Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரைச்சங்கங்கள் காவல்துறை, நீதித்துறை படியேற என்ன என்ன காரணங்கள்?

திரை

அரசியல்  களத்தை  விட பரபரப்புக்கு  பஞ்சம் இல்லாமல் இருக்கிறது தமிழ் சினிமா வட்டாரம். திரை சங்கங்களின் பழைய  நிர்வாகிகள் மீது புகார்களை  கொடுக்க தினமும் காவல் நிலைய நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி வருகின்றனர் திரை சங்க நிர்வாகிகள்.சினிமாவில் இல்லாத திருப்பங்களும் அதிரடி காட்சிகளுடன் சஸ்பென்ஸ் படத்துக்கான திரைக்கதையுடன் தினம் ஒரு புகார்களுடன் திக்கு  முக்காடி தான் போயுள்ளது திரையுலகம். 

இதற்கு எல்லாம் சிகரம் வைப்பது  போல் நேற்று  ஒரே நாளில் நடிகர் சங்கமும் ஒளிப்பதிவாளர் சங்கமும் காவல் நிலைய படி ஏறி இருக்கின்றனர்.அவர்கள்  காவல் நிலையம் நோக்கி  வர உள்ளே வேறு காரணங்கள்  இருந்தாலும் வெளியில்  பொதுப்படையான விஷயங்களுக்காக காவல்  நிலையம் வந்ததாக  கூறி வருகின்றனர். திரை சங்கங்கள் காவல் நிலைய படி எற உண்மையான  காரணங்கள்  என்ன ?

நடிகர் சங்கம் 

நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் போது  பிரச்சனையும் இணைந்தே பொறுப்பு ஏற்று  கொண்டது என்றே சொல்லலாம். ஊழல் புகார்கள் விமர்சனங்கள் என முதலில் காவல் நிலைய  படி ஏறியது நடிகர் சங்கம் தான். கூடவே நீதிமன்ற வழக்குகள் என சொல்ல முடியாத இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளது நடிகர்  சங்கம்.

இந்த நிலையில் தான் நடிகர் சங்கம் கணக்குகளை வெளியிட்டு சற்று மூச்சு  விடலாம் என நினைத்து கொண்டு  இருந்த நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு அதிலும் சிலர் சிக்கலை  கிளப்பினார்கள்.  நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட்டில் ஊழல் நடந்துள்ளது என  கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம்  புகார் அளித்தனர் .அந்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராகாததால் வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தான்  வரும் 27 ம் தேதி லயோலா கல்லுரியில் நடிகர் சங்க பொது குழு நடத்தப்படும் என அறிவிக்க அதற்கும் சிலர் கட்டையை போட்டனர். ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள ஒரு அமைப்பின் கூட்டத்தை கல்லூரிக்குள் நடத்த  கூடாது. இந்த கூட்டத்திற்கு அரசியல் தொடர்பு உடையவர்கள்,என பல்வேறு  தரப்பினரும் வருவதால் கல்லூரி மாணவர்கள்  பாதிக்கப்படுவார்கள்  என சுஜிதா என்பவர் நிர்வாகத்திற்கும்,கல்வித் துறைக்கும்,கமிஷனர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பினார். பின்னர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதே போன்று பத்திரிக்கையாளர் அன்பு என்பவரும் நடிகர் சங்க  பொது குழு தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அளித்துள்ள புகாரில்  அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார்(சுய நிதி) கல்வி நிறுவனங்களுக்கு உயர் அழுத்த மின்சாரத்திற்கான மின் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.  இந்த மின் கட்டண சலுகைகள் அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன்  கருதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகைகளை தனியார்(சுய நிதி) கல்வி நிறுவனங்கள்,  அகில இந்திய அளவில் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் பல கருத்தரங்களுக்கு, பொது நிகழ்ச்சிகளுக்கும் மின் கட்டண சலுகை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள்.

அகில இந்திய அளவில் அதாவது தேசிய அளவில் தனியார்(சுய நிதி) கல்வி நிறுவனங்களில் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், பொது நிகழ்ச்சிகளுக்கும் தற்காலிகமாக மின் இணைப்பு(வணிக ரீதியாக) பெற வேண்டும். ஆனால் மின்சாரவாரியத்தின் அதிகாரிகளின் பின்னணியில் மின் கட்டண சலுகைகளை முறைகேடாக, அரசு இழப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துகிறார்கள்.

