Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாங்கள் விண்ணைத்தாண்டி வருவாயா காலத்தில் பிறந்தவர்கள்...

ங்கள் முந்தைய தலைமுறைக்கு எப்பவுமே ஒரு செருக்கு இருக்கும்... அவர்கள் இளையராஜா காலத்தில் காதலித்தவர்கள் என்று... இளையராஜா பாடலை வாழ்வுடன் ஒப்பிட்டு காதலில் திளைத்தவர்கள் அவர்கள்... பல கிலோமீட்டர் சைக்களில் பின் தொடர்ந்து, பல வாரம் ஒரு புன்னைகயை மட்டும் சிந்தி, ஒரு கடைக்கண் பார்வைக்காக, பல வாரங்கள் பங்க் கடைகளில் காத்திருந்து, காதலை சொல்லியவர்கள் அவர்கள்.... நீங்களெல்லாம் என்ன காதலிக்கிறீங்க என்று எங்களை எகத்தாளம் பேசியவர்கள் அவர்கள்.

 நாங்கள் பெருமையாக சொல்லி கொள்வோம். ஆம். நாங்கள் VTV காலத்தில் பிறந்தவர்கள் என்று. அதுவும் அந்த படத்துடன் வரிக்கு வரி ஒப்பிட்டு பார்த்து கொள்ள நிஜ கதை கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்... அப்படி எத்தனை பேருக்கு வாய்த்தது என்று தெரியவில்லை... ஆனால், சோட்டுவுக்கு அமைந்தது. அவனை நான் சந்தித்தது, 2011 ஆம் ஆண்டு பொங்கலன்று... நண்பனின் நண்பனாக எனக்கு அறிமுகமாகி, எனது நெருங்கிய வட்டத்தில் இடம் பெற்றவன்.

பொங்கலன்று அவனை சந்தித்த போது வீட்டில் இருந்த தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான். அப்போது ஆண்ட்ராய்ட் ஃபோன் இல்லாத காலம், அவனுக்கு ஒரு கால் வந்தது... தண்ணீர் பாய்ச்சி கொண்டே பேசியவனின் கண்கள் கலங்குகிறது.... ஏதேச்சையாக நான் அதை பார்த்துவிட்டேன். ஆனால், அவர்களின் உரையாடலும், அதாவது எதிர் திசையில் பேசியவரின் குரலும் சேர்த்து எனக்கு தெளிவாக கேட்கிறது... பிறர் பேசுவதை ஒட்டு கேட்பது பண்பில்லை என்றாலும், அவனது கண்களில் வழிந்த நீர், அவர்களின் உரையாடலை கேட்க தூண்டியது.

அவன் பேசிக்கொண்டிருந்தது, அவன் காதலியின் அம்மாவுடன்... அவன் காதலிக்கு வேறொருவருடன் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது... ஜனவரி 30 ஆம் தேதி திருமணம்.

அவர்கள் உரையாடல் இது தான்,

‘சோட்டு.. உங்க லவ் எனக்கு நல்லா தெரியும்.. புரிஞ்சுக்கவும் முடியுது... நீ சினிமாவுல இருக்கிறேன்னு அவர் ஒத்துக்க மாட்டேன்கிறாரு... உனக்கே தெரியும்லப்பா... சினிமா ஹராம்னு...... நான் என்ன செய்ய முடியும்...?’

‘சரி... ஆண்ட்டி...’

‘நாங்க பார்த்து இருக்கிற பையனும் ரொம்ப நல்லப் பையன்... துபாய்ல வேலைப் பார்க்கிறான்... கைநிறைய சம்பளம்... அது மட்டும் இல்லை... அவன் நல்ல உயரம்...’

(கண்ணீர் அவனையும் அறியாமல் வழிந்தோடுகிறது... குரல் உடைகிறது)

‘அவளும் ஒத்துக்கிட்டா....’


(உடைந்த குரலில்) சரி... ஆண்ட்டி.... பிராமிஸா என்னால எந்த பிரச்சனையும் வராது... நீங்க எதை பத்தியும் கவலைப்படாம கல்யாண வேலையைப்பாருங்க...

கண்ணீரை துடைத்துக் கொண்டு... அவன் சோகத்தை மறைத்து... மெல்லிய புன்னைகையை முகத்தில் தவழவிட்டு... என்னிடம் பேச முயல்கிறான்....

அவனை மேலும் தர்மசங்கடத்தில் வைக்க விரும்பவில்லை... ஜீ... நான் வேணும்னா போயிட்டு அப்பறம் வரட்டுமா....

இல்லை ஜீ... இருங்க....

 சில நிமிடங்கள் படர்ந்த அமைதியை, ஒரு தேனீயின் ரீங்கார ஓசை உடைக்கிறது....

அவனே பேச்சை துவங்கினான்.... “ஜீ... எங்கையாவது வெளியில போகலாமா... உங்களுக்கு வேலை எதுவும் இல்லையே....?”

இல்லை ஜீ.... வாங்க போகலாம்....

தஞ்சையின் ஏகாந்த பகுதியான, ஆற்றை ஒட்டி இருக்கும் செல்லம்பட்டி சாலையில் வண்டியை செலுத்தினேன்... ஏறத்தாழ 15 கி.மீ போயிருப்போம்... சோட்டு... எதுவுமே பேசவில்லை...

பொங்கல் என்பதால் ஊரே விழா கோலம் பூண்டிருந்தது.... ஒரு டீக்கடை கூட இல்லை...

‘ஜீ... வண்டிய ஏதாவது மர நிழலில் நிறுத்துங்க...’ சோட்டுவே நிலவிய பேரமைதியை கலைத்தான்...

