Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷாருக்கானை பாலிவுட் பாட்ஷா ஆக்கிய 10 படங்கள்!

பாலிவுட்டின் “கிங் கான்”,“கிங் ஆஃப் ரொமான்ஸ்” என்று பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரே நபர் ஷாருக்கான். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தோன்றி, தடைக்கற்களை உடைத்தெறிந்து பாலிவுட்டில் தனக்கான தனி இடத்தைப் பதித்தவர் ஷாருக்கான் எனும் சினிமா வித்தகன்.

30 ஃபிலிம்ஃபேர் விருதிற்கு தேர்வாகி, 15 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2002ல் ராஜிவ்காந்தி விருது, 2005ல் பத்ம ஸ்ரீ விருது மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் என்று பல விருதுகளையும் புகழையும் அடுத்தடுத்து பெற்றதன் மூலம் ரசிகர்களைத் தன்பக்கம் இழுத்தார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது.

50வது வயதைத் தொட்டிருக்கும் ஷாருக் இதுவரை 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இத்தனை விருதுகளும், ரசிகர்களும் இவரைத் தேடி வந்ததற்கு முக்கிய காரணம் அவரின் அசுரத்தனமான நடிப்புதான். அவருடைய வெற்றிக்கு முன்னின்று சிவப்புக் கம்பளம் விரித்த 10 படங்களின் லிஸ்ட் இதோ,

சக் தே இந்தியா (2007) : ஷாருக்கை இந்தப் படத்திலிருந்து தான் பிடிக்கும் என்று ரசிகர்கள் சொன்னால் அந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடிக்கும் படம் இதுவே.  இந்தியா ஹாக்கி டீம் கேப்டன் காபிர் கான், உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடிய நேரம்,  அந்த விளையாட்டில் இந்தியா தோற்கிறது. குற்றம் அனைத்தும் காபிர்கான் என்ற ஷாருக்கான் மீது விழுகிறது. ஹாக்கியிலிருந்து வெளியேறும் ஷாருக் ஏழு ஆண்டுகள் கழித்து பெண்கள் ஹாக்கி டீமின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். அரசியல் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தாண்டி இந்தப் பெண்கள் அணி மட்டுமில்லாமல் ஷாருக்கானும் இந்தியாவிற்காக ஜெயிப்பது தான் “சக் தே இந்தியா”. படம் பார்க்கும்போதே தேசஉணர்வில் நரம்புகள் நமக்கு நிச்சயம் தெறிக்கும். இப்படம் தேசிய விருதுடன் சேர்த்து பல விருதுகளையும் அள்ளிக்குவித்தது. ஷாருக்கான் வெற்றியில் கிரீடம் சேர்ந்தது இப்படம் மூலம் தான்.

தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே (1995): ஷாருக்கான் -கஜோல் நடிப்பில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த படம் “தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே”. படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலமானது. மும்பையில் உள்ள ’மராத்தா மந்திர்’ தியேட்டரில் இப்படம் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடியது. சமீபத்தில் திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கடைசிக் காட்சியை 210 பேர் பார்த்திருக்கின்றனர். ஆதித்யா சோப்ராவின் பெஸ்ட் க்ளாசிக் பட வரிசையில் இதுவும் ஒன்று. காதலைப் பிரதிபலிக்கும் அழியாத ஜோடி தான் ஷாருக் - காஜல் என்று இன்றும் பேசுகிறது திரையுலகம்.

தில் தோ பாகல் ஹே (1997): பிரபலமான மற்றுமொரு காதல் கதையே “தில் தோ பாகல் ஹே” யாஸ் சோப்ரா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஷாருக் தன்னுடைய க்யூட் காதல் காட்சிகளில் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்திருப்பார். நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தன் திறமையை நிரூபிக்க உதவிய படம்.  இதுவும் விருதுகளை விட்டு வைக்கவில்லை. மூன்று தேசிய விருது உட்பட எட்டு ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றது.


குச் குச் ஹோத்தா ஹய்(1998): கரண்ஜோகர் அறிமுக இயக்குநராக திரையுலகில் கால் பதித்த முதல் படம். ஷாருக்கான், கஜோல், ராணிமுகர்ஜி மூவரின் முக்கோண காதல் கதையே “குச் குச் ஹோத்தா ஹய்”. கல்லூரி மாணவராக ஷாருக். அவரின் நெருங்கிய தோழி கஜோல், அழகு தேவதையாக வந்திறங்கும் ராணி முகர்ஜி என்ற மூவரின் காதலும், வலியுமே படக் கதைத்தளம். கரண்ஜோகருக்கு மட்டுமல்லாமல் ஷாருக்கின் நடிப்பிற்கும் திருப்புமுனையாக இருந்த படம் இது. இந்தப் படம் எட்டு ஃபிலிம் பேர் விருதுகளை வென்றது. இன்றும் இப்படம் ஹிந்தியின் ஆல் வேஸ் ப்ளாக் பஸ்டர்.

