Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பதற்கான ஆறு காரணங்கள்

 


120 ரூபா, 200 ரூபாவெல்லாம் நிச்சயம் அதிகம்தான். பார்க்கிங், பார்ப்கான் விலை அதிகம்தான். குடும்பத்தோடு போனால் 800-லிருந்து ஆயிரம் வரை பழுக்கும். சில தியேட்டர்களின் பராமரிப்பு லட்சணத்திற்கு வாழ்நாளுக்கும் தியேட்டர் பக்கம் போக மனமிருக்காதுதான்.


‘அவர்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள்’, ‘பணம் போட்டு பண்ற தொழில், பாவம்’ என்கிற மாதிரியான ‘லா. லா.. லா..’ டைப் காரணங்களையெல்லாம் தவிர்த்து, தியேட்டருக்குப் போய் படம் பார்க்க ஒரு ஆறு காரணங்களைப் பார்ப்போம். 

# 1 பெரிய திரை பிரம்மாண்டம்
 

ஒரு திரைப்படம் உருவாகும்போதே, பெரிய தெளிவான திரைக்காகவேதான் தயாரிக்கப்படுகிறது. பாகுபலியின் பிரம்மாண்டத்தை, குட்டியூண்டு டிவியில் பார்ப்பதற்கும், பெரிய திரையில் பார்ப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.  3டி படங்கள் நிச்சயம் தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்பதை மறுக்க மாட்டீர்கள். அதைத் தவிர, பல பிரம்மாண்ட படங்களை பெரிய திரையில் பார்த்தால், ஒருவேளை அந்தச் சூழல் தரும் உணர்வே படத்தை பொறுமையாகப் பார்க்க வைக்கும்.
 

# 2 துல்லிய இசை

அநேகமாக நாம் கேட்கும் எல்லாப் பாடல்களுமே, மூல வடிவத்திலிருந்து குறுக்கப்பட்ட (Compressed) வடிவம்தான். நம் அலைபேசியிலோ, பென் டிரைவிலோ வைத்துக் கொள்வதற்காக அளவு குறைக்கப்பட்ட வடிவத்திலேயே பாடலை வைத்திருக்கிறோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது கேட்கும் Bass உட்பட பல அனுபவங்கள் நிச்சயம் மொபைலில், லேப்டாப்பில் ஏன் தொலைக்காட்சியில் பார்த்தாலும் கிடைக்காது. அதுபோலவே, பின்னணி இசையின் தரமும்.
 

# 3 சூழல்
 

நமது நண்பர்களுடன், குடும்பத்துடன் போனாலும் ஒத்த ரசனையுடைய ரசிகர் கூட்டத்துடன் படம் பார்க்கும் அனுபவமே தனி. அத்தனை பேர் கூடியிருக்கும்போது, நம்மைப் போலவே ரசிக்கும் பலரையும் பார்க்கும்போது நமக்கும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. அந்த ஒத்த அதிர்வுக்கு நிச்சயம் ஒரு மதிப்புண்டு. அல்லது, எல்லோரும் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு காட்சி நமக்கு வேறு ஒரு கோணத்தில் தெரிவதன் மூலம் மக்களின் ரசனை மீட்டரை நமக்கு உணர்த்த இந்தச் சூழல் அவசியமாகிறது.  
 

# 4 ஒரு நேரத்தில் ஒரே வேலை

வீட்டில் பார்க்கும்போது எப்போதுமே நாம் ‘மல்ட்டி டாஸ்கிங்’கில்தான் இருப்போம். லேப்டாப்பில் ஓடும்போது, திடீரென்று நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் ஃபேஸ்புக் மேய்வதோ, வெளியில் உலாத்துவதோ நடக்கும். தொலைக்காட்சியில் பார்க்கிறீர்கள் என்றால், எதாவது அழைப்புகளுக்கு பதில் சொல்லிக் கொண்டோ வாட்ஸப் உரையாடலுக்கு எமோஜி அனுப்பிக் கொண்டேதான் பார்ப்போம். அது திரைமொழியை அப்படியே உங்களுக்குள் கடத்த உதவாது.


# 5 படைப்பு வகைக்கான முக்கியத்துவம்

தியேட்டர் முழுவதும் இருட்டு, அமைதி. திரையில் இருள். மெதுவாக ஒரு காலடிச் சத்தம் கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது அதிகரிக்க.. திடீரென்று.. - இந்தக் காட்சியை தியேட்டரில் பார்ப்பதற்கும், வெளிச்சமான அறையில் அமர்ந்து கொண்டோ, நிறுத்தி நிறுத்தியோ பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது! ஒரு படம் என்ன வகையில் (Genre) எடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே உணர்ந்து ரசிக்க தியேட்டர்தான் சிறந்த வழி. 

# 6 முகமூடி தேவையில்லை

நீங்கள் குறிப்பிட்ட ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக / ரசிகையாக இருக்கும்பட்சத்தில் உங்களை மறந்து கைதட்டவோ, விசிலடிக்கவோ தியேட்டரை விட சிறந்த இடம் எது? ஒரு நிறுவனத்தின் அதிகாரி, குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி, பொறுப்பான மகன் என்ற எந்த முகமூடியும் இல்லாமல் ஒரு ரசிகனாக / ரசிகையாக மூழ்கிப் படம் பார்க்க திரையரங்கே சிறந்த இடம்!

 

குடும்பஸ்தர்களுக்கு, இவையெல்லாவற்றையும்விட முக்கியமான காரணம் ஒன்றுண்டு. சொன்னால் அடிக்க வருவீர்கள். இரண்டரை மணிநேரம் உங்கள் பார்ட்னர் வாயை மூடிக் கொண்டிருக்கும் ஒரே இடம் திரையரங்காகத்தான் இருக்கும்! 

சரிதானே?

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close