Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவர் நடிகர் அல்ல.. அதுக்கும் மேல! - ஹேப்பி பர்த்டே சீயான்! #HBDVikram #HBDChiyaan

சினிமா உலகில் தினம் ஒருவர் புதிதாக அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வந்த வேகத்தில் சினிமாவின் உண்மைகளுக்கும், தோல்விகளுக்கும், யதார்த்தங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் காணாமல் போனவர்கள் ஏராளம். ஆனால், சிலர் திரையுலகம் தரும் வலிகளைச் சுமந்து அர்ப்பணிப்போடு நடித்துச் சாதனை படைக்கிறார்கள். அவர்களை இந்தத் திரையுலகம் ’வாடா மகனே.. வா வா!’ என்று தூக்கித் தோளில்வைத்துக் கொண்டாடுகிறது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்கு வருபவர்களில் தவிர்க்கவே முடியாதவர் ‘சீயான்’ விக்ரம். 

கென்னடி ஜான் விக்டர் என்ற விக்ரம் பிறந்தது சென்னையில்.  பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, குதிரையேற்றம், நீச்சல் விளையாட்டுகளையும் கற்றுத் தேர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் தனது தந்தையின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை லயோலா கல்லூரியில் படித்து முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம் தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார்.

ஆவரேஜ் ஓபனிங்.. அடுத்தடுத்து சிக்ஸர்கள்

 


விக்ரமைப் பொறுத்தவரை, ஓவர்நைட் ஸ்டார் அல்ல அவர். நாயகனாக அவரது துவக்கம் ‘ஆஹா ஓஹோ’ என்றெல்லாம் இருக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், 1991ல் வந்த ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் இவரை ஓரளவு அடையாளம் காட்டியது. பிறகு பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் 1992ல் மீரா திரைப்படம். இப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் 1999 ஜனவரியில் வெளியான பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’ படம் வரை பல படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு என்று போய் துணை நடிகர், துண்டு துக்கடா என்றெல்லாம் பாராமல் வெறியோடு நடித்துக்கொண்டே இருந்தார்.

டிசம்பர் 1999 ல்  வெளியானது பாலாவின் 'சேது'. ஊரே பற்றிக் கொண்டாற்போல, ‘யார்யா இந்த மனுஷன்’ என்று கொண்டாடியது. விக்ரமை ஓரளவு தெரிந்திருந்த போதிலும், சேது படம் வெளிவந்தபோதுதான், ‘அட.. ’அமராவதி  ‘அட.. ’அமராவதி படத்தில் இவர் அஜித்க்கு டப்பிங் குரல் கொடுத்தார்.. காதலன்ல பிரபுதேவா குரல் யார்துன்னு நெனைக்கற? விக்ரமுது!’ என்று இவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லி மகிழ்ந்தனர். ’கென்னி’ என்று நண்பர்களால் அழைக்கப்படும் விக்ரம், ரசிகர்களால் 'சீயான்' என்று அழைக்கப்பட்டது சேது படத்தினால்தான். சேது படத்தின் கடைசி காட்சியில் இயலாமை கலந்தபடி நாயகியின் உடலைவிட்டு நீங்கி வெளியே நடக்கும் காட்சியில், ஒரு தேர்ந்த நடிகருக்கான அனைத்துத் திறமைகளையும் வெளிக்காட்டியிருப்பார். அதன்பிறகு தில், காசி, தூள், ஜெமினி, சாமி பட்டதெல்லாம் சிக்ஸர்களாகப் பறந்தது.


"புண்ணியம் தேடி காசிக்குப் போவார்.. இ்ங்கு நம் நாட்டினிலே ..
இந்த காசியைத் தேடி யாரு வருவார் ..
இந்த உலகத்திலே.."

