Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவ ஊர்வலக்காட்சி...துணைநடிகருக்காக நெக்குருகிய இயக்குநர் பாலா!

கலைஞர்கள் எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள்...அந்த உணர்ச்சிவயப்படுதல்தான் ஒருவகையில் அவர்களை கலைஞர்களாக நீடிக்கவைக்கிறது. சமீபத்தில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம், தாரை தப்பட்டை. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாலாவை நெகிழ வைத்த சம்பவம் ஒன்றை, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது முகநுாலில் வெளியிட்டுள்ளார்.

பாலா என்ற கலைஞனின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ள அந்த நிகழ்வை ஜான் மகேந்திரனே விவரிக்கிறார் இங்கே....

"மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு...தஞ்சாவூரில், சுமார் இருபது நாட்கள் இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது...வயதான பெரியவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல்.

இறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறிப் படுத்தால், மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார், மீண்டும் படுத்து மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார். தொடர்ந்து இருபது நாட்கள்,மாலை அணிவிக்கபட்டும், தலை வெள்ளை கயிறால் கட்டப்பட்டும், மூக்கில் பஞ்சு அடைக்கபட்டும், பூக்கள் தூவபட்டும், பட்டாசு வெடிக்கபட்டும், சுற்றி நடந்தவர்கள் அழுதபடி வருவதும், சாவை பற்றிய பாடல் ஒலிக்கபட்டும், கடைசி நாள் நிஜ சுடுகாடு வரை அழைத்து செல்லபட்டார்.

படப்பிடிப்பு நேரத்தில் பாலா சாருக்கு, அந்த நாலு ப்ரேமுக்குள் இருக்கும் பிம்பம் தான் உலகம்.... அதில் இம்மி பிசகக் கூடாது....

படப்பிடிப்பு முடிந்த ஒரு மாலை வேலையில், அவர் அறையில் பேசிகொண்டிருக்கும் பொழுது... பாலா சார், “ ஏன் ஜான்...சும்மா அந்த பாடை வண்டில ஏறி நிக்கறதுக்கே என்னமோ மாதிரி இருக்கு...பாவம் அந்த வயசான மனுஷன் தினமும் மாலையோடு படுத்து கிடக்குறாரே அவர் மனநிலை எப்படி இருக்கும்...சாவு வரும்போது யாருக்கும் தெரியாது...நம்ம பிணத்த வெச்சு என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது, ஆனா இவருக்கு இத்தனை நாள், அவரோட சாவு ஊர்வலத்த காட்டுறோம்...அவர் மைண்ட்ல என்னலாம் ஓடிட்டு இருக்கும்? திரும்பி போகும் போது அவர் என்ன நினச்சிட்டு போவார்... அவர் ஷூட்டிங் முடிஞ்சு போகும் போது மனசு நிறைவா எதாவது செய்யணும் ஜான் “ என்றார்...

படப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும் பொழுது, பாலா சார் அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு தடிமனான கவரை கொடுத்து அனுப்பினார்...நிச்சயமாக அவர் ,எந்த வயதிலும் அவ்வுளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார்.“ வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே “ என்றார் பாலா சார். இதுதான் பாலா சார்..."

ஜான் மகேந்திரனை மட்டுமல்ல; நம்மையும் நெகிழ வைக்கிறது பாலாவின் இந்த மனிதநேயம்...

- எஸ்.கிருபாகரன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close