Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஹா.. சக்திமான் மீண்டும் வருகிறாரா!

90களின் குழந்தைகளுக்குத் தெரியும் சக்திமான் சீரியலின் சக்தி. கேபிள்களில் சன் டிவி முதல் ஸ்டார் டிவிகள் வரை தலைதூக்க ஆரம்பித்த வேளை. புதுமையான சேனல்களின் வருகையாலும் கூட அசைக்க முடியாமல் குழந்தைகளை அடிமையாக்கி வைத்திருந்தது ’சக்திமான்’ சீரியல்.

சூப்பர் ஹீரோ பாணி சீரியலான சக்திமான் சீரியலில் பல முக்கிய அம்சங்களும் இருந்ததை நாம் மறுக்க முடியாது. சக்திமான் கேரக்டரும், அதன் வெளிப்படையான இன்னொரு வெகுளித்தனமான கேரக்டரான பண்டிட் கங்காதர் என இருவேடங்களில் கலக்கிய முகேஷ் கண்ணாவுக்கு ரசிகர்களும் அதிகம். ஒவ்வொரு எபிசோடின் முடிவில் முகேஷ் கண்ணா கொடுக்கும் யோகா ரகசியங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், காதைப் பாதுகாக்க வேண்டும் போன்ற டிப்ஸ்களும் சீரியலின் சிறப்பு அம்சங்கள்.

சக்திமான் உடைகள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் என சக்திமான் சார்ந்த பலவும் சந்தையை கலக்கிக் கொண்டிருந்தது.  இந்நிலையில் சக்தி மான் சீரியல் மீண்டும் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது 57 வயதில் இருக்கும் முகேஷ் கண்ணா கூறியுள்ளதாவது,

“ புதிய தொடரில் சக்திமானின் குழந்தைப் பருவமும் இருக்கும். அதே சமயம் பழைய தொடர் எங்கே நிறுத்தப்பட்டதோ அங்கே இருந்து புது சீரியல் துவங்கப்படும். இதற்காக டிடி சேனலில் மாலை 6 மணி முதல் 6.30 வரை ஒளிபரப்பு செய்ய பேசி வருகிறேன். மேலும் சோனி, கலர்ஸ், சேனல்களிலும் பேசி வருகிறேன். இந்த நிகழ்ச்சி நேர்மையாக ஒளிபரப்பானதாலேயே ஹிட் அடித்தது. அதே ஹிட்டை மீண்டும் கொடுக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சக்திமான் காப்பாற்றுவார் என பல குழந்தைகள் அவ்வேளையில் மாடியிலிருந்து குதித்ததும், விஷப்பரீட்சையில் ஈடுப்பட்டு பரபரப்பானதும் அதற்கு மாற்றாக சக்திமான் எப்படி உருவாகிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் காட்டியதும் என சக்திமான் சீரியலின் ஒவ்வொரு அங்கமும் பலரும் அறிந்ததே. இப்போது மீண்டும் சக்திமான் வருகிறார்.  இப்போதைய குழந்தைகள் மட்டுமின்றி, 90களில் குழந்தைகளாக இருந்த பெரும்பாலானவர்களுக்குத் தான் இதில் ஆதீத ஆர்வம் இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close