எனக் கண்களை உள்ளே இழுத்துச் சிமிட்டியபடி ஆர்மோனியப் பெட்டியோடு 'காசி'யாகப் பாடும்போது நிஜமாகப் பிறவியிலேயே கண்பார்வையற்றவரைப் போலவே தோன்றும். படத்தின் இயக்குநர் காட்சிகளை விவரித்த பின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துகாட்டுகின்ற ஒரு நடிகனாக மாறினார். 'பிதாமகன்' திரைப்படத்தில் சித்தன் எனும் மனப்பிறழ்வு நோய் ஆட்கொண்ட வெட்டியானாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் வெறும் ஆடை அலங்காரத்தில் மட்டும் காட்டிவிடக்கூடியதல்ல. சாக்குத்துணிகளை உடுத்தி ஒரு மலைக்கிராமத்து வெட்டியானாக சுடுகாட்டில் வசிக்கிற போதும், தன்மீது பிரியம் கொண்டவர்களுக்கு தீங்கெனும்போது எதிரிகளைப் பந்தாடும் காட்சிகள் என அனைத்திலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படு்த்தியிருப்பார். தலையை வெடுக்கென திரும்பி அடுத்தவரைப் பார்க்கும் அந்தக் காட்சி நம்மை அச்சமுறச் செய்யும். தில், தூள், ஜெமினி, சாமி என்று ஆக்ஷன் அவதாரத்திலும் சளைக்காமல் நடித்தார்.

வெர்சடாலிடி விக்ரம்!


விக்ரமைப் பொறுத்தவரை, படம் முழுவதும் நடிக்கிற வேடமென்றாலும் சரி, கந்தசாமி திரைப்படம் போல, சில நிமிடங்களே வரும் பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி.. உழைப்பு நூறு சதம்தான்! 'அந்நியன்' திரைப்படத்தில் 'மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி' யாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராமானுஜம் என்கிற அம்பியாக, சமூக நலனுக்கெதிரானவர்களைப் பழிவாங்கும் அந்நியனாக, நாயகியை விரட்டி விரட்டிக் காதலிக்கிற ரெமோவாக மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிற பாத்திரம். விநாடிகளில், ஒரு கேரக்டரிலிருந்து மற்றொருவராக அநாயசமாக மாற வேண்டும். அதை இவரை விட வேறு யாரேனும் இவ்வளவு சிறப்பாய் செய்திருக்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான்.  'தெய்வத்திருமகள்' திரைப்படத்தில் ஆறு வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியோடு படம் முழுக்க கிருஷ்ணாவாக வருவார். நீ யாரென்று விசாரிக்கும்போது ரொம்பவும் சிரமப்பட்டு பெயர், ஊரைச் சொல்லி "நிலா... நிலா... எனக்கு வேணும்'' என்று தழுதழுத்த குரலில் கெஞ்சும்போது கூடவே அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளும் மழலை பேசும். சிறுவர்களைப் போலவே உடையணிந்து அதைக் கையால் இழுத்து இழுத்து விடுவதும் யதார்த்தம். ஒரு காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன், கட்டிலில் படுத்திருக்கும் விக்ரமின் மீதிருக்கும்  போர்வையை கோபமாக எடுத்து கீழே விரித்து சைகையில் ‘கீழ படு’ என்பார். அதற்கு விக்ரம் கொடுக்கும் ரியாக்‌ஷன் க்ளாஸ். ஐந்து வயதுக் குழந்தை சாராவுடன் பாசத்தைப் பரிமாறும் காட்சிகளில் தானும் சகவயதுக் குழந்தையாகவே மாறியிருப்பார் விக்ரம்.


சக்ஸஸ் சீக்ரெட்

இவரது சக்ஸஸ் சீக்ரெட், இவரது அர்ப்பணிப்புதான். இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்திற்காக உடல் எடையைக் கூட்டியும், பின்பு, கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளால் ஒல்லியாக இளைத்தும் ஆச்சரியப் படுத்தினார். படத்திற்கு என்ன தேவையோ அதைச் சற்றும் யோசிக்காமல் செய்யக்கூடியவர். உடல் இளைக்க வேண்டுமா உடல் எடையைக் கூட்ட வேண்டுமா உடல்நிலையைப் பற்றித் துளியும் கருத்தில் கொள்ளாமல் நூறு சத உழைப்பைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆரம்பம் முதலே செயல்படுத்தி வருபவர்.  க்ராஃபிக்கா இருக்கும் என்ற கேள்விக்கு, ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,  முழுப் பாடல் ஒன்றுக்கு மேடையில் வித்தியாசமான வேடத்தில் வந்து அசத்தி விடையளித்தார்.

