Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், இமான் ஆகியோர் கவனத்திற்கு... புதுக்கோட்டையிலிருந்து ஒரு குரல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பாடல்களை திருடிவிட்டதாக உருக்கமாகப் பேசும் ஒருவரின் வீடியோ வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவுகிறது. அந்த வீடியோவை வெளியிட்ட முஹம்மது இக்பாலுக்கு போன் போட்டேன். சீரியஸா பேசுவாருனு பார்த்தா அவர் சொன்ன தகவல் எல்லாம் குபீர் சிரிப்பு ரகம். அவர் பேசியது அப்படியே உங்களுக்கு.... (படிச்சா கண்டிப்பா தலை சுத்தும். சோடாவை பக்கத்துல வெச்சுக்கோங்க மக்களே!)

''புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம்தான் எனக்கு சொந்த ஊர். ஊர்ல எனக்கு பெயின்டிங் வேலை. சின்ன வயசுல இருந்தே பாட்டு எழுதி, கம்போஸ் பண்றதுனா பிடிக்கும். பாடவும் செய்வேன். ஒரு பாடலை உருவாக்க குறைஞ்சது பத்துப் பேராவது வேணும். ஆனா, நான் தனியாளாவே உருவாக்குவேன். 16 ராகங்களும் எனக்கு அத்துபடி. அதுபோக கோடிக்கணக்குல இருக்கிற கிளை ராகங்களும் தெரியும். (என்னங்க இது கிலோக்கணக்குல தக்காளி வாங்குற மாதிரியே சொல்றீங்க?) என்னுடைய பாடல்கள் பெரும்பாலும் அமிர்தவர்ஷினி ராகத்திலேயே அமையும். இதுவரை ஆயிரம் பாடல்களுக்கும் மேலே நான் உருவாக்கியிருக்கேன்'' என்றவர் மெயின் மேட்டருக்கு வந்தார். 

ரஹ்மான்

''அப்படி நான் கஷ்டப்பட்டு உருவாக்கின பாடல்களைத் திருடுவதையே ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வேலையா வெச்சுருக்கார். நான் செளதியில வேலை பார்க்கும்போது என் மனைவியை நினைச்சு உருக்கமா எழுதின பாட்டுதான் 'கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை'. அதை எப்படியோ திருடி 'பம்பாய்' படத்துல பாட்டா வெச்சுட்டார். (ஏங்க அப்படி பார்த்தாலும் அதை ஹீரோயின்தானே பாடுவாங்க. ஒரு லாஜிக் வேணாமாங்க?) ஒருநாள் சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்தேன். வழியில ஒரு மயில் வந்துச்சு. அதைப் பார்த்து மயிலிறகே மயிலிறகேன்னு பாட, அதைத் திருடி 'அன்பே ஆருயிரே' படத்துல வெச்சுட்டார். என் பாட்டைத் திருடுறதுக்காகவே ஊரைச்சுற்றி அவர் ஆள் போட்ருக்கார். அந்த டீம் என் பின்னாலேயே சுற்றி நான் பாடல் உருவாக்கும்போது ரகசியமா திருடி அவர்கிட்ட கொடுத்திடுறாங்க. (அய்யோ அவசரத்துக்கு முட்டிக்க பக்கத்துல சுவர்கூட இல்லையே!) சொன்னா நம்ப மாட்டீங்க, 'தாய்மண்ணே வணக்கம்' பாட்டும் என்னோடதுதான். அதை ரஹ்மான் நேரடியாவே வந்து திருடினார். எப்படின்னா எக்மோர் காமாட்சி லாட்ஜ்ல வெச்சுத்தான் நான் அந்தப் பாடலை கம்போஸ் பண்ணினேன். அந்த அட்ரஸை எப்படியோ கண்டுபிடிச்ச ரஹ்மான் பக்கத்துல ரூம் போட்டு நான் அசந்த நேரம் என் பாடலை எடுத்துக்கிட்டுப் போயிட்டார். (அதென்ன காய்கறியா மஞ்சப்பைல போட்டு எடுத்துகிட்டுப் போக?) அவர் பெயரில் வெளியான முக்கால்வாசிப் பாட்டு என்னோடதுதான். (பாட்டா? இசையா? பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு) என் பாட்டைத் திருடி இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்கீங்க, எனக்கு ஏதாவது நஷ்டஈடு கொடுங்கன்னு 20 வருஷமா அவருக்கு லெட்டர் போடுறேன். இதுவரைக்கும் அவர்கிட்ட இருந்து எந்தப் பதிலும் வரல, இக்பாலை வெச்சு நாம இவ்வளவு சம்பாரிச்சிருக்கோமே அவருக்கு ஏதாவது செய்வோம்னு அவரும் யோசிச்சது இல்லை. 