கபி குஷி கபி கம் (2001): கரண்ஜோகர் இயக்கத்தில் ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், கஜோல், கரீனா கபூர், ரித்திக் ரோஷன் என்று நட்சத்திரப் பட்டாளம் இணைந்த குடும்பம் சார்ந்த கதைத்தளம். வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஐந்து ஃபிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியது. அமிதாப் பச்சன் எனும் இமய நடிகருக்கு சமமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி அமிதாப்பிற்கு அடுத்து ஹிந்தியில் ஷாருக்கான் என்ற பெயரைப் பெறுவதற்கு உறுதுணையாக நின்ற படம்தான் கபி குஷி கபி கம். 


தேவதாஸ்(2002): தேவதாஸின் காதல் காவியத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஷாருக்குடன் ஐஸ்வர்யாராய், மாதுரி தீக்‌ஷித் இருவரும் நடித்திருப்பார்கள். காதலி விட்டுச் சென்ற பிரிவில் வாடும் ஷாருக் மதுவும், மாதுவுமாக இரவினைக் கடத்தும் க்ளாசிக் ஓண்டர். விபச்சாரியாக நடித்திருக்கும் மாதுரி அழகில், காதலிலும் விழும் தேவதாஸ், ஆனால் என்றும் இதயத்தில் வடுவாக நிற்கும் ஐஸ்வர்யாராயுடனான காதலை மறக்கமுடியாமல் படும் வேதனை என்று காதலின் புதுப் பரிணாமத்திற்கே இப்படம் நம்மை அழைத்துச் செல்லும். இப்படம் ஆஸ்கார் விருதிற்கான சிறந்த பிறமொழிப் படங்கள் பட்டியலுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. மேலும் ஐந்து தேசிய விருதுகளையும் தட்டியது.

கல் ஹோ நா கோ (2003): கரண்ஜோகர் கதை, திரைக்கதையில் நிகில் அத்வானி இயக்கிய காதலாகி காற்றில் நம்மைக் கரைக்கும் படம்.  ஒரே ஏரியாவில் குடியிருக்கும் ஷாருக் - ப்ரீத்தி ஜிந்தா - சைஃப் அலிகான் மூவரின் முக்கோண காதலே கல்ஹோ நா கோ. ப்ரீத்தி ஜிந்தாவை சைஃப் அலிகான் காதலிக்க, ப்ரீத்தி  ஷாருக்கை காதலிப்பார். ஆனால் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வர ப்ரீத்தி ஜிந்தாவை விட்டு விலகுகிறார் ஷாருக். அதனால் சைஃப் அலிகானுக்கு ஓகே சொல்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. இருவரின் கல்யாணத்தின் போது தான் ஷாருக் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும், ப்ரீத்தியை அதிகம் காதலித்தார் என்பது தெரிந்து வேதனையில் துடிப்பார் ப்ரீத்தி. வலியும், வேதனையும் கலந்த இன்பமே காதல் என்பதைக் கவிதைகளாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படமே கல் ஹோ நா கோ.

வீர் சாரா(2004): வீர் பிரதாப் சிங் என்ற இந்திய விமானிக்கும், சாரா ஹயத் கான் என்ற பாகிஸ்தான் முஸ்லீம் பெண்ணிற்குமான காதலும் , அதைச் சுற்றிய அரசியல் முகமே வீர சாரா. யாஸ் சோப்ரா இயக்கிய அழகியல் கலந்த காதல் கதையே இப்படம். மொழி, மதம், ஜாதிகளைக் கடந்த உண்மைக் காதல் நிச்சயம் இணையும் என்பதைக் கண்களில் நீர் ஊற சொல்லியிருக்கும் இப்படம். தேசிய விருதினையும் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

ஓம் சாந்தி ஓம் (2007): தீபிகா படுகோனே அறிமுகமான முதல் படத்திலேயே சிக்ஸர்களை விளாசித்தள்ளியிருக்கும் படம் தான் ஓம் சாந்தி ஓம். பிரபல நடிகையான தீபிகா படுகோனேவை வில்லன் கொன்று விடுகிறார். அதைத் தடுக்க நினைக்கும் ஷாருக்கும் இறந்துவிடுகிறார். அடுத்த ஜென்மத்தில் ஷாருக் அந்த வில்லனைப் பழிவாங்குவதும், தீபிகாவை மணமுடிப்பதுமே கதைத்தளம். முன் ஜென்மம் சார்ந்த வித்தியாசமான கதைத்தளம், வியாபார ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.

மை நேம் இஸ் கான்(2010): ஷாருக் - கஜோல் ஜோடியில் உருவான ஆறாவது படம் மை நேம் இஸ் கான். கரண்ஜோகர் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். மன இறுக்கம் காரணமாக ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஷாருக்கின் பெயர் கான். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு முஸ்ஸீம் மக்கள் மீது உலக மக்கள் வெறுப்பை அள்ளித்தெளித்த நேரத்தில் ஒரு முஸ்லிமாக உலக மக்களை எதிர்கொள்ளும் ஒருவனின் கதையே மைநேம் இஸ் கான். இந்தியாவைத் தவிர உலக அரங்கில் அதிக வசூல் சாதனை  படைத்த ஷாருக் படம் இதுவே. அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிகருக்கான எட்டாவது ஃபிலிம் பேர் விருதை ஷாருக்கிற்கு சொந்தமாக்கிய படம்.

பி.எஸ்.முத்து

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close