சென்னை லயோலா கல்லூரியில் தினமும் ஏதாவது தேசிய அளவில் கருத்தரங்கள் நடக்கிறது.  உதாரணமாக டிசம்பர் 5மற்றும் 6ம் தேதிகளில் P&G Research Department of advanced Zoology and Biotechnology என்ற பெயரில் நடக்க இருக்கும், தேசிய அளவிலான கருத்தரங்கத்தில், கலந்து கொள்ளுபவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.  ஆனால் இந்த கருத்தரங்கரத்திற்கு கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அளிக்கப்படும் மின் கட்டண சலுகையின் படி அளிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

 தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கடந்தாண்டும் லயோலா கல்லூரியில் நடந்தது,  தற்போது நவம்பர் 27ம் தேதி பொதுக்குழு நடக்க உள்ளது.  கடந்தாண்டு நடத்தப்பட்ட பொதுக்குழுவிற்கு மின் கட்டண சலுகையின் படி அளிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். நவம்பர் 27ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்துவார்கள்.

 கடந்த ஆறு ஆண்டுகளில் லயோலா கல்லூரி நிர்வாகம் தேசிய அளவில் நடத்தப்படும் கருத்தரங்ம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும்( தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு உள்பட) தற்காலிக மின் இணைப்பு(வணிக ரீதியாக) பெறவில்லை. ஜெனரேட்டரும் பயன்படுத்தவில்லை. அதனால் லயோலா கல்லூரியில் கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார பயன்படுத்திய, மின் அளவை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும்.  சலுகை விலை மின்சாரத்தை, பயன்படுத்தி மின்சாரவாரியத்திற்கு இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பை, பல மடங்கு அபராதத்தொகையுடன் வசூல் செய்து, கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். 

  தனியார்(சுய நிதி) கல்வி நிறுவனங்கள் முறைகேடாக மின் கட்டண சலுகையை பயன்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு கடந்த பத்தாண்டுகளில் சுமார் ரூ500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது..  தனியார்(சுய நிதி) கல்லூரிகளில் நடக்கும் தேசிய கருத்தரங்கம் மற்றும் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு மின்சாரவாரியம் அளிக்கும் சலுகை விலை மின்சாரத்தை பயன்படுத்த தடை விதிக்க உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும் “ என்று புகார் அனுப்பி உள்ளனர். 

இந்த நிலையில்  தான்  கூடுதல்  பாதுகாப்பு கேட்டு நடிகர் சங்க  நிர்வாககள் நேற்று கமிஷனர் அலுவலகம் வந்தனர்.அங்கு செய்தியாளர்களை  சந்தித்த பொன்வண்ணன்  பொதுக்குழுவிற்கு  பாதுகாப்பு கேட்டு முன்பே  மனு அளித்து இருந்தோம். கமிஷனரும் உரிய  பாதுகாப்பு  அளிப்பதாக உறுதியளித்து இருந்தார்.இடையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளதால். தற்போது கூடுதல்  பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளோம்

பொதுக்குழுவை  நடத்த  கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  இருப்பது விவரம் தெரியாமல் செய்துள்ளனர்.ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை எப்படி பொதுக்குழுவை கூட்ட  முடியும் என்று கேட்டு  இருக்கின்றனர்.கடந்த  முறை  கூட்டியது முன்னாள் நிர்வாகத்தினர் நாங்கள் பொறுப்பு  ஏற்ற  பிறகு இனி  மேல் தான் கூட்ட  உள்ளோம்.

ஏற்கனவே அறிவித்த ரத்து  செய்தது.அப்போது  உள்ளாட்சி  தேர்தல் மற்றும் தீபாவளி நேரம் என்பதால் தள்ளி  வைத்தோம்.இது உள்ளாட்சி சட்டத்திற்கு உட்பட்டு செய்த  விஷயம்  தான் இது எல்லாம் தெரியாமல் அவர்கள் வழக்கு  தொடர்ந்து உள்ளனர்.திட்டமிட்டபடி பொது குழு  நடக்கும் நீதிமன்ற  விவகாரங்களை சட்டப்படி  சந்திப்போம்,மற்றபடி நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் இப்போது  இல்லை என்று  தெரிவித்தார்.  

இது குறித்து மூத்த நடிகர் சங்க  நிர்வாகி ஒருவர்  கூறும் போது இந்த பொது  குழுவில் பல்வேறு சிக்கல்கள்  நடக்க  வாய்ப்பு உள்ளது.ஒவ்வொரு குரூப்பும் தங்களை  பாதுகாத்து  கொள்ள தங்களது ஆதரவாளர்களை தயார்படுத்தி  உள்ளனர். மேலும் புதிய  நிர்வாகிகள்  மீது  ஊழல் புகார்களை சிலர் ஆதாரப்பூர்வமாக வெளியிட போவதாக கூறி வருகின்றனர்.