அந்த ஸ்லம்டாக் மில்லியனர் ஆஸ்கர் அவார்டுகூட நான் வாங்க வேண்டியது. இதெல்லாம் தெரிஞ்சு என் பையன்தான் இந்த விவரங்கள் வீடியோவா வெளியிட்டா, அது வைரலாகி நமக்கு ஒரு வழி கிடைக்கும்னு சொன்னான். அந்த நம்பிக்கைலதான் வாட்ஸ் அப்ல விட்டேன். எங்க ஊர்லகூட சொன்னாங்க, 'ரஹ்மான் மேல கேஸ் போட்டா, உனக்கு நியாயம் கிடைக்கும்னு, நான்தான் எதுக்கு அவரை கோர்ட்டுக்கு இழுத்து அசிங்கப்படுத்தணும்னு விட்டுட்டேன்' என்ற இக்பால் அடுத்து குறி வைத்தது இசைஞானியை. 'ரஹ்மான் மட்டும் கிடையாது, இளையராஜா 1971-ல இருந்தே என்கிட்ட பாடல் திருடிக்கிட்டு இருக்கார். இன்னும் சொல்லப்போனா அவர் அறிமுகமானதே என்னுடைய பாடலை காப்பியடிச்சுத்தான். 'காதலுக்கு மரியாதை', 'சின்னத்தம்பி'னு அவருடைய ஆல் டைம் பெஸ்ட் ஹிட்ஸ் எல்லாம் என்னோடது. அதுக்காக எல்லாமே என்னோடதுன்னு சொல்ற அளவுக்கு நான் மோசம் இல்லை. (பெரிய்ய்ய மனசு) சில பாடல்களை அவர் சொந்தமாவும் போட்டுருக்கார். 

அவ்வளவு ஏங்க இப்போ லேட்டஸ்டா 'கபாலி' படத்துல வந்த நெருப்புடா பாட்டுகூட என்னோடதுதான். அது திருடுபோன கதையைக் கேட்டா நீங்களே ஃபீல் பண்ணுவீங்க, (நாங்க முதல் பாராவுல இருந்தே ஃபீல் மட்டும்தான் பண்ணிகிட்டு இருக்கோம்) எங்க ஏரியாவில ஒருத்தன் பானிபூரி கடை வெச்சுருந்தான். அவன் பீடி குடிக்கும்போதும் நெருப்பு அவன் சட்டைல விழுந்துடுச்சு. நான் நெருப்புடான்னு கத்த நம்மைச் சுற்றித்தான் ஸ்பை இருக்காங்களே, உடனே அது கபாலி படத்துல பாட்டா வந்திருச்சு. விசாரிச்சதுல அந்த பானிபூரி பையன் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு நெருக்கமாம். (பானாவுக்கு பானாதான் அந்த நெருக்கம் போல) அந்த ஒரு வார்த்தையை அவன் ஒரு கோடி ரூபாய்க்கு வித்துருக்கான். இந்த பேட்டி மூலமா நீங்கதான் அவனைக் கண்டுபிடிச்சு எனக்கு சேரவேண்டிய பங்கை வாங்கிக் கொடுக்கணும். (எங்கே... நானே காசி, ராமேஸ்வரம்னு போகலாம்னு இருக்கேன்!) இவங்களைத் தவிர ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், எஸ்.ஏ ராஜ்குமார், சிற்பி, தீனா, பரணி, டி. ராஜேந்தர்னு ஏகப்பட்ட பேர் என் பாட்டைத் திருடியிருக்காங்க. (தியாகராஜ பாகவதரை மட்டும்தான் சாமி நீங்க சொல்லலை) அதனுடைய மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி. (ஒரு கோடிப்பே!) இந்தத் திருட்டு தொல்லையால நான் இப்போ பாட்டு கம்போஸ் பண்றதையே விட்டுட்டேன்'' என இக்பால் ஃபீலிங் காட்ட, 108-க்கு போன் செய்து வரச் சொல்லி அட்மிட் ஆனோம்.

-ஜூல்ஃபிஹார் அலி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close