Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் அதியுன்னத படைப்பாளி, சாப்ளினின் நினைவுதினம் இன்று

இந்த உலகையே நகைச்சுவை என்னும் அன்புச் சங்கிலியால் கட்டிப்போட்ட சார்லிசாப்ளினின் குழந்தைப்பருவமும், வாழ்க்கை முழுவதும் வேதனைகளாலும், ஏமாற்றங்களாலும் நிறைந்தது.இது நாம் அறிந்த ஒன்றே. பசியைப் பற்றியும்,வறுமையைப் பற்றியும் எழுதிய ,திரைப்படம் எடுத்த பலர் பசியை,வறுமையை அறியாதவர்கள்.

சாப்ளின் வறுமையோடும்,பசியோடும் வாழ்ந்தவர்,அனாதை விடுதியில் வளர்ந்தவர்.காதல் ஏமாற்றங்களால் நொறுங்கிப் போனவர். குழந்தைகளை தனது படத்தில் அவர்களின் இயல்பை மீறி சித்திரிப்பதை வைத்து பல பணக்கார மேதைகள் அவரைச் சாடியும் இருக்கின்றனர்.இன்னும் சிலர் அவரை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி நிராகரித்தும் இருக்கின்றனர்.ஆனால் சார்லி அதை எல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.தன்னை எப்போதுமே ஒரு மனித உயிர் என்றே அடையாளப்படுத்திக் கொள்பவர்.

தான் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவ உண்மைகளை  திரைப்படம் என்ற வடிவில் மிக எளிமையாக இந்த உலகிற்குத் தந்தவர்.
சாப்ளின் எப்போதுமே மாலை நேரங்களில் ஏழை மக்கள் அதிகமாக வாழும் குடிசைப் பகுதிகளுக்கு நடைபயணம் மேற்கொள்வார். தன்னுடைய சுய சரிதையில் இந்த அனுபவத்தை எழுதும் போது என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.இந்த மக்களின் வாழ்க்கை தான் அசலானது .இவர்களிடம் தான் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, நான் வாழும் இந்த வாழ்க்கை உண்மையிலே போலியானது என்கிறார்.

திரைப்பட உலகின் மாமேதை சார்லி சாப்ளினின் நினைவு தினமான இன்று அவரின் மகத்தான படைப்புகளுள் ஒன்றான சிட்டி லைட்ஸ் திரைப்படத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் சினிமா விகடன்  மிக்க மகிழ்ச்சி அடைகிறது .

சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் உலகெங்கிலும் திரைப்பட வல்லுனர்களால் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டதில் ஆச்சர்யமில்லை. தார்க்கோவஸ்கி, ஸ்டான்லி குப்ரிக் போன்ற மிகப்பெரிய இயக்குனர்களுக்குப் பிடித்த பத்துப் படங்களில் ஒன்றாக இருப்பதில் பெருமையில்லை .. சாதாரணமான மக்களையும் கவர்ந்ததுதான் இதன் பெருமை.... ஏனென்றால் உலகின் தலைசிறந்த படங்களாகத் திரைப்பட வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட படங்கள் பெரும்பாலும் சாதாரண ரசிகனால் புரிந்துகொள்ளக் கூட முடிவதில்லை.ஏன் அந்தப் படங்களை முழுமையாக பார்க்கக் கூட முடிவதில்லை சிட்டி லைட்ஸ் எல்லோருக்குமான அற்புதமான படம் .. இது ஒரு நகைச்சுவையான காதல் திரைப்படம்...  காதலை உணர்வுகளால் சொல்லிய முதல் படம்.... படத்தைப் பற்றி பார்ப்போம்

இந்தப் படத்தில், நாடோடிக்கு பூக்கடை நடத்தும் பார்வையற்ற பெண்ணின் மீது காதல் வருகிறது.. சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடோடி தன் காதலியைப் பிரிய நேரிடுகிறது .. காதலிக்குப் பார்வை கிடைக்கிறது...நாடோடி காதலி இருக்கும் திசையில் எதேச்சையாக வருகிறான் .. நாடோடி தன் காதலியை அடையாளம் கண்டுகொள்கிறான் .. காதலியால் அடையாளம் காணமுடிவதில்லை.. அப்போது தன் இதயம் நொறுங்குவதை ரோஜா இதழ்கள் உதிர்வது போல் காட்சி அமைத்து இருப்பார் சார்லி.