'தாண்டவம்' திரைப்படத்தில் கண்பார்வையற்றவராக டேனியல் கிஷ் எனும் அமெரிக்கரிடம் 'எக்கோ லொகேஷன்' என்னும் நுண்ணிய ஒலியை வைத்து எதிரிலிருப்போரைக் கணிக்கும் முறையைப் பயிற்சியெடு்த்து நடித்திருப்பார். இப்படி ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்து, இயக்குநரின் படைப்பாற்றலுக்கு எந்தளவுக்கு உருவம் கொடுக்க முடியுமோ அதைவிடவும் அதிகமாகத் தன் மெனக்கெடலை அசாத்தியமாகச் செய்யக்கூடியவர் இந்த சீயான்!


சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும், தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். இந்திய திரைப்படத் துறையின் ஐந்து ஃபிலிம்ஃபேர் விருதுகள், மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கொடுத்த கௌரவ டாக்டர் பட்டம் எல்லாம் இருந்தாலும், விருதுக்காக வருந்தும் ரகமில்லை இவர். தனது ரசிகர் மன்றத்தின் மூலமாக ஏழைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள், வறுமையால் கல்விகற்க முடியாத குழந்தைகளுக்கு கல்வியளித்தல் போன்ற சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட 'Spirit of chennai' எனும் பெயரில் வெள்ள நிவாரணப் பாடல் ஒன்றை தயாரித்து அவரே இயக்கினார். 2011 ஆம் அண்டு 'UN - HABITAT' அமைப்பு இவரைத் தூதுவராக நியமித்தது. இந்த அமைப்பின் நோக்கம் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குதல், சமூக வேறுபாடுகளை வேரோடு களைதல் மற்றும் சிறப்பான நீர் மேலாண்மை போன்ற திட்டங்களை பரவலாக அனைவரிடமும் கொண்டுசேர்ப்பது என்பது குறி்ப்பிடத்தக்கது.

'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பைப் பாராட்டி தேசிய விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். அதற்கெல்லாம் வருத்தப்படுபவர் அல்ல விக்ரம்.

“யாராவது ஒரு டைரக்டர் உங்ககிட்ட, ‘இந்தப் படத்துல ஒரு காட்சிக்காக நீங்க நெஜமாவே சாகணும்னு சொன்னா, ஓகே சார்.. டப்பிங் முடிச்சுட்டு கடைசியா அந்தக் காட்சிய ஷூட் பண்ணிக்கலாம்’ன்னு சொன்னாலும் சொல்வீங்க விக்ரம்” என்று ஒரு நடிகர் விக்ரமைப் பாராட்டியிருக்கிறார். அக்மார்க் நிஜம்தான் அது. இந்த மனுஷன் சொல்லக்கூடியவர்தான்!

நிச்சயம், கீழே இருக்கிற வசனத்தை, விக்ரமின் மாடுலேஷனிலேயேதான் படிப்பீர்கள்.

அந்நியன் :  உனக்கு தைரியம் இருந்தா
அம்பி :         என்ன சுட்றாதேள்
அந்நியன் :  என்ன சுட்றா
அம்பி :         பெருமாள் சத்தியமா
அந்நியன்:   அந்த அஞ்சு கொலையும்
அம்பி :         நா எந்தத் தப்பும் பண்ணல
அந்நியன் :  பண்ணதே நாந்தான்
அம்பி :         என்ன வெளிய போக விடுங்கோ
அந்நியன் :  அம்பிய வெளிய போக விட்றா

படிக்கும்போதே புல்லரிக்கிறதா? அந்நியன் படத்தின் இந்தக் காட்சியில், பிரகாஷ்ராஜ் விக்ரமின் ட்ரான்ஸ்ஃபார்மேஷன் நடிப்பில் வியந்து "பின்றியேடா! எம்ஜியாரைப் பார்த்திருக்கேன் சிவாஜியப் பார்த்திருக்கேன் ரஜினியப் பார்த்திருக்கேன் கமலைப் பார்த்திருக்கேன் உன்னை மாதிரி ஒரு நடிகனைப் பார்த்ததேல்லியேடா" என்பார்.

அது DCP பிரபாகர், அந்நியனிடம் சொல்வதல்ல. நம் சார்பில் ஷங்கரும், சுஜாதாவும், விக்ரமிடம் சொன்னது!
  

ஹேப்பி ஹேப்பி பர்த்டே டு யூ சீயான்!

-விக்னேஷ் சி செல்வராஜ்

இதப்படிச்சீங்களா?

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close