Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அப்போதே நான் பேசியிருந்தால், என் நியாயத்தை நம்பியிருப்பார்கள்!” - வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமாரைச் சுற்றி எப்போதுமே பிரச்னைகள், சர்ச்சைகள். ‘`நான் ஒரு தாய். என்னைத் திரும்பத் திரும்ப சர்ச்சைக்குள் சிக்கவைக்காதீங்க... ப்ளீஸ்!'’ என்ற கோரிக்கையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார்

“உங்கள் வாழ்க்கை சிறிது காலம்  அமைதியாக இருந்தது. இப்போது மறுபடியும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. உங்களைச் சுற்றி என்னதான் நடக்கிறது?”

“விவரம் தெரியாத வயசுல எடுக்கும் முடிவுகளால நம்ம வாழ்க்கை அடியோடு மாறிப்போயிடும். அந்த முடிவுகளால நம்மகூட இருப்பவங்களும் பாதிக்கப்படுவாங்க. இதுக்கு நான் மிகப்பெரிய உதாரணம். ரொம்பச் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் நான் பண்ணின முதல் தப்பு. அதே வருஷத்துல குழந்தையைப் பெத்துக்கிட்டது ரெண்டாவது தப்பு. இதையெல்லாம் விதின்னு சொல்றதா... இல்லை என்னோட முட்டாள்தனம்னு சொல்றதான்னு தெரியலை.

பொண்ணா பொறந்த ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில கஷ்டம்-நஷ்டம், இன்பதுன்பம்னு எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கத் தெரிஞ்சிருக்கணும். அப்படி என் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களும் தப்பா போனதால் விளைந்த விளைவுகளை இன்னிக்கு  நான் சந்திச்சுட்டிருக்கேன். இப்பகூட நான் ஒரு நடிகையா பேசலை; ஒரு பெண்ணா, ஒரு தாயா பேசுறேன். ஒரு கணவனும் மனைவியும் பிரியும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தப் பிரிவு குழந்தைங்களைப் பாதிக்கும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகுது. அதுதான் என் குழந்தைகளுக்கும் நடந்துட்டிருக்கு.”

“உங்கள் மகன் ஸ்ரீஹரி, இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்?”

“அவர் இப்போ அப்பா (ஆகாஷ்)கிட்டதான் இருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கார். நல்லா படிக்கிறார். ஸ்போர்ட்ஸ்னா அவருக்கு ரொம்பவே இஷ்டம். அவரோட கஸ்டடி எனக்குக் கிடைச்சப்போ, குழந்தையோட மனசு டிஸ்டர்ப் ஆகிடக் கூடாதுனு அவங்க அப்பாகிட்டயே விட்டுட்டேன். வீக் எண்ட்ல குழந்தைங்க என்கூடதான் இருப்பாங்க. என்னோட போராட்டம், அவனுக்காக நான் பட்ட வேதனைகள் எல்லாம் ஒருநாள் நிச்சயமா அவனுக்குப் புரியும்.

என் குழந்தைங்களுக்கு நல்ல அம்மாவாதான் என்னிக்குமே நடந்துட்டுவர்றேன். அவரோட விருப்பங்களுக்கு மாறா அவரை வற்புறுத்தக் கூடாதுனு, அவரோட விஷயங்கள்ல தலையிடாம விலகிட்டேன். ஆகாஷுக்கும் எனக்கும் இன்னொரு பெண் குழந்தை இருக்கு. பெயர் ஜோவிகா. அவ இப்போ என்கூடதான் இருக்கா.”

“இரண்டாவது திருமணமும் உங்களுக்கு ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது... என்ன காரணம்?”

