Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பாதுகாவலர் இல்லையென்றால் இந்தியாவே இல்லை!’’ இளையராஜா நெகிழ்ச்சி

சென்னை; பெங்களூரு விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் தன் உடைமைகளை சோதனையிட்டது தொடர்பாக இளையராஜா ’பாதுகாவலர் இல்லையென்றால் இந்தியாவே இல்லை!’  என நெகிழ்ச்சியான கருத்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது மகன் கார்த்திக் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கர்நாடகாவின் மங்களூரில் ஆன்மீக சுற்றுலா சென்றார். அங்குள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு, சென்னை திரும்ப ஞாயிறு அன்று பெங்களூர் விமான நிலையத்துக்கு உறவினர்களுடன் அவர் வந்தார். அப்போது இளையராஜா குடும்பத்தினர் கொண்டுவந்த உடைமைகளை விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.

இது பொதுவாக விமானநிலையங்களில் உள்ள வழக்கமான நடைமுறை. சோதனையின்போது அவர்கள் கொண்டுவந்த பைகளில் கோயில் பிரசாதம், உடைந்த தேங்காய் போன்ற பொருள்கள் இருந்ததையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்து இளையராஜாவிடம் சில கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் பிரசாத பொருட்களை பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடந்தது. பிரசாதப் பொருள்களை அனுமதிக்கவேண்டும் என்று இளையராஜா கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. பின்னர் பிரச்னை தீர்க்கப்பட்டது.

இந்நிலையில் இளையராஜாவின் உடைமைகளை பெங்களூரு விமானநிலைய அதிகாரிகள் சோதனையிட்ட தகவல் தமிழகத்தில் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இளையராஜா இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு "நான் அந்த சோதனையை பெரிதாக எடுக்கவில்லை. பாதுகாவலர்கள் அவர் கடமையைதான் செய்தனர். ஒருவகையில் இப்படி கடமையாற்றும் பாதுகாவலர்கள் இல்லை என்றால் இந்தியாவே கிடையாது" என்று பாதுகாவலர்களை பெருமைப்படுத்தும் வகையில் நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்தார். 

மேலும், “இது ஒன்றுமே இல்லாத விஷயம். இதுபோன்ற தேவையற்ற விஷயத்தில் நமது நாட்டு மக்கள் தங்கள் கவனத்தையும், சக்தியையும் விரயம் செய்வது கவலையளிக்கிறது” என்றும் அந்த பேட்டியில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
 
விமான நிலைய சம்பவத்தால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட பதற்றத்திற்கு இந்த பேட்டி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இளையராஜா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close