Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஹை...நடிச்சா சாக்லெட் கிடைக்குமா?’ - ‘அவந்திகா’ சிவரஞ்சனியின் ஃப்ளாஷ்பேக்

’அய்யோ பாவம்...இந்தப் புள்ளையா அது?’ என்று நினைக்கும் அளவிற்கு நிஜத்தில் ரொம்பப் பாவமாக இருக்கிறார் ‘பிரியமானவள்’ சிவரஞ்சனி. ‘அவந்திகா’ என்னும் அடாவடியான மருமகளாக, அலட்டல் குரல், ஆர்ப்பட்டமான குணம் என்று சீரியலில் வளைய வரும் இவர், நேரில் அப்பாவியாக பேசுகிறார். 

’நான் படிச்சது முழுக்க சென்னைதான். அம்மா ஒரு தனியார் சேனலில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. பி.காம் முடிச்சிருந்த சமயத்தில் ஒருநாள் அம்மாவோட அலுவலகத்துக்குப் போனப்போ, அங்கிருந்தவங்க எல்லாரும் ‘அழகா இருக்க...அளவா பேசற...நீ ஏன் காம்பியரிங் ஃபீல்ட்டில் நுழைய கூடாது?’-ன்னு கேட்டாங்க. இந்த ஐடியா எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததால, ஒரு வருஷம் அதுக்கான கோர்ஸ் படிச்சேன்.

படிச்சு, முடிச்சதும் பிசினஸ் ஆங்கரா கொஞ்ச நாள் ப்ரோகிராம் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நிறைய சேனல்களில் பிசினஸ் காம்பியரரா இருந்தேன். அந்த டைம்லதான் எனக்கு சன் டிவியில் இருந்து, ‘சீரியலில் நடிக்கமுடியுமா?’ன்னு அழைப்பு வந்தது.

உடனே ஓகே சொல்லிட்டேன். சன் டிவியில் என்னோட முதல் சீரியல், திரு பிக்சர்ஸோட ‘தேன் நிலவு’. அடுத்தடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. இதோ இப்போ ‘பிரியமானவள்’ சீரியலில் அவந்திகாவா எல்லாரையும் மிரட்டிக்கிட்டு இருக்கேன்’ என்றவர் ‘இருங்க ஒரு ஷாட் முடிச்சுட்டு வரேன்’ என்று ஓடுகிறார்.

 

ஷாட் முடிந்ததும், ’லேட்டாயிடுச்சா? சாரி’என்று ஓடிவந்தவரிடம், ‘நடிப்பு தவிர என்னவெல்லாம் பிடிக்கும்?’ என்று கேட்டோம். ‘அட...என்னோட ஹாபியே நடிப்புதாங்க. சின்ன வயசில் நிறைய பட வாய்ப்புகள் எல்லாம் வந்தது. ஆனா, அம்மா இப்போ வேண்டாம்னு சொல்லிட்டு நிறைய சாக்லேட், பொம்மைலாம் வாங்கிக் கொடுத்தாங்க. ஹையா...அப்போ நடிப்பு, சினிமான்னு வாய்ப்பு வந்தா நிறைய சாக்லெட் கிடைக்கும்னு ஆக்டிங் மேல இன்ட்ரஸ்ட் வந்துருச்சு’ என்று ஜாலியாகிறார்.

 ’அவந்திகாவா அவ்ளோ பயங்கரமா மிரட்டறீங்க? நிஜத்தில் மேடம் எப்படி?’ என்றதும், ‘அச்சச்சோ...நான் ரொம்ப ஜாலி டைப். அவந்திகா கேரக்டருக்கு அப்படியே நேர்மாறான ஆள் நான். ஷாட் முடிஞ்சதுமே சிரிச்சுட்டே இருப்பேன். வீட்டிலும் அமைதியான பொண்ணு. இப்போ கூடப் பாருங்க... இதோட முடிச்சுகலாம்னு உங்ககிட்ட சொல்லக் கூட பயப்படறேனா பார்த்துக்கோங்க’ என்று கலாய்த்துவிட்டு கலகலவென சிரித்து பேட்டியை முடித்துக் கொண்டார் சிவரஞ்சனி.

-பா.விஜயலட்சுமி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close