“முதல் விவாகரத்துக்கு அப்புறம், ரெண்டு வருஷம் தனியாத்தான் இருந்தேன்; ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை ரன் பண்ணிட்டிருந்தேன். `வெளி உலகச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க, ஒரு துணை அவசியம்'னு என் ஃப்ரெண்ட்ஸ் என்னை ஃபோர்ஸ் பண்ணினாங்க. அப்பதான் ஆனந்தராஜனை ஒரு மேட்ரிமோனியல் சைட் மூலமா சந்திச்சேன். அப்போ அவர், `அமெரிக்காவிலிருந்து வந்திருக்கேன். எனக்கு விவாகரத்து ஆகிடுச்சு’னு ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகினார். எனக்கும் விவாகரத்து ஆகியிருந்ததால, என் குழந்தைகளையும் என்னையும் நல்லாவே புரிஞ்சுப்பார்னு நினைச்சுதான் அவரை ரெண்டாவது திருமணம் செய்துக்கிட்டேன். ஆனா, அவரோடு பழகின பிறகுதான் அவர் சொன்னதெல்லாம் பொய், சரியான பித்தலாட்டக்காரர், அவரைப் பற்றிய மேலும் பல அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்தது. இதனாலதான் நான் விவாகரத்து முடிவுக்கே வந்தேன். இதையெல்லாம் வெளியே சொன்னா, எனக்குத்தான் அசிங்கம். அம்மா இறக்கிறதுக்கு ரெண்டு வருஷம் முன்னாடிதான், நான் ஆனந்தராஜனை விவாகரத்துப் பண்ணினேன்.
பொருளாதாரரீதியில் நான் என்னோட சுய உழைப்பில் வாழ்ந்தாலும் உணர்வுரீதியிலான உறவுகளோடு வாழணும்னு நினைக்கிறவள் நான். அதனால  நேர்மையா நடந்துக்கணும்னு நினைச்சேன். ஒருவேளை நான் உண்மைகளை எல்லாம் சொல்லியிருந்தால் எல்லாரும் என் பக்கம் இருந்த நியாயத்தை நம்பியிருப்பாங்களோ என்னவோ.”

“பெற்றோருடன் மனவருத்தம் இருந்ததே..?”

“என் வாழ்க்கையில் நடந்த எந்தச் சம்பவத்தையும் நான் அப்பா - அம்மாகிட்ட மறைக்கலை. ஆனந்தராஜனைவிட்டு வந்ததும், எல்லாத்தையும் அவங்ககிட்ட சொல்லிக் கதறினேன். ரெண்டு பேருக்கும் என்ன நடந்ததுனு தெரியும். `என் அப்பா - அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டேன்'னு அப்பவே எல்லா மீடியாக்களிடமும் தெரிவிச்சிருந்தேன். அம்மா இறக்கிற வரை அவங்ககூடதான் இருந்தேன். இப்பவும் என் ஃபேமிலி எனக்கு சப்போர்ட்டாதான் இருக்காங்க. இருந்தாலும், யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாதுனு நானாதான் விலகி இருக்கேன்.”

“குழந்தையை நீங்கள் கடத்திவிட்டதாக ஆனந்தராஜன் கூறுகிறாரே?”

“எனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆனப்போ, வார இறுதி நாள்ல குழந்தை என்கூட இருக்கணும்னு நீதிமன்றமே சொன்னது. கொஞ்ச நாள் அவரும் ஒழுங்கா குழந்தையைக் கொண்டுவந்து விட்டார். திடீர்னு ஒருநாள் குழந்தையைத் தூக்கிட்டு, ஹைதராபாத் போயிட்டார். `சரி, எங்கேயாவது குழந்தையைக் கூட்டிட்டுப் போயிருப்பார், திரும்பி வந்துடுவார்'னு நினைச்சேன். எனக்கு அப்போ எங்கே போயிருக்கார்னு தெரியாது. அட்ரஸும் தெரியாது. என்கிட்ட மெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி மட்டும்தான் இருந்தது. அதில் மெசேஜ் பண்ணி கேட்டுட்டே இருப்பேன். `குழந்தை நல்லாருக்கா. நான் வீடு மாத்தப்போறேன். புது அட்ரஸும் போன் நம்பரும் தரேன்'னு சொல்லிட்டே இருந்தாரே தவிர எதையும் தரவும் இல்லை, குழந்தையைப் பேசவிடவும் விடலை. என்னிக்கு இருந்தாலும் நம்ம குழந்தை நம்மகிட்ட வந்திடுவாங்கிற நம்பிகையில் இருந்தேன்.

