Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட... ‘பாபநாசம்’ தெலுங்கு ரீமேக்கின் இயக்குநர் இவரா! #CelebrateWoman

அன்று....  பெண்களுக்கான உலகம் சிறியதாக இருந்தது. ஆனால், இன்று... ஒவ்வொரு துறையிலும் தங்களின் அடையாளத்தை அழுத்தமாகப் பதிவு செய்துவருகிறார்கள் பெண்கள். சாதனையில் உச்சம் தொட்டாலும்,  இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் முன்னேற்றம் கரடுமுரடான பாதைகளுக்கு நடுவே பெறப்படுபவைகள் தான். அந்த வரிசையில் சினிமாவிலும் பெண்களின் தடம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண் இயக்குநர்களாக இவர்களின் முன்னிலை நிச்சயமாய்ப் பாராட்டப்படவேண்டிய ஒன்று.   பொதுவாக ஆசைகளையும், சுதந்திரத்தையும், சமூகத்தின் மீதான கோவத்தையும் பிரதிபலிக்கும் திரையாக சினிமாவைப் பார்க்கவும், இயக்கவும் தொடங்கிவிட்டார்கள் பெண் இயக்குநர்கள்.

பெண் இயக்குநர்கள்

நடிகையாக, நடனக்கலைஞராக, ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிவிடலாம். மற்ற எந்தக் கலைத்துறையிலும் தனித்து இயங்கிவிட முடியும். திரைப்படத்தில் இயக்குநராக தனித்து விளங்குவது, அவ்வளவு சுலபமில்லை. அந்த இடத்தில் ஆளுமைத்திறனும், படைப்பாற்றலும், நிச்சயம் வேண்டும். உலகளவில் பல பெண் இயக்குநர்கள் தங்களின் இருப்பை தற்பொழுது பதிவுசெய்யத் தொடங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் தமிழ்சினிமாவும் மிகமுக்கியமான ஒன்று. 

நேரிடையாகப் பெண் இயக்குநராக  பிரபலமாகிவிடுவதும், சாதித்துவிடுவதும் அன்றைய காலத்தில் சவாலான விஷயம். அதனால் நடிகையாகி   பின்னர்  இயக்குநர்களானார்கள் சிலர்.  நடிப்பிலும், இயக்கத்திலும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார்கள்.  இதிலிருந்து தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்களின் வருகையை இரண்டாக பிரித்துவிடலாம்.

1. பெண் இயக்குநர்களான நடிகைகள் 

2.  நேரடிப் பெண் இயக்குநர்கள்

பெண் இயக்குநர்களான நடிகைகள்: 

லட்சுமி

சினிமா வாரிசு... தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் நடிகையாக உச்சம் தொட்டவர். வயதிற்கு ஏற்ற மாதிரி கேரக்டர் ரோல்களிலும் மிளிர்ந்தவர் லட்சுமி. நடிப்புக்கு நடுவே இவர் இயக்கிய ஒரே படம் ‘மழலைப் பட்டாளம்’. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. 

சுஹாசினி

இயக்கத்தில் மணிரத்னத்தின் சாயலைப் பெற்றவர் சுஹாசினி. 1995களில் இவர் இயக்கத்தில் வெளியான ‘இந்திரா’ சாதியத்தைச் சாடிய மிகமுக்கியமான படம். பெண்மையின் பெருமையையும், சாதியின் கொடுமையையும் ஒருங்கே உணரவைத்த படம்.  இன்றும் ‘அச்சம் அச்சமில்லை.... இனி அடிமை எண்ணம் இல்லை...’ ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.  ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். வசனகர்த்தாவாக மணிரத்னத்துடன் இன்றும் பயணித்துவருகிறார் சுஹாசினி. 

ரேவதி

எயிட்ஸ் பற்றிப் பேசுவதற்கே பயந்துகொண்டிருந்த நேரத்தில், தைரியமாக ஒரு படத்தை எடுக்க துணிந்தவர் ரேவதி. 2004ல் சல்மான்கான், அபிஷேக் பச்சன், ஷில்பா நடிப்பில் ‘ பிஹிர் மிலேங்கே’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் அமெரிக்க படத்தின் தாக்கத்தில் இந்தியில் இயக்கினார். தவிர, மற்ற இயக்குநர்களுடன் இணைந்து சில படங்களையும் இயக்கியிருக்கிறார் ரேவதி. 

ஸ்ரீப்ரியா

எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை.  த்ரிஷ்யம் மலையாளப் படத்தின் தமிழ் வெர்ஷன்  ‘பாபநாசம்’ படம் நிச்சயம் நினைவிருக்கும்.  அதே த்ரிஷ்யம்,  தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கிலும் ‘த்ரிஷ்யம்’தான் பெயர். அதை இயக்கியவர் ஸ்ரீப்ரியா!   தவிர, நித்யாமேனன் நடித்த ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தையும் இயக்கியுள்ளார். தற்பொழுது இயக்கத்தில் ஆர்வமாக களம் இறங்கியிருக்கும் ஸ்ரீப்ரியாவின் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளியாகவிருக்கிறது. 