அஞ்சு வருச லவ் ஜீ... ஸ்கூலேர்ந்தே ஒண்ணாப்படிக்கிறோம்... அவ என்னோட ஹைட்டு... என்னோட ஒரு வயசும் கூட... அப்பெல்லாம் லவ்வெல்லாம் இல்லை ஆனா அவளை ரொம்ப பிடிக்கும்... நான் சேர போற காலேஜ்ல அவ சேருவான்னு தெரியாது ஜீ... ஃப்ரீ ஹேர்ல, முதல் நாள் அவளை காலேஜ்ல பார்க்கும் போது... அய்யோ... அப்பவே விழுந்துட்டேன்....

சோட்டு என்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை.... நானும் குறுக்கிடவும் விரும்பவில்லை... ஆற்றைப்பார்த்து கொண்டே பேச்சை தொடர்ந்தான்...

வீட்டு பின்னாடியே காலேஜ்... இருந்தாலும் நாலு கி.மீ சுத்திட்டு அவ வீட்டு வழியா போவேன்.... பல நாள் நான் வர்றதுக்கு முன்னாடியே காலேஜ் பஸ்ல போயிருப்பா... அவளால தான் ஜீ, நான் சீக்கிரம் காலையில எழுந்திரிக்கவே பழகினேன்...

எப்ப... அவ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சான்னு தெரியல... அவளுக்கும் என்னை ரொம்ப பிடிச்சது... அவ ஹைட்டு ஜீ... பசங்க எல்லாரும் பயங்கரமா கலாய்ப்பாங்க... இருந்தாலும் அவ என்னை விட்டுக்கொடுக்க மாட்டா.... அவளுக்கு ஆரம்பத்துல நான் அவளோட ஒரு வயசு கம்மின்னு தெரியாது... ஒரு நாள் என் லைசன்ஸ்ல பார்த்துட்டா.... ஆனா, அவ என்கிட்ட எதுவுமே கேட்கல ஜீ... நானே குற்ற உணர்ச்சில சொல்லிட்டேன்... அவ பயங்கர மெச்சூர்ட் ஜீ...

அவ என்கிட்ட கேட்டது, ஒண்ணே ஒண்ணு தான் ஜீ... சோட்டு... இந்த விஸ்காம், சினிமா, பத்திரிக்கை எல்லாம் வேணாம்... நீ ஃபாரீன் போயிடு... என்னையும் கூப்பிட்டுக்க... நான் சொல்லிருக்கணும்.... அவளை பிடிக்கிற அளவுக்கு, சினிமாவையும், மீடியாவையும் பிடிக்கும்னு ஆனா, நான் அவளுக்கு False Hope கொடுத்துட்டேன்...

எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு...என் சினிமா முயற்சி... அவ PG கோர்ஸ்ன்னு... தீடீர்னு ஒரு நாள் ஃபோன் பண்ணினா.... சோட்டு.. வீட்ல மாப்பிள்ளை பார்க்குறாங்க... சீக்கிரம் உங்க வீட்ல சொல்லி, எங்க வீட்ல பேச சொல்லு....

எப்படி ஜீ வீட்டுல சொல்றது.... நிரந்தர வேலை இல்லை.... கொஞ்சம் வெய்ட் பண்ணு... எப்படியாவது சமாளின்னேன்... வேற என்ன சொல்ல முடியும் ...?

அவளும் சமாளிச்சா.... கிட்டதட்ட ஒரு வருஷம் சமாளிச்சா... பாவம் அவளும் என்ன பண்ணுவா...

ஒரு நாள் மெசேஜ் வந்துச்சு,


“ இது முடிஞ்சு போச்சு சோட்டு.. இல்ல sureஆ சொல்றேன் இது முடிஞ்சு போச்சு... நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன் ஆனா நீ அதை பெரிய விஷயமாவே எடுத்துக்கல... Leave me chottu...Its over... i won't disturb u hereafter..."

இதான் ஜீ... அவகிட்ட இருந்து கடைசியா வந்த மெசேஜ்... பல தடவை முயற்சி பண்ணினேன்.. அவ நம்பர் switched off...

அப்புறம் இன்னைக்கு தான் அவங்க அம்மா பேசுறாங்க....

அந்த உரையாடலில் முதன்முதலாக... நான் பேசினேன்.... “ஏன் ஜீ... உங்களை அவங்க ஏமாத்தி இருக்காங்க... கொஞ்சம் கூட கோபமே வரலையா... வாங்க ஜீ... ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடலாம்...”


வேணாம் ஜீ.... அவளை லவ் பண்ணிணேன்... லவ் பண்ணுறேன்... பண்ணுவேன்... எனக்கு VTV படம் ரொம்ப பிடிக்கும்... நான் கார்த்தியாகவே இருந்துடறேனே....

இப்படியாக தான் அந்த காதல் முற்றுப்பெற்றது...

சோட்டு ஒரு வேளை, தன்னை VTV படத்துடன் பொருத்தி பார்க்கவில்லை என்றால்... இவன் போய் பிரச்சனை பண்ணி இருப்பான்... அவளும், கல்யாணம் நடந்து விழுப்புரத்தில் செட்டில் ஆகி இருக்க மாட்டாள்... ஆனால், இவன் அவளை இப்போது நேசிக்கும் அளவுக்கு நேசிப்பானா என்று நிச்சயாமாக தெரியவில்லை....

அவளை அதே அளவிற்கு காதலிக்கிறான்... விரசமில்லாத காதல்... அவளும் காதலிக்க வேண்டும் என்று காதலை வணிகமாக்காத காதல்...

ஆம். அவன் VTV காலத்தில் பிறந்தவன்.

- மு. நியாஸ் அகமது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close