Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ் சினிமாவில் கறுப்புப் பணம் - அதிரவைக்கும் ஃப்ளாஷ்பேக்

தமிழ் சினிமாவில் 1000, 500 ரூபாய் கரன்சி கட்டுகள்தான் மழைநீராய் செலவாகும். முன்னணி  நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தில் பாதி வெள்ளை, பாதி கறுப்பு என்று பிரித்து வாங்கிக் கொள்வது வழக்கம் கவியரசு கண்ணதாசன்  தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கருப்பு பணம்’ வெளிவந்து 63 ஆண்டுகள் ஆகிறது. இப்போது சினிமாவில் கன்னாபின்னாவென கரைபுரளும் கறுப்புப் பணத்தை அப்போதே திரைப்படமாக்கி அன்றுள்ள ஹீரோக்களை கிடுகிடுவென நடுங்க வைத்தார், கண்ணதாசன். அதுமட்டுமல்ல 1952-ல் வெளிவந்த ‘பணம்’ திரைப்படமும் பரபரப்பாக பேசப்பட்டது. ‘கருப்பு பணம்’, ‘பணம்’ திரைப்படங்கள் குறித்து அந்த படங்களின் உரிமையை இப்போது தன் கைவசம் வைத்துள்ள கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனின் மருமகளும், வழக்கறிஞருமான ஜெயந்தி கண்ணப்பணிடம் கேட்டோம்.

“சிவாஜி முதன்முதலில் ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘பராசக்தி’. அந்தபடம் ரிலீஸாகி  32 நாட்கள் கழித்து சிவாஜி நடித்த ‘பணம்’ திரைப்படம் வெளியானது. என் மாமா ஏ.எல்.சினீவாசன் முதன்முதலில் தயாரித்த ‘பணம்’ படத்தில் சிவாஜியுடன் பத்மினி ஜோடியாக நடித்தார்.  கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கி இருந்தார். முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதன்  - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்த திரைப்படம் ‘பணம்’. இந்த படத்தில் இடம்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் ‘எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன்’ என்கிற பாடல் கேட்காத காதுகளே அந்த காலத்தில் இல்லை.

என் சின்ன மாமா சினிமாவில் கொடிகட்டி பறந்த காலம் அது. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் தங்கள் சம்பளத்தை கறுப்புப் பணமாக பெறுவதை கண்கூடாக பார்த்து கொந்தளித்தார். சினிமாவில் புழங்கும் கறுப்புப் பண விவகாரம் அவரை சினிமாவாக எடுக்க தூண்டியது. ‘கருப்பு பணம்’ திரைப்படத்துக்கான கதையை, வசனத்தை உருவாக்கினார். நாயகனாக நடிக்க எம்.ஆர்.ராதாவை ஒப்பந்தம் செய்தார். முதலில் சந்தோஷமாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ராதா படத்தின் கதையை முழுதும் கேட்ட பிறகு நடிப்பதற்கு தயங்கினார். ‘நான் இந்த படத்தில் நடித்தால் அதன்பின் மற்ற ஹீரோக்கள் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது எனக்கும், அவர்களுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு ‘கருப்பு பணம்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார், எம்.ஆர்.ராதா.

என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய 'எங்கே தேடுவேன் பணத்தை...'  பாடலின் வீடியோ.

 

 

கவிஞருக்கு கோபம் வந்துவிட்டது அதன்பின்  ‘கருப்பு பணம்’ படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். தனவந்தர் கதாபாத்திரத்தில் பாலையா நடித்தார். அவருக்கு மகள் வேடத்தில் தர்மாம்பாள் அதாவது கனிமொழியில் தாயார் ராஜாத்தி அம்மாள் நடித்து இருந்தார். ‘மாலையிட்ட மங்கை’, ‘வானம்பாடி’ திரைப்படங்களை இயக்கிய  ஜி.ஆர்.நாதன் இயக்கினார். கறுப்புப் பணத்தை சேர்த்து குவித்து வைத்திருக்கும் பணமுதலைகளிடம் இருந்த அந்த பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வது மாதிரி  ‘கருப்பு பணம்’ திரைப்படத்தின்  திரைக்கதையை அமைத்து இருந்தார், கவிஞர். ‘கருப்பு பணம்’  படத்தின் கதை, திரைக்கதையை அப்படியே  அப்பட்டமாக காப்பியடித்துதான் டைரக்டர் ஷங்கர் தனது ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தை உருவாக்கினார்.” என்று அதிர்வான சம்பவங்களை அடுக்கினார்.

- சத்யாபதி

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

[X] Close