள்ல குறிப்பிட்டு சொல்ற மாதிரி யாரும் இருக்காங்களா?”

“சத்தியமா யாருமே இல்லை...”

நாம் அடுத்த கேள்விக்குத் தாவ, ‘ஏன் இல்லைன்னும் சொல்லீடறேன் கேளுங்க. ஒரு நியூஸ்ங்கறது ஒரு கதை. அதை கதை சொல்ற சுவாரஸ்யத்தோட சொல்லணும். சும்மா ஏதோ வரி இருக்கு, நான் படிச்சுட்டுப் போறேன்னு பண்ற மாதிரி இருக்கக்கூடாது. பேசறதா இருந்தாலும், செய்தி வாசிக்கறா இருந்தாலும் சரி மனசுல பதியற மாதிரி சொல்லணும். அந்த தொனி, டெக்னிக், இப்ப இருக்கற ஒருத்தர்கிட்டயும் இல்லை. ஷோபனா ரவிக்கப்பறம் சிறந்த செய்தி வாசிப்பாளர்னு யாரையும் நான் சொல்லமாட்டேன்.

பேச்சு, இணையம் பக்கம் திரும்புகிறது.

“இணையத்துல நீங்க இயங்க ஆரம்பிச்சப்பறம் உங்களுக்கு நிறைய எதிர்வினைகள், மோசமான கமெண்ட்ஸ்லாம் வந்திருக்குமே.. அத எப்டி எதிர்கொள்றீங்க?”

“எதிர்வினைங்கறது 1987ல நான் செய்தி வாசிக்க ஆரம்பிச்சேனோ, அப்போல இருந்தே இருக்கு. நான் என்ன பண்ணினாலும் செய்தி போட ஆரம்பிச்சாங்க. என்னைப் பத்தின என்ன செய்தின்னாலும் கடைசி வரில ஒரு கிண்டல் இருக்கும். ஸோ, இதெல்லாம் எனக்கு அப்பவே பழக்கம். இதுக்கு ரியாக்ட் பண்ணக் கூடாதுங்கறது மிகச் சின்ன வயசுலயே நான் கத்துகிட்ட ஒண்ணு. அதுமில்லாம, எதிர்வினை ஆற்றினாதானே நல்லா இருக்கும்? சும்மா ‘சூப்பர்... நைஸ்’ன்னு கமெண்ட் பண்ணினா அதுல என்ன இருக்கும்?”

“அதையெல்லாம் தாண்டி, ஆபாசமான சொற்கள்ல எழுதறதுல்லாம் இருக்குமே..”

“ஆங்.. நீங்க பார்த்தீங்கன்னா, அந்த மாதிரி கமெண்ட்ஸைலாம் கூட நான் நீக்க மாட்டேன். அது என்னை அசிங்கப்படுத்தல, அவங்க கோரமான, வக்கிர  முகத்தைத் தான் காட்டுது. அதுனால அதுக்காக நான் வருந்தறதும் கிடையாது. இந்த வலிமையைத்தான் நான் என்கிட்ட இருந்து கத்துக்கோங்கன்னு சொல்றேன். ஆபாசமா பேசறவங்களோட நோக்கமே, உங்களை வருத்தப்பட, அவமானப் பட வைக்கறதுதான். நாம வருத்தப்பட்டா அவன் ஜெயிச்சுடுவான். நல்லா  கவனிங்க, ‘வருத்தம் இருக்கும், காமிச்சுக்காத’ன்னு சொல்லல, வருத்தமே படக்கூடாது, அழவே கூடாதுன்னுதான் சொல்றேன்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் ஃபாத்திமா பாபு.

- பரிசல் கிருஷ்ணா

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close