Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க!” - ‘இசை’ ஹரிப்ரியா பெர்சனல்

ஆறு வருடங்களுக்கு முன்பு எப்படி இளம் தேவதையாக சின்னத்திரை உலகில் நடிக்க வந்தாரோ அப்படியே இருக்கிறார் ஹரிப்ரியா. அந்தக் குழந்தைத்தனம் இன்னும்கூட அதிகமாக மிளிர்கிறது. ‘கனா காணும் காலங்கள்’ கல்லூரியின் கதைதான் ஹரிப்ரியாவின் முதல் சீரியல். அடுத்ததாக ஜீ தமிழின் ‘மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்’. அதே சீரியலின் ஹீரோ விக்னேஷ்குமாருடன் காதல், கல்யாணம், குழந்தைகள் என அழகான குட்டி ஃபேமிலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ப்ரியமானவள்’, ‘லட்சுமி வந்தாச்சு’ என எக்கச்சக்க சீரியல்களில் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கிக்கொண்டிருக்கும் ஹரிப்ரியாவுடன் ஒரு ஜாலி சாட்...

ஹரிப்ரியா

“ 'ப்ரியமானவள்’ இசைப் பாப்பாவை எல்லோருக்கும் தெரியும். ஹரிப்ரியா பற்றிச் சொல்லுங்க.’'

“என்னோட பூர்வீகம் சென்னைதான். அப்பா ஃபைனான்ஸ் மேனேஜர்; அம்மா டீச்சர். நான் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் டான்ஸ் பாடப் பிரிவில் டிகிரி முடிச்சேன். விஸ்காம் டிப்ளமோ படிச்சிருக்கேன். மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பி.எஸ்ஸி., சைக்காலஜி. இப்போ எம்.பி.ஏ ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டிருக்கேன். படிக்கிறதுன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்.”

“மீடியா உலகுக்குள் எப்படி நுழைஞ்சீங்க?''

“டான்ஸ் படிச்சுட்டிருக்கிறப்பவே எனக்கு விஸ்காம் படிக்கணும்னு ஆசை. இயக்குநர் ஆகணும்கிறது என்னோட பெரிய ட்ரீம். அதனால்தான் விஸ்காம் டிப்ளமோ படிச்சேன். ரெண்டு, மூணு சேனல்கள்ல இன்டர்ன்ஷிப் பண்ணிட்டிருந்தேன். அந்தச் சமயத்தில் `கனா காணும் காலங்கள்' சீரியலுக்காக ஆடிஷன் அறிவிச்சது விஜய் டிவி . அதைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் `நீ போயே ஆகணும்'னு செல்லமா வற்புறுத்தினாங்க. அம்மாகிட்டயும், ‘அவ க்ளாசிக்கல் டான்ஸர். அதனால் நடிக்கிறதும் ஈஸி’னு சொல்லிட்டாங்க. அம்மா சொன்னதுக்காக அப்ளை பண்ணினேன். அதுக்கு அப்புறம் நேர்முகத்தேர்வில் செலெக்ட் ஆகி, சீரியலிலும் நடிக்க ஆரம்பிச்சேன். இதுதான் நான் சின்னத்திரையில் நுழைந்த கதை.”

``ஹரிப்ரியா - விக்னேஷ் லவ் ஸ்டோரி ப்ளீஸ்...''

“ `மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்' சீரியலில் நடிக்கிறப்போ, நாங்க ரொம்ப நல்ல நண்பர்கள். ரெண்டு பேரோட வீட்லயும் ரொம்ப நல்லப் பழக்கம். அப்போ அவர் வீட்லயும் அலையன்ஸ் பார்த்துட்டிருந்தாங்க. ஒருமுறை அவர், ‘பேசாம நாம ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?’னு கேட்டார். உடனே, அப்பா-அம்மாகிட்ட பேசி ஓகேவும் வாங்கினோம். `லவ் கம் அரேஞ்டு மேரேஜ்’ எங்களோடது. கல்யாணம் முடிஞ்சு அஞ்சு வருஷங்கள் ஓடிப்போச்சு. இப்போ எங்க பையன் ஸ்கூல் படிக்கிறார்; பொண்ணு இப்பதான் எல்.கே.ஜி போயிருக்கா. ஹேப்பி குடும்பம்.”

``முதன்முதலில் நடிக்க வந்தப்போ எப்படி இருந்தீங்களோ அப்படியே அழகா இருக்கீங்களே. என்ன சீக்ரெட் ?'’

“ஹையோ! பெரிய ரகசியமெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க. எப்பவும் சிரிச்சுக்கிட்டே, சந்தோஷமா, கோபமில்லாம இருந்தால் அதுவே பெரிய அழகுதான். மனசு சந்தோஷமா இருந்தாலே முகமும் அழகா இருக்கும். அதைத்தான் நான் எப்பவும் கடைப்பிடிக்கிறேன்.”

``விக்கியும் ‘வாணி ராணி’ சீரியலில் பிஸி. அவரோட ரொமான்ஸ் சீன் எல்லாம் பார்த்தா கோபம் வருமா?''

“சத்தியமா வராது. அதுதான் உண்மை. முதலில் எனக்கு நவ்யா ரொம்ப நல்ல தோழி. அதுதவிர, நானும் மீடியாவுல இருக்கேன். இது எங்களோட புரொஃபஷனல். `இந்த சீன்ல இன்னும்கூட நல்லா நடிச்சிருக்கலாம்'னு சொல்வேனே தவிர, சண்டைலாம் போட மாட்டேன்.”

``அனுஷ்கா-இசை இவர்களில் உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?''

``அச்சச்சோ... இப்படியெல்லாம் கேட்காதீங்க. எனக்கு ரெண்டு பேரையுமே ரொம்பப் பிடிக்கும். அனுஷ்கா என்னோட ரீ-என்ட்ரியில் கிடைச்ச மிகப்பெரிய ரோல். எடுத்தவுடனேயே நெகட்டிவ் ரோல் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அதிலும் நிறைய வெரைட்டி காமிக்கிற மாதிரியான ரோல்.

இசையைப் பொறுத்தவரை, அவ ரொம்பத் தைரியசாலி. இசை எந்தக் கடினமான சூழ்நிலையிலும் அழ மாட்டா. என்ன சொல்றது? லவ் பண்ற பையனுக்குப் பிரச்னைன்னா நேரில் போய், பிரச்னை பண்றவங்களை அடிக்கிற அளவுக்கு போல்டான பொண்ணு. கூடவே அடக்கமான பொண்ணும் கூட. அதனால் ரெண்டு கேரக்டர்களையும் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்'' எனக் கொஞ்சும் குரலிலேயே சொல்லி முடிக்கிறார் ஹரிப்ரியா.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close