மூணு வாரங்களுக்கு முன்னாடி எனக்கு ஒரு போன்கால் வந்தது. எடுத்தா, என் பொண்ணு அழுதுட்டே பேசறா. எனக்கு அவ வாய்ஸைக்கூடக் கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா, அவகிட்டப் பேசியே மூணு வருஷங்களுக்கு மேல ஆகுது. இப்போ அவளுக்கு ஏழு வயசு. அவளுக்கு தமிழ் தெரியாது. ‘மாம்... மம்மி வேர் ஆர் யூ?’னு கதறுறா. என்ன பண்றதுனே புரியலை. `எங்கே இருக்க... என்ன ஆச்சு?'னு கேட்டா, ‘என்னால இதுக்கு மேல பேச முடியாது. என் மியூசிக் டீச்சருக்கு எல்லாமே தெரியும். ப்ளீஸ் சீக்கிரம் வந்துடு’னு அழறா. நான் உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய், அவர் கம்ப்ளெய்ன்ட் பண்ண அதே போலீஸ் ஸ்டேஷன்ல, `என் குழந்தை போன் பண்ணி அழறா. அவ எங்கே இருக்கானு தெரியலை. கண்டுபிடிச்சுக் கொடுங்க... ப்ளீஸ்’னு கதறி கம்ப்ளெயின்ட் பண்ணினேன்.
அப்புறம் அந்த டீச்சரோட நம்பரை நெட் மூலமா கண்டுபிடிச்சுப் போனோம். `நல்லவேளை நீங்க வந்துட்டீங்க. குழந்தைக்கு ரொம்ப முடியலை. அவ ரொம்ப டிப்ரஷன்ல இருக்கா’னு கதை கதையா சொன்னாங்க. இவர் அங்கே ஒரு லாண்ட்ரி பிசினஸ் மாதிரி ஏதோ ஒண்ணு நடத்திட்டிருக்கார். வீட்டுல இருக்கிறதே இல்லை. குழந்தை பாவம் ரொம்பவே துடிச்சுபோய், ‘அம்மா எங்கே... அம்மா வேணும்’னு கேட்டப்போ ‘அவ நீ வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டா’னு அவர் சொல்லியிருக்கிறார்.  ஒரு குழந்தைகிட்ட அப்பா இப்படியெல்லாமா பேசுவாங்க? குழந்தை, மனசுக்குள்ளேயே புழுங்கியிருக்கா. நம்ம பிரச்னை எப்பவும் குழந்தைகளைப் பாதிக்கக் கூடாது. அதை, பெத்தவங்க புரிஞ்சுக்கிறதே இல்லை.

இந்த நிலையில்தான் ஒருநாள் நேரில் நான் போலீஸோடு போனப்போ, `நம்பர் எப்படியோ மிஸ்ஸாகிடுச்சு. இது கம்யூனிகேஷன் கேப்தான்’னு நடிச்சார். நானும் `குழந்தை என்கிட்ட வந்துட்டா போதும், இதுக்குமேல எதுவும் வேண்டாம்'னு சொல்லி கம்ப்ளெயின்ட்டை வாபஸ் வாங்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் அதே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், நான் குழந்தையைக் கடத்திட்டதா கேஸ் கொடுத்திருக்கார். அதுல துளிக்கூட உண்மை இல்லை.”

“உங்கள் வாழ்க்கையில் ராபர்ட் எப்படி வந்தார்... அவர் உங்களுக்கு சப்போர்ட்டிவாக உள்ளாரா?”

“ரெண்டாவது விவாகரத்துக்கு அப்புறம், நான் ரொம்பவே மனசு உடைஞ்சுபோயிருந்தேன். அம்மாவோட மரணம் வேற என்னை பாதிச்சிருந்தது. அதனால நான் மறுபடி நடிக்க ஆரம்பிச்சேன். அப்பதான் ராபர்ட் எனக்கு பழக்கம். அவரை வெச்சு நான் ஒரு படம் எடுத்தேன். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவருக்கு என்னைப் பிடிச்சிருந்தது. ஆனா, `பசங்க வளர்ந்துட்டு வர்றாங்க. அவங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சுடுச்சு. என்னோட முடிவுகள் அவங்களை பாதிக்கக் கூடாது'னு நான் எடுத்துச் சொன்னதை அவரும் புரிஞ்சுக்கிட்டார். ராபர்ட்டுக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு. இப்பவும் நாங்க நல்ல நண்பர்கள். என்னோட அப்பா எனக்கு ஃபுல் சப்போர்ட்.

இப்ப எனக்கு யார்கூடவும் எந்தப் பிரச்னையும் கிடையாது. குழந்தைகள்தான் என் உலகம். அவங்களோட மனநிம்மதி மட்டும்தான் எனக்கு இப்போ முக்கியம்” என்று சொல்லி முடித்தபோது வனிதாவின்  குரல் நெகிழ்ந்திருப்பதை நம்மால் உணர முடிந்தது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close