மேலும் ராதா ரவி ,சரத்குமார் நிர்வாககளாக இருக்கும் போது சங்கத்தின் சொத்துக்களை நிரந்தர டிரஸ்ட்டீ என  கூறி  சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளதை தற்போது கண்டுபிடித்து  உள்ளனர். இந்த  விவகாரம் பொதுக்குழுவில் பேசும் பொது அவரது ஆதரவாளர்கள்  எதிர்ப்பு  தெரிவிப்பார்கள். மேலும் தற்போது நீதிமன்றத்தில்  வழக்கு  தொடர்ந்து உள்ள நிர்வாகிகளை பொது குழுவிற்கு அனுமதிக்க  வேண்டும் என்றும் பிரச்சனை  நடக்கும்.

சிலர் லயோலா கல்லூரியில் பொதுக்குழுவை நடத்தக் கூடாது என  புகார் அளித்து  வருகின்றனர். அவர்களும்  பொது குழு நடக்கும்  அன்று அங்கு வந்த எதிர்ப்பு  தெரிவிக்க வாய்ப்பு  உள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்து  தான் தற்போது கூடுதல் பாதுகாப்பு கேட்டு காவல் துறையை நடிகர் சங்க  நிர்வாகிகள் அணுகியுள்ளனர்  என முடித்து  கொண்டார்.

 

ஒளிப்பதிவாளர் சங்கம் 

நடிகர் சங்கத்தை போன்றே ஒளிப்பதிவாளர்  சங்கத்திற்கு இப்போது   தான் புதிய  நிர்வாகிகள் வந்துள்ளனர்.இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். பதவிஏற்ற புதிய உறுப்பினர்கள், இதற்கு முன் பொறுப்பில் இருந்த பெப்சி சிவாவின்  மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் 

அந்த புகாரில், “ 2008 முதல் 2014 வரைக்குமான சங்கத்தின் கணக்குகள் சரியாக ஒப்படைக்கப்படவில்லை. அடுத்ததாக, 2015ல் மலேசியாவில் நடந்த SICA விருது நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட கணக்குகளில், பல லட்சத்திற்கு செலவு செய்துவிட்டு, அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது, அது சம்பந்தமாக பலமுறை, கணக்குகளை கேட்டும், பெப்சி சிவா தரவில்லை. 

இதனால் விருது நிகழ்ச்சியை ஒளிபரப்பு உரிமம் பெற்ற சன் TV-வின் TDS பணமான 37.5 லட்சத்தை திரும்ப பெற முடியாத நிலையில் இருக்கிறது. மற்றும் சாலிகிராமத்தில் நில மதிப்புக்கு மீறி 1.25 கோடி ரூபாயை முன் பணமாக செலுத்தி, மேலும் 80 லட்சம் ரூபாய் அந்த நிலத்திற்கு தரவேண்டுமென்று ஒப்பந்தம் செய்து, SICA சங்கத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பையும், பாரம்பரியமிக்க இச்சங்கத்திற்கு அவப்பெயரை சிவா (முன்னால் பொது செயலாளர்) ஏற்படுத்தி விட்டார். 

8 வருடமாக முறையாக வருமான வரி செலுத்தாதனால்,இந்த ஆண்டு 80(G)யின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியவில்லை, அதனால், சங்கத்திற்கு வரவேண்டிய நன்கொடைகள் பெற முடியாத நிலை இருக்கிறது, அதனால் மூத்த உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித் தொகை மற்றும் உறுப்பினர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முடியாமல் இருக்கிறது” என்று  புகாரில் குறிப்பிட்டு இருந்தனர் 

இது குறித்து பேசிய  பி.சி.ஸ்ரீராம்  “ கணத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர தாக்கல் செய்யாததால் இந்த முறை ஆடிட்டிங் செல்லும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து பலமுறை அவரிடம் விளக்கம் கேட்டோம். எந்த பதிலும் தராததால் இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்று SICA உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து ஆலோசித்தப்பின்னரே, இன்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். என்று கூறியிருந்தார் 

இவரது  புகார்  குறித்து பெப்சி சிவாவிடம்  கேட்ட போது  

இதற்கு நான்  பதில் சொல்வது என்  குடும்பத்தை நானே குறை சொல்லுவது மாதிரி வேறு சங்கங்களில்  இது போல  யாராவது என் மேல்  புகார் கொடுத்து  இருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லி இருப்பேன். டீ குடிக்க  காசு இல்லாத  காலத்தில் இருந்து அந்த  சங்கத்தில் இருந்து உள்ளேன்.ஒளிப்பதிவாளர் சங்கத்துக்குள் நான்  நுழையும் போது சங்கத்தின் கை இருப்பு ஒரு லட்ச ரூபாய்  மட்டுமே. 

