Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதையை செதுக்கிய காந்தன்!

ஸ்க்ரிப்ட் இல்லாமல் படம் எடுப்பதை மகா தவறாகவே கருதியவர் ஜெயகாந்தன். 'நீங்கள் எப்படி சினிமாவுக்கு?' என்று அவரிடம் யாராவது கேட்டால், வரும் ஒரே பதில் இதுதான்... 'நானாக வலிய வரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம் பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே... நீ சொல்ற மாதிரி நீ ஒரு படம் எடுத்துக் காட்டு என்றார்கள். சரி என்று இறங்கிவிட்டேன்' என்ற பதிலை பல இடங்களில் பதிய வைத்தவர்.

முதல் படத்துக்கு இவர் எழுதிய ஸ்க்ரிப்டைப் பார்த்து பின்வாங்கியவர்கள் பலர். 'குடிப்பது, சிகரெட் புகைப்பதெல்லாம் ஸ்க்ரிப்டில் அவசியமா?' என்றவர்களுக்கு, ஜெயகாந்தனின் பதில்... 'ஒரு படத்தின் ஒவ்வொரு சீனும் ஸ்க்ரிப்டில் இருக்க வேண்டும். செட் இப்படி வேண்டும், எங்கு கேமரா இருக்க வேண்டும் இதெல்லாம் ஸ்க்ரிப்டில் இல்லையெனில், பண விரயமும், பொருள் விரயமும் கண்டிப்பாக ஆகும்' என கதை எழுதுவதற்கே புது பாடம் சொன்னவர் ஜெயகாந்தன். சினிமா பற்றி ஜெயகாந்தனுக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. அவரைப்போல் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா உலகையும் கடுமையாக விமர்சித்த தமிழ் எழுத்தாளர், இதுவரை எவரும் இல்லை என்றும் கூறலாம்.

சினிமா வியாபாரம் அல்ல... பணம் சம்பாதிக்க! அது ரசனையின் குவியல்; கலைகளை ஒருசேர இணைக்கும் இடம் என்பதை நன்கு உணர்ந்த ஜெயகாந்தனின் அரிய படைப்புகளான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ ,’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ’ஊருக்கு நூறு பேர்’,’ உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’, ‘புதுச் செருப்பு’ உள்ளிட்ட கதைகள் படமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் அவர் இயக்கிய படங்கள் ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’ மற்றும் ‘புது செருப்பு கடிக்கும்’. மற்ற மூன்று படங்களான ’சில நேரங்களில் சில மனிதர்கள்’, ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் இரண்டு படங்களையும் பீம்சிங் இயக்கியுள்ளார். ’ஊருக்கு நூறு பேர்’ படத்தை இயக்குநர் லெனின் இயக்கினார்.



"ஜெயகாந்தன் எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களை குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்கு சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம் என எழுத்தாளர் அசோகமித்திரன் ஒருமுறை குறிப்பிட்டார். இப்பேற்பட்ட கதாரசிகன், கதாபாத்திர ரசிகன், ஒவ்வொரு காட்சியையும் ஓவியமாக செதுக்கிய காந்தன் இப்போது நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். எனினும் அவரின் படைப்புகள் இந்த உலகின் கடைசி தமிழ் எழுத்து இருக்கும் வரை ஒயாது.

- ஷாலினி நியூட்டன் -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close