காதலி, நாடோடியை பிச்சைக்காரன் என்று நினைத்து அவன் கையைப் பிடித்து காசு போடுகையில் .. பார்வை இல்லாதபோது முத்தமிட்ட தன் காதலனின் கை என்று உணர்கிறாள். அவனை அடையாளம் கண்டு கொள்கிறாள் . இருவரும் இணைகிறார்கள் .. காதலை வார்த்தைகள் இல்லாமல் உணர்வுகள் மூலம் வெளிப்படுத்திய இக்காட்சி திரைப்பட வரலாற்றில் முக்கியமான இறுதிக் காட்சிகளில் ஒன்றாகும். .

 எப்போதும் நாம் காதலிப்பவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம் .. இப்படத்திலும் காதலி தனக்கு பார்வை கிடைத்த பிறகு தன் கடைக்கு வரும் ஒருவரை தன் காதலனாக இருப்பானோ என்று ஏங்குவாள் .. பார்வை கிடைத்த பிறகு ஒருமுறை கூட தன் காதலனை அவள் சந்திக்கவேயில்லை.  மாமேதை சார்லி சாப்ளினின் நடிப்பு ,முகபாவனை , நகைச்சுவை, எல்லாமே இப்படத்தை,  திரைப்படம் இருக்கும் வரையில் நகைச்சுவை கலந்த காதலை பற்றிய படங்களில் சிறந்த படமாக நிலைக்க வைக்கும்.

இந்தப்படம் வெறும் காதல் திரைப்படம் மட்டும் தானா ? காதலைத் தவிர்த்து வேறு எதுவும் இப்படத்தில் இல்லையா?சார்லி நம்மிடம் எதைப் பகிர்ந்து கொள்ள விழைகிறார் ?இரு வேறு வாழ்கையை நம்முன் நிறுத்துகிறார் .அந்த வாழ்க்கையின் சாட்சியாகவும் சாப்ளினே இருக்கிறார்.

முதல் வாழ்கையைப் பார்ப்போம் . முதல் வாழ்க்கை மிகப்பெரிய பணக்காரனின் வாழ்க்கை .அவன் யார்? அவன் வாழ்க்கை எத்தகையது ? அவனிடம் என்ன இருக்கிறது ? அவனின் தேடல் என்ன ?

சாப்ளினுக்கு மிகப்பெரும் பணக்கார நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பணம் நிறைய இருக்கிறது. ஆனால் நண்பர்களோ, உறவுகளோ யாரும் இல்லை. வெறுமையில் சுழலுகிறான் .வாழ்க்கையிலிருந்து விடுபட தற்கொலை செய்யப் போகிறான். தற்கொலை செய்ய இருந்த நேரத்தில் தான் சாப்ளின் அவனைக் காப்பாற்றுகிறான்.அவர்களுக்கிடையே நட்பின் ஆரம்பமும் அந்த இடம் தான் . பணம் அவனுக்கு மது வாங்கி அருந்த மட்டுமே அதிகம் பயன் தருவதாக இருக்கிறது .பணக்காரனுக்கு இவ்வுலகில் வாழ விருப்பமில்லை.அவனைக் கண்டுகொள்ளவும் நேசிக்கவும் கூட அருகில் யாருமில்லை..இந்த உலகில் இருந்து விடுபட்டு வேறு ஒரு உலகில் சஞ்சரிக்கவே அவன் போதைக்கு அடிமையாகி தினம் தினம் குடித்துக் கொண்டே இருக்கிறான்.அவன் போதையில் மட்டுமே தன் நண்பன் சாப்ளினை அடையாளம் கண்டுகொள்கிறான்.அவன் தெளிவாக இருக்கும் சில மணித்துளிகளில் சாப்ளினை அடையாளம் கூட காண முடிவதில்லை.அந்த நேரங்களில் நண்பன் கூட அவனுக்கு ஒரு அந்நியன் தான் .சாப்ளின் பணக்காரனின் தேடலற்ற அன்பற்ற வெறுமையான ஒரு வாழ்க்கையை நம்முன் காட்டுகிறார். அவனிடம் பணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. போதையில் மட்டுமே அவனுக்கான வாழ்க்கை,நண்பர்கள்,உறவுகள் எஞ்சி நிற்கின்றன.

