Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கொஞ்சம் சிக்கல்... என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்க!” -தனுஷிடம் கேட்ட வெற்றி மாறன்!

முதன் முறையாக இரண்டு வேடத்தில் தனுஷ், தயாரிப்பாளராக வெற்றிமாறன், இசை அரக்கன் சந்தோஷ் நாராயணனின் இசை, தனுஷின் முதல் அரசியல்  படம் என்று கொடி படத்திற்கு ஹைப் தாறுமாறாக  எகிறிக்கிடக்கிறது. 

பாலுமகேந்திரா இயக்கத்தில் “அது ஒரு கனாகாலம்” படத்தில் தனுஷ் நடித்த போது, உதவி இயக்குநராக பணியாற்றியவர் வெற்றிமாறன். இப்போது தனுஷின் தயாரிப்பாளர். வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய துரை செந்தில்குமார், கொடி படத்தின் இயக்குநர். எடிட்டர் கிஷோரின் உதவியாளர் பிரகாஷ், கொடி படத்தின் படத்தொகுப்பாளர்.  வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த வெங்கடேஷ், இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர். தனுஷின் பள்ளிப்பருவ நண்பர் பாபா பாஸ்கர், கொடியின் நடன இயக்குநர் என்று தனுஷின் நெருங்கிய நட்புவட்டங்களே ஒட்டுமொத்த படத்தையும் செதுக்கியிருக்கிறார்கள் .  

இசை வெளியீட்டு விழாவிற்கென பிரம்மாண்ட மேடை, அதிரடிக்கும் விளம்பரங்கள் என்றில்லாமல் யூடியூப்பில் பாடலை அமைதியாக ரிலீஸ் செய்துவிடுபவர் தனுஷ். கொடி படத்திற்கும் அதே ஃபார்முலா தான்.  பாடல்களை ரிலீஸ் செய்தாகிவிட்டது, செய்தியாளர்களையும் இன்று சந்தித்துவிட்டார்கள் தனுஷூம் வெற்றிமாறனும்.  

“ஒரு நாள் தனுஷிடம், பெரிய நெருக்கடியில் இருக்கேன். என் கம்பெனிக்கு படம் பண்ணுங்க என்று கேட்கவும், உடனே “ஓகே சார், செந்தில் சொன்ன லைன் ரொம்ப நல்லா இருக்கு, அந்தப்  படத்தை நீங்க பண்ணுங்க” என்றார் தனுஷ். நானும் தயாரிப்பாளராகிட்டேன். பெயர் மட்டும் தான் என்னுடையது, இப்படத்திற்கான அனைத்து உழைப்பும், வேலையும் ஒட்டுமொத்த டீம் தான் காரணம்.  

இசை... சந்தோஷ் முதலில் ஒரு டியூன் காட்டுறாரு, உடனே இதுனு நினைக்காதீங்கனு, சொல்லிட்டு மறுபடியும் ஒரு டியூன் சொல்லுறாரு. அதையும் விட இன்னும் பெட்டரா அடுத்ததா ஒரு டியூன் போடுறாரு. கடைசியா தேவையான சிறந்த பாடலை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இவங்க எல்லோரும் சேர்ந்து தான் என்னை தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார்கள்” என்று சிரிப்புடம் முடித்தார் வெற்றிமாறன். 

தனுஷ் பேசும்போது, “ இந்தப் படத்துல மொத்தம் ஐந்து பாடல்கள். என்னையும் நம்பி ஒரு பாடல் எழுதவும், பாடவும் அழைத்ததற்கு சந்தோஷூக்கு நன்றி. இந்தப் படத்தில் வேலை செய்யும் எல்லோருமே 12 வருடமாக ஒன்றாகவே டிராவல் செய்கிறோம். நாங்க எல்லோருமே ஒரே குடும்பம் தான்.  துரைசெந்தில் குமார் அமைதியா இருப்பார். நல்லா கிரிக்கெட் விளையாடுவார், இதுமட்டும் அவரைப்பற்றி முதலில் தெரியும். இரண்டு படம் முடிச்சிட்டு வாங்க, படம் பண்ணலாம்னு சொல்லியிருந்தேன், இரண்டுபடம் முடிச்சிட்டு வந்தாரு, நானும் கொடுத்த வாக்கை காப்பாற்றிட்டேன் .இவர் திறமையானவர் என்பதையும் படத்தில் நிரூபித்துவிட்டார். 

கொக்கி குமார் கதாபாத்திரத்தில் அரசியல் சாயல் இருந்தாலும், முழுக்க அரசியல் பேசும் படமா முதல் முறை நடிக்கிறேன். அதுவும் இரண்டு கேரடரில் என்பதால் மிகுந்த  எதிர்பார்ப்புடன் தான் நடித்தேன். டப்பிங் முடிந்தது. தீபாவளிக்கி கொடி பறக்கபோகுது.  

 

 

சந்தோசங்களிலும், வெற்றிகளிலும் பலர் என் பக்கம் இருந்துருக்காங்க. என் தோல்வியிகளிலும், துக்கங்களிலும் என்கூட தோள் கொடுத்து நின்றவர் வெற்றிமாறன்.  தேசிய விருதுவாங்கி கொடுத்திருக்கும் இந்தமாதிரியான நண்பர் கிடைக்க கொடுத்துவைத்திருக்கணும். தேங்க் யூ வெற்றி சார்...” என்று முடித்தார் தனுஷ்.  

கொடி செய்தியாளர் சந்திப்பு ஆல்பத்திற்கு க்ளிக் செய்க

-பி.எஸ்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close