Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பதைபதைக்க வைக்கும் 'டன்கிர்க்' டீசர்

போர்களின் பாதிப்பில் வெளியான ஆயிரக்கணக்கான புத்தகங்களும், சினிமாக்களும் அந்தந்தப் போர்களைப் பற்றி சொன்ன விஷயங்கள் ஏராளம்.  காதல், பிரிவு , பாசம் ,மோசம் என உலகப் போர்களின் பாதிப்பில் வந்த படங்கள் ஏராளம். சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதை, கடந்த ஆண்டு வென்றது சன் ஆஃப் சால் (Son of Saul) என்ற ஹங்கேரியத் திரைப்படம். அதுவும், இரண்டாம் உலகப் போரை பற்றியது தான். தி பியானிஸ்ட் (The Pianist), ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (Schindler's List), லைப் ஈஸ் பியுட்டிஃபுல் (Life Is Beautiful) என பல திரைப்படங்கள் ஆஸ்கர் அள்ளியதற்குக் காரணம் இரண்டாம் உலகப்போர் தான்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் , இரண்டாம் உலகப் போரை மையப்படுத்தி, மற்றொரு திரைப்படம் வர இருக்கிறது. அதன் பெயர் டன்கிர்க் (Dunkirk). ஆனால், மக்கள் அந்தப் படத்தினை எதிர்ப்பார்ப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அது, படத்தின் இயக்குனர் கிறிஸ்டோஃபர் நோலன் என்பது தான்

இரண்டாம் உலகப்போரின் ஒரு கட்டத்தில், வடக்கு ஃபிரான்ஸின் டன்கிர்க் என்னும் இடத்தில் பெல்ஜியம், ப்ரிட்டன் , ஃபிரான்ஸ் வீரர்களை, ஜெர்மன் வீரர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். பெரும் போராட்டத்திற்குப் பின், முதல் நாள் 7,669  வீரர்கள் மீட்டெடுக்கப்பட்டார்கள். எட்டாம் நாளின் இறுதியில் மொத்தமாய் மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்தைத் தாண்டியது.  அவர்கள் எப்படி மீட்டெடுக்கப்பட்டனர் என்பது தான் டன்கிர்க் வெளியேற்றம் என்னும் நிகழ்வு.

இதை மையமாக வைத்து, கிறிஸ்டோபர் நோலன் தயாரித்து , எழுதி இயக்கும் படம் தான் டன்கிர்க். தனது முந்தைய படமான இன்டெர்ஸ்டெல்லாரைப் போல், இதையும் ஐமேக்ஸ் கேமராவிலும், ஃபிலிம் சுருளிலும் படமாக்கி வருகிறார் நோலன்.  முதல் முறையாக வரலாற்று போர் பின்னணி கொண்ட ஒரு படத்தை இயக்குகிறார் நோலன். இன்டெர்ஸ்டெல்லர் படத்தை ஒளிப்பதிவு செய்த Hoyte van Hoytema, இந்தப் படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். டார்க் நைட் ட்ரையாலஜி, இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லார் படங்களைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் இசைமையத்து வருகிறார் ஹான்ஸ் ஜிம்மர்.

தனது படத்தில் CGI கிராஃபிக்ஸை பெருமளவில் குறைத்துவிட்டு, நிஜ செட்டுகளை பயன்படுத்துவார் நோலன். மார்க் ரைலான்ஸ் , டாம் ஹார்டி என பலர் நடிக்கும் இந்த படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானது. 66 நொடிகள் வரும் டீசரில், எழுத்துக்களைத் தவிர்த்தால் சில நொடிகள் மட்டும் தான் காட்சிகள் வருகிறது. வசனங்கள் இல்லை. செயற்கை இசை இல்லை.. ஆனால்.. நம்மை பதைபதைக்க வைக்கிறது டன்கிர்க்!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்