இன்னொரு அற்புதமான எளிமையான அன்பு நிறைந்த வாழ்கையை பார்வையற்ற பூ விற்கும் பெண்ணின் வழியாக நமக்குக் காட்டுகிறார். அந்தப் பெண்ணிடம் பணம் இல்லை .ஆனால் அவளிடம் அற்புதமான வாழ்க்கை இருக்கிறது .அந்த வாழ்க்கை கடினமாக இருந்தாலும் தேடல் நிறைந்ததாக இருக்கிறது. அடுத்த வேலை உணவிற்காக,வீட்டின் வாடகைக்காக ,பார்வையைச் சரி செய்ய, பாட்டியின் உடல் நலத்திற்காக பணத்தைத் தேட வேண்டியிருக்கிறது .அந்தத் தேடலே அவளிடம் வெறுமையை அண்டவிடாமல் செய்கிறது .அவளின் ஆன்மா பணத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாக நன்றி நிறைந்ததாக இருக்கிறது .அவள் அழகானவள் ,இப்போது அவளுக்குப் பார்வையும் கிடைத்துவிட்டது . அவள் பார்வை இல்லாத போது தனக்கு எல்லாவகையிலும் உதவியாக இருந்த தான் நேசித்த இதயத்திற்கு உரியவனுக்காகவே காத்துக்கிடக்கிறாள்.அவள் அவனைக் கண்ட போது அவனின் நிலை தன்னை விடப் பலமடங்கு மோசமானதாக இருந்தபோதிலும் அவளின் நேசம் மாறவில்லை.ஆனால் பணக்காரன் தன் உயிரை காப்பாற்றிய நண்பனைக் கூட போதையில் இருக்கும் போதுமட்டும் அடையாளம் காணக்கூடிய ஒருவனாக இருக்கிறான். உண்மையிலே யார் வளமானவர் ? ஏழைப் பெண்ணா ? பணக்காரனா ?

சாப்ளின் பணக்காரனின் நண்பனாகவும்,ஏழைப் பெண்ணின் காதலனாகவும் இருந்தாலும் வீதி கூட்டுபவனாக,தூங்க இடமில்லாமல் ,உண்ண உணவில்லாமல் ,எங்கு இடம் கிடைத்தாலும் தங்கிக்கொள்ளும் ஒரு நாடோடியாகத் தான் எப்போதுமே இருக்கிறார்.இந்தப் படத்தில் பணத்திற்காக குத்துச்சண்டை போடுவார். மிகுந்த நகைச்சுவையாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் வேதனை, வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. அந்தச் சண்டையை ஏழைகள் பணத்திற்காக படும் பாடாகத்தான் நான் பார்க்கிறேன். பணக்காரர்கள் அச்சண்டையை ரசித்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு ரசிகனாகவே இருக்கிறான் .

மென்மையான உணர்வுகளினூடாக அழகாக நகர்ந்து செல்லும் காட்சிகளின் வழியாக ,ஆழமான கருத்தாக்கத்தின் பின்புலத்திலிருந்து நம் மனதில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் காதலைச் சொல்லும் இப்படம் நிறைவை நெருங்கும் போது அந்த பிம்பங்களும் ,பின்னணியாக ஒலிக்கும் மெல்லிய இசைத் துணுக்கும் மனதிற்குள் செலுத்தும் பாதிப்பால் இதயத்தின் அடியாழத்தில் இருந்து வெளியேறும் ஆனந்தக் கண்ணீரில் நாடோடியின் உண்மையான நிலையை அறிந்த பிறகும் அவனின் காதலை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்ணின் மீதான உயர்வான அன்பும்,காதலர்கள் இணைந்ததற்கான மகிழ்ச்சியும், நமக்குள் இருக்கும் சில அசுத்தங்களும் கலந்திருக்கும்.

-சக்திவேல்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close