இன்று நான் வெளியேறும்  போது  இரண்டு  கோடி வைத்து விட்டு தான்  வந்தேன். பி சி சார் தான்  என் குருநாதர். என் அத்தனை  உழைப்புக்கும்  அவரு தான்  காரணம். இந்த விஷயத்துல  அவரு மேல நான்  எந்த குறையையும்  சொல்ல  விரும்பல. அப்படி சொன்னா  எங்க அப்பா  பத்தி நானே தப்பா  சொல்ற  மாதிரி  இருக்கும்.ஆனா அவரே என மேல  புகார் கொடுத்து இருக்கிறது தான்  மனசுக்கு  சங்கடமா  இருக்கு.

 112 ரூபாய் சந்தா  வாங்கி வளர்த்த  சங்கம்  இது.இப்ப என் மேல புகார் சொல்லி இருக்குற யாராவது 40 லட்ச  ரூபாய் சிவா கிட்ட தான்  கொடுத்தேன் சொல்ல  சொல்லுங்க பாப்போம். இவங்க புகார் சொல்ற அந்த நிகழ்ச்சியை  நான்  மட்டும்  தனியா  நடத்தல  இன்னைக்கு அவரோட  புகார்  கொடுக்க கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவங்களும்  தான் அன்னைக்கு  கூட இருந்தாங்க. இப்ப நான் மட்டும் தான்  பொறுப்புன்னு சொல்லுறது எப்படி சரி?

 சங்கத்து  கணக்கு எல்லாத்தையும் சரி பண்ணி  கொடுத்துட்டு  தான்  வெளிய  வந்தேன்.கொஞ்ச நாளைக்கு  முன்னாடி கூட ஆடிட்டர் வச்சு  எல்லா  கணக்குகளையும்  அவங்ககிட்ட  ஒப்படைத்து  கையெழுத்து போட்டு  கொடுத்துட்டு தான்  வந்தேன் ஆனா  இப்ப சொல்றாங்க நான்  கணக்கு  கேட்டு சொல்லலைன்னு. இந்த புகார் கொடுக்குறது எல்லாம் எதுக்குனா அடுத்த  மாசம் பெப்சி சங்கத்துக்கு தேர்தல்  வருது 

பெப்சில  என் மேல எந்த  புகாரும் இல்ல சம்பள பிரச்சனை அது இதுன்னு சங்கத்தோட எல்லா பிரச்சனைகளும் முடிஞ்சு நல்ல  படியா  போய்க்கிட்டு  இருக்கு. இங்க எதுவும் பண்ண முடியாதவங்க   வெளிய இருந்து என் மேல புகார் கொடுக்க  வச்சு எப்படியாவது தேர்தல்ல நிக்க விட பண்ணி  பெப்சி கைப்பற்ற   சிலர் முயற்சி பண்றாங்க. அதுக்கு தான்  பி சி சாரை தூண்டி  விட்டு புகார் கொடுக்க  வச்சு இருக்காங்க.எனக்கு என்ன  கவலையின்னா இதுக்கு  எப்படி சார் ஒத்துக்கிட்டாருன்னு  தெரியலை..அப்புறம் சிவகார்த்திகேயன்  தயாரிப்பாளர் சங்க  பேச்சு வார்த்தைக்கு  வரவில்லை  என்றால் கேமரா அனுப்ப  மாட்டேன் என சொன்னதாக  கூறுவது  தவறு .இந்த  பிரச்சனையில்  இரண்டு பக்கத்திலும்  எனக்கு கெட்ட  பேரு. கேமரா அனுப்பாதேன்னு  ஒருபக்கம்,அந்த பக்கம் ஷூட்டிங்  நிக்குது. இங்க பேச்சு வார்த்தை முடிச்ச  உடனே ஷூட்டிங்கை நடத்த எல்லாம்  ரெடி பண்ணி  கொடுத்தேன் .

எது எப்படியோ இந்த விவகாரம் தொடர்பா பெப்சி சங்க உறுப்பினர்களிடம்  பேசி அடுத்து என்ன பண்ணலான்னு  முடிவு  பண்ணப்போறோம்.காவல் துறையிடம்  இவர்கள் கொடுத்த புகார்களை சட்ட ரீதியா சந்திக்க  தயாரா  இருக்கேன்

 என சொல்லி முடித்தார்.   

இனி வரும் நாட்களில் இந்த  பிரச்சனைகள்  மேலும் மேலும் அதிகரித்து  கொண்டு தான்  செல்லும் தொழில்  சங்கள் தொழிலாளர் நலனுக்காக  இல்லாமல் அதை வைத்து தங்களை  வளர்த்து  கொள்ள  நினைத்தால் சங்கங்கள் நீதி மன்ற வாசலிலும் காவல்  நிலைய கதவுகளையும் தட்டுவது அதிகமாகத் தான்  செய்யும். இதில்  பாதிக்க  படப்போவது அப்பாவி  உறுப்பினர்கள்  மட்டும் தான் .

-பிரம்மா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close