லட்சுமி ராமகிருஷ்ணன்

சினிமா, தொலைக்காட்சி என்று தனக்கான தனித்துவ பார்வையும், சிந்தனையும் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்கத்தில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ என மூன்று மூன்றுவித கதைக்களங்கள்.  துணிச்சலும், தெளிவும் கொண்டது இவரது படங்கள்.  சமூகம் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் இவரது படைப்பில் அடுத்தடுத்து படங்கள் நிச்சயம் வெளியாகும். 

ரோஹிணி 

ஒவ்வொரு நடிகைக்குமே தன்னுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் படமாக்கிப்பார்த்துவிடவேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதற்கு ரோஹிணியும் விதிவிலக்கல்ல... சேரன், பசுபதி, நித்யாமேனன் நடிப்பில் விரைவிலேயே இவரின் ‘அப்பாவின் மீசை’ வெளியாகவிருக்கிறது. 

பெண் இயக்குநர்கள்

நேரடி பெண் இயக்குநர்கள்:

ஜானகி விஸ்வநாதன்:

ஊடகவியளாலராக ஜானகி, எழுத்து, ஆவணப்படம், சினிமா என்று தனக்கான வட்டத்தை விரிவுப்படுத்தியவர். 2001ல் இவர் இயக்கிய ‘குட்டி’ திரைப்படத்திற்காக தேசிய விருதுபெற்ற இயக்குநர்.  பெண் சிறுமிகள் சந்திக்கும் பிரச்னையை மையமாகக் கொண்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது ‘குட்டி’. 

சாரதா ராமநாதன்: 

2007ல் வெளியான ’சிருங்காரம்’ இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம். முதல் படமே முன்று தேசிய விருதினையும், இரண்டு தமிழக அரசு விருதினையும் பெற்றது.  மணிரத்னத்தின்  ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்துவரும் அதிதி ராவ் தமிழில் அறிமுகமான படம் இது. தற்பொழுது நந்தா, ஆண்ட்ரியா நடிப்பில் ‘புதிய திருப்பங்கள்’ என்ற படத்தினையும் இயக்கிவருகிறார் சாரதா ராமநாதன். 

நந்தினி: 

ரூபா மஞ்சரி, அஞ்மல் அமீர் நடிப்பில் வெளியான ‘திருதிரு துறுதுறு’ இவரின் அறிமுகப்படம். 2014ல் தயாரான ‘கொலைநோக்குப் பார்வை’ சில காரணங்களால் வெளியாகாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. இதற்கு நடுவே ‘சிவப்புக்கல் மூக்குத்தி’ என்று கிராஃபிக் காமிக் நாவலை எழுதிமுடித்துவிட்டார் நந்தினி. 

சுதா கொங்கரா: 

மணிரத்னத்தின் பட்டறையிலிருந்து வந்து இயக்குநராக ஜொலித்தவர் சுதா கொங்கரா . 2010ல் துரோகி. இடையில் நீண்ட இடைவெளி விட்டு, மீண்டும் 2016ல் ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் பலரையும் தன்பக்கம் ஈர்த்தவர். தற்பொழுது இறுதிச்சுற்று படத்தையே தெலுங்கில் ‘குரு’ என்ற பெயரில் இயக்கிவருகிறார். 

கிருத்திகா உதயநிதி: 

சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’  கிருத்திகா உதயநிதி இயக்கினார். அடுத்தடுத்த படங்கள் இயக்கவும் தயாராகிவருகிறார். 

ஐஸ்வர்யா & செளந்தர்யா : 

ரஜினியின் இரு மகள்களுமே இயக்கத்தில் கில்லாடிகள். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘3’, ‘வைராஜா வை’ படங்கள் செம ஹிட். தற்பொழுது மாரியப்பனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படத்தையும் இயக்கவிருக்கிறார். அவரின் சகோதரியான செளந்தர்யா படையப்பாவில் தொடங்கி பல படங்களில் கிராஃபிக் டிசைனராக பணியாற்றியவர். கோச்சடையான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தற்பொழுது தனுஷ் நடிக்கும்  ‘விஐபி 2’ பட இயக்குநர். 

உஷா கிருஷ்ணன்:

அஸ்வினி ஐயர் திரிவேதி இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் ‘அம்மா கணக்கு’ படமும், உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன் நடித்த ‘ராஜா மந்திரி’ படமும் ஒரே நாளில் ரிலீஸானது.  பெண் இயக்குநர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதே தமிழ் திரையுலகில் என்றும் நடந்திராத சாதனை.  

இவர்கள் மட்டுமில்லாமல், இன்னும் பல பெண் இயக்குநர்களை இந்தச் சமூகம் வரவேற்கக் காத்திருக்கிறது. பெண்களுக்கான குரல், பெண்களிடமிருந்தே ஓங்கி ஒலித்தால் மட்டும் தான் முழுமைபெறும். நிச்சயம் பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.....!  

- முத்து பகவத்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close