Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலுக்கு பிறகு முடிவுசெய்யப்பட்டதா அம்மா கணக்கு டைட்டில்? தனுஷ் பதில்!

தனுஷ் தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படமே “அம்மா கணக்கு”. இந்தியில் கடந்த மாதம் வெளியான  “நில் பண்டே சனாட்டா” படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அம்மாவிற்கும் மகளுக்குமான இடையேயான உறவினை, அழுத்தமான உணர்வுகள் மூலம் பதிவு செய்து இருக்கும் திரைப்படமே “அம்மா கணக்கு”. அம்மாவாக அமலாபால், மகளாக யுவா நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை இளையராஜா. அஸ்வினி ஐயர் தான் தமிழ், இந்தி என்று இரண்டு மொழியிலும் இயக்கியிருக்கிறார்.  இப்படம் தனுஷ் தயாரிக்கும் 10வது படம். இதுவரை தனுஷ் தயாரிக்கும் எந்தப் படத்தின் நிகழ்ச்சிக்கும் வந்ததில்லை. இதில் முதல் முறையாக , அவர் கலந்துகொண்டார். மேலும் அவர் பேசும் போது அதற்கான ரகசியத்தையும் உடைத்தார்.

தனுஷ் பேசும்போது, “ என்னை யாரும் கூப்பிடவில்லை, நானே போன் செய்து எங்கு நடக்குது, எப்போனு கேட்டுட்டு நானே கிளம்பிவந்துட்டேன். என்னைக்குமே ஒரு படம் அந்த நடிகர்களுக்கான படமா தான் இருக்கனும், நான் வந்து தொந்தரவு தரவேணாம்னு தான் நான் தயாரிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துக்குறது இல்லை. ஆனால் இந்தப் படத்தை என்னுடைய படமாகவே நினைக்கிறேன். எனக்கு ரொம்ப ஸ்பெஷல் இந்த “அம்மா கணக்கு”.

தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய்யை சந்தித்த போது, இந்தப் படத்தின் இந்தி டிரெய்லரை பார்த்தேன். பார்த்ததுமே இந்தப் படத்துக்கான தமிழ் ரீமேக் உரிமையை நானே வாங்கிக்கிறேன்னு சொன்னேன். அதற்குப் பிறகு தான் முழு படமும் பார்த்தேன். சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கு. பிளஸ் 2வில் நானும் கணக்கு ஃபெயில், குழந்தைங்க கணக்குப் பாடம் படிக்க எவ்வளவு கஷ்டப்படுறாங்க, அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம், படிக்கும் குழந்தைகள் என்ன மாதிரியான மன அழுத்தத்திற்கு ஆளாகுறாங்க, பெற்றோர்கள் எப்படி அதை புரிஞ்சிக்கணும்னு இந்தப் படம் நிச்சயம் சொல்லும்.

இந்தப் படத்திற்காகவே அடுத்த வருடம் எல்லா விருதையும் அம்மா கணக்கு படத்தோட ஹீரோ, ஹீரோயின் “அமலாபால்” தான் வாங்குவாங்க, அந்த அளவுக்கு நடிச்சிருக்காங்க.  “இசைஞானி” இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைச்சது, இந்தப் படத்தோட மிகப்பெரிய பாக்கியம். குழந்தைங்க தான் எங்க நிறுவனத்திற்கே வரம்னு நினைக்கறேன். காக்காமுட்டை பசங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துல யுவா நடிச்சிருக்குறது படத்திற்கு பலம், என்று முடித்தார் தனுஷ். தொடர்ந்து சில கேள்விகள் அவரிடம் நிருபர்கள் கேட்டனர்,

தேர்தலுக்குப் பிறகு தான் “அம்மா கணக்கு”னு படத்துக்கு டைட்டில் வச்சீங்களா?

ஆறு மாசத்துக்கு முன்னாடியே இந்த டைட்டில் தேர்ந்தெடுத்துட்டோம். ட்விட்டர்ல வேணா செக் பண்ணிக்கோங்க. அம்மா கணக்குனா, அம்மாவோட சிந்தனை, அவங்களோட எண்ணம் தான் அர்த்தம். இந்த அம்மா கணக்கு படம் மட்டும் தான் எனக்குத் தெரியும் என்றார் சிரித்தவாறு..

அவார்டுக்காகவே படம் எடுக்குறீங்கனு சொல்லுறாங்களே?

விருதிற்காக எந்தப் படமும் எடுக்கல, எடுக்குற படம் விருது வாங்குது அவ்வளவு தான். சமுதாயத்திற்கு செய்தி சொல்லுறமாதிரி தான் படம் எடுக்கணும்னு ஆசைப்படுறேன். அதையே எடுக்கவும் செய்யுறேன், அவ்வளவு தான